இந்தியனுக்கு இந்தியாவின் பெருமைஉணர்த்தியவர் விவேகானந்தர்
இந்தியனுக்கு இந்தியாவின் பெருமையை உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர் என "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ண கான சபா சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா சென்னையில் சனிக்கிழமை (ஏப்.27) கொண்டாடப்பட்டது. இதில் "தினமணி' ஆசிரியர் பேசியது:-
உலகுக்கு இந்தியாவின் பெருமையை முதன்முதலில் எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர் என்று மட்டுமே நாம் கருதி வருகிறோம். அது தவறு. முதன் முதலாக இந்தியர்களுக்கு இந்தியாவின் பெருமையை உணர்த்தியதும் சுவாமி விவேகானந்தர்தான்.
விவேகானந்தரைப் பின்பற்றிய மகாத்மா: சுவாமி விவேகானந்தர் ஒரு துறவியாக, ஆன்மிகவாதியாகத் தடம் பதிக்க முற்பட்டபோது, அவருக்கு இரண்டு முன்னோடிகள் இருந்தனர். ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜம் நிறுவியிருந்தார். சுவாமி தயானந்தாவின் ஆர்ய சமாஜமும் நிறுவப்பட்டிருந்தது. இருவரும் தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு, சமூகத்தில் சில மாற்றங்களைச் செய்துகொண்டிருந்தனர். பிரம்ம சமாஜம், ஆர்ய சமாஜ் இரண்டுமே சில சமயச் சீர்திருத்தங்களையும், சமூகச் சீர்திருத்தங்களையும் முன்வைத்தனவே தவிர, ஒரு தெளிவான முழுமையான ஆன்மிகப் பாதையை அவர்கள் அமைக்க முற்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலகட்டத்தில், சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகப் பயணம் தொடங்கியபோதுதான், தெளிவான பாதை வகுக்கப்பட்டது.
வெறும் வறட்டு வேதாந்தமும், ஆன்மிகமும் பேசவில்லை சுவாமி விவேகானந்தர். பசிக்கும் வயிற்றுக்கு ஆன்மிகமும் இறைவனும் பொருட்டாக இருக்க முடியாது என்று சொன்னார் அவர். முதலில், மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டுத்தான், ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்து செயல்பட்டவர் சுவாமி விவேகானந்தர்.
விவேகானந்தர்தான் காந்தியடிகளின் முன்னோடி. அவரது வழியொற்றி நடந்தவர்தான் காந்திஜி. பெண் விடுதலை, சமூக நீரோட்டத்தில் ஹரிஜனங்களை இணைப்பது, ஆன்மிகம் தழுவிய அரசியல் என்பன உள்ளிட்ட சுவாமி விவேகானந்தரின் அனைத்துக் கருத்துக்களையும் பின்பற்றியவர் காந்தியடிகள் என்றார் வைத்தியநாதன்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி: "இந்து' நடைமுறை என்பது ஒரு மதம் கிடையாது. அது ஒரு கலாசாரம். ஒரு போதும் அது அழியாது என்று கூறியவர் ஆதிசங்கரர்.
இந்தியாவின் இந்த அடிப்படை கலாசாரத்தை வேறோடு சாய்க்கும் வகையில், மேற்கத்திய கல்வி முறை இந்தியாவில் ஊடுருவிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் சுவாமி விவேகானந்தர் தடம் பதித்தார்.
இந்து சமுதாயத்தின் அடிப்படைக் கருத்துக்களையும், அது எப்படி மதசார்பற்ற நடைமுறைகளைக் கொண்டுள்ளது என்பதையும் சமுதாயத்துக்கு எடுத்துக் கூறினார். மனிதனை கடவுளாக மதிக்க வேண்டும் என்று கூறினார்.
இன்று யார் யாரோ மதச் சார்பின்மை பற்றிப் பேசுகிறார்கள். முதன்முதலில் மதச் சார்பின்மை பற்றிப் பேசியவர் சுவாமி விவேகானந்தர்தான். ""பள்ளிவாசலில் தொழுகையில் அமர்வதும் மாதாகோவிலில் சிலுவையின் முன்னால் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்வதும், புத்த விகாரத்தில் பெüத்த மத விதிகளை கடைப்பிடிக்கவும் என்னால் முடியும். ஏன் என்றால் இதையெல்லாம் உள்ளடக்கியதுதான் இறைத் தத்துவம் என்று எனக்கு வாழ்க்கை நெறியை உணர்த்திய இந்துத் தத்துவம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. மத, இன அடையாளங்களை மீறிய சகோதரத்துவ உணர்வுதான் உலகின் தேவை'' என்றார் சுவாமிஜி.
பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் அசம்பாவிதச் சம்பவங்களை, மனிதனை மனிதனாகக் கூட மதிக்காத நிலை இங்கு இருப்பதை உணர்த்துகின்றது. இந்தியாவில் தனி மனித ஒழுக்கம் இருந்தபோதும், சமுதாய ஒழுக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற புதிய விவேகானந்தர், அரசியல் விவேகானந்தர் நமக்கு அவசியம் என்றார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
அசோக் லேலண்ட் துணைத் தலைவர் ஆர். சேஷசாயி: நாட்டில் இப்போது நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு சுவாமி விவேகானந்தர் கூறியதைப் பின்பற்றினாலே தீர்வு கண்டுவிட முடியும்.
இந்தியாவின் எதிர்காலத்தை அப்போதே தீர்மானித்துக் கூறினார். 50 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெறும், சீனா வல்லரசாகும், ரஷ்யாவில் கம்யூனிஸ புரட்சி ஏற்படும் என்று தீர்க்கதரிசனம் கூறியவர் விவேகானந்தர். மேலும், இந்தியாவுக்கும் வெளி நாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்தையும் உணர்த்தினார். அதாவது இந்து மதம் எப்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சிலும், அரசியலிலும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
இந்து மதம், பண்பாடு, அதன் கலாசாரம் இன்றி பொருளாதார வளர்ச்சியையோ, சமூக வளர்ச்சியையோ பெற்றுவிட முடியாது என்று உணர்த்தினார். மகாத்மா காந்தியும் இதே கருத்தைத்தான் தெரிவித்தார்.
ஆனால், இந்த அடிப்படையை இன்றைய சந்ததியினருக்கு கற்றுத்தர தவறி வருகிறோம். பாடங்களுக்கும் மதிப்பெண்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. எனவே, சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண, விவேகானந்தரை பின்பற்றுவோம் என்றார் சேஷசாயி.
விழாவில் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஆர்.சிவாவுக்குசுவாமி விவேகானந்தா விருதை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி சுவாமி ஆத்மஞானந்தா வழங்கினார். முன்னதாக தொழிலதிபர் நல்லி குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.
News of தினமணி /சென்னை
First Published : 28 April 2013 04:14 AM IST
No comments:
Post a Comment