ஒரு லிட்டர் 500 ரூபாய் அடிமாட்டு சிறுநீருக்கு
Source:nagalpoonai.blogspot.in
| |||
கடைசி வரை சக்கையாக பிழிந்துவிட்டு... கடைசியில், 'அடச்சே, அடிமாடு' என்றபடி சத்தமில்லாமல் கசாப்புக் கடைகளுக்குத் தூக்கி வீசப்படுகின்றன பசுமாடுகள். ஆனால், 'இவையெல்லாம் அடிமாடுகள் அல்ல... அத்தனையும் காமதேனு' என்று சத்தம் போட்டுச் சொல்கிறது 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'!
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தேவலபூர். லட்சக்கணக்கில் விவசாயிகளின் தற்கொலை அரங்கேறிய... சபிக்கப்பட்ட பூமியான விதர்பா பகுதியில்தான் இருக்கிறது இந்த தேவலபூர்.
மலை, குன்று... மேடு, பள்ளம்... பொட்டல்வெளி, அடர்ந்தக் காடு என பல பகுதிகளையும் கடந்து செல்கிறது நாம் ஏறி அமர்ந்த பேருந்து. பெரும்பாலும் கருப்பு நிறத்தில் வறண்டு கிடக்கும் மண்ணைப் பார்க்கும்போது மனதில் இனம் புரியாத அச்சம் சூழ்கிறது. ஏதாவது ஒரு இடத்தில், எப்போதாவது கை காட்டி பேருந்தை நிறுத்தும் வெள்ளை குல்லா நபர்களை (தமிழக விவசாயிகளுக்கு துண்டு... மகாராஷ்டிர விவசாயிகளுக்கு வெள்ளை குல்லா) தவிர, பெரிதாக மனித சஞ்சாரத்தைக் காணமுடியவில்லை. ஓரிடத்தில் அடர்ந்தக் காடுகளை தாண்டியதும்... தன் பான்பராக் வாயைத் திறந்து, 'தேவலப்பூர் இறங்கு' என்கிறார் பேருந்து நடத்துநர்! வண்டி நிற்க, ஒற்றை ஆளாக இறங்கி நடக்க ஆரம்பித்தால்... கொஞ்ச தூரத்திலேயே சுமார் முன்னூறு, நானூறு வீடுகளுடன் கண்களில் படர்கிறது தேவலபூர்.
ஊரைக் கடந்து கொஞ்ச தூரம் நடந்தால்... 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா' என்ற பெயர் பலகை அந்திநேரத்து சூரியனின் கதிர்கள் பட்டு பளபளக்கிறது. சிறியதும், பெரியதுமான மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு கேந்திராவுக்குள் திரும்பிக் கொண்டிருக்க... அவற்றுக்கு நடுவே புகுந்து நாமும் உள்ளே நுழைந்தோம்.வி.ஹெச்.பி. எனப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் அமைப்புதான் இந்த 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'. நம்மை வரவேற்ற கேந்திராவின் இயக்குநர் சுனில்மான் சின்ஹா, "இரவு ஆகிவிட்டது. காலையில் எல்லாவற்றையும் பார்க்கலாம். அதற்கு முன்பாக இந்த அமைப்பு மற்றும் எங்களின் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்'' என்று ஆரம்பித்தார்.
அர்க் எனும் அருமருந்து!
"அடிமாடுகளைக் காப்பாற்றி, அவற்றின் வாழ் நாள் வரை பாதுகாப்பதுதான் இந்த கேந்திராவின் நோக்கம். இந்த கேந்திரா தொடங்கப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகின்றன. மாடு என்பது பால் கொடுக்கும், சாணம், மூத்திரம் கொடுக்கும் என்றுதான் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். ஆனால், நமக்கு வேண்டிய அத்தனை செல்வங் களையும் அது கொடுக்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை (மாடு என்றால் தமிழில் 'செல்வம்' என்றொரு பொருள் இருக்கிறது). 22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் ஒரு கோசாலை இருக்கிறது. ஏறத்தாழ 400 மாடுகள் உள்ளன. சாகியவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பலபாகங்களில் காணப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன. 'இனி பால் கறக்காது. இவற்றால் நமக்குப் பயன் இல்லை' என்ற நிலையில் தான் அடிமாடுகள் என்று முத்திரை குத்தி, இறைச் சிக்காக மாடுகள் விற்கப்படுகின்றன. அப்படிப் பட்ட மாடுகளைத்தான் மீட்டு பராமரிக்கிறோம்.
அந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம் போன்றவற்றையும்... அடிமாடு களாக ஒதுக்கப்பட்ட பிறகும், வந்த இடத்தி லிருக்கும் காளைகளோடு இணைந்ததால் கன்று ஈனும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள், வேளாண் பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என்று என 36 விதமான பொருட்களை தயாரிக் கிறோம். இவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.
'அர்க்' என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந்தாக எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது, அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 'அர்க்', சர்க்கரை நோய் தொடங்கி புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்து கிறது. எங்களுடைய மருந்துப் பொருட் களுக்கு 'இந்தியன் மெடிக்கல் கவுன்சில்' சான்று வழங்கியுள்ளது. உரிய வகையில், அதற்குரிய உபகரணங்களுடன் 20 லிட்டர் மாட்டு சிறுநீரை காய்ச்சினால், கிட்டத் தட்ட 13 லிட்டர் அர்க் கிடைக்கும். ஒரு லிட்டர் அர்க் 160 ரூபாய் என்று இங்கே விற்பனை செய்கிறோம். ஆனால், வெளியில் அதன் விலை 500 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. எங்களுடையது சேவை அமைப்பு என்பதால் குறைந்த விலைக்கே கொடுக்கிறோம்.
மாடுகளின் சிறுநீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக்கொல்லி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது" என்று சொல்லி நிறுத்தினார்.
கலகல கோ பூஜை!
அப்போது, கேந்திராவில் அமைந்திருக்கும் கிருஷ்ணன் கோயிலில் மணியலித்து. மொத்த பணியாளர்களும் சூழ்ந்து நிற்க... அங்கே கோ பூஜை ஆரம்பமானது. "தினமும் இரவு ஏழு மணிக்கு இப்பூஜை நடக்கும். இதன் மூலம் இயல்பாகவே மாடுகளின் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக, இங்குள்ள பணியாளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாடுகளை குச்சியால் அடிக்கவோ, அதட்டவோ மாட்டார்கள்" என்று சொன்ன சுனில்மான் சின்ஹா, "சரி காலையில் பேசுவோம். நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்'' என்று நம்மை அனுப்பி வைத்தார்.
சிறுநீர் பிடிப்பது எப்படி?
மறுநாள் காலை சரியாக நான்கு மணி. கேந்திராவின் பணியாளர்கள் சிலர் வந்து நம்மை தட்டியெழுப்பி, அழைத்துச் சென்றனர், அங்கே தயாராக இருந்தார்... கேந்திராவின்
ஆயுர்வேத மருத்துவர் ஜெய்பிரகாஷ் திரிபாதி. மாடுகளிடமிருந்து சிறுநீரைப் பிடிக்கும் வேலை அந்த நேரத்தில் நடந்தது. கையில் பாத்திரங்களுடன் நின்ற பணியாளர்கள் சிலர், மாடுகளின் சிறுநீர் உறுப்பைத் தொட்டதுமே... சடசடவென சிறுநீர் வெளியேற ஆரம்பிக்க... சொட்டுகூட கீழே விழாமல் அத்தனையையும் பாத்திரத்தில் பிடித்துக் கொண்டனர்.
"மாட்டின் சிறுநீரை எளிதாக நாங்கள் சேகரிக்கிறோம். பழக்கத்தின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. காலை நான்கு மணிக்கும், இரவு ஒன்பது மணிக்கும் தினசரி சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் மாட்டின் சிறுநீர் உறுப்பில் கை வைத்ததும் சிறுநீர் கழித்துவிடுகிறது. உலோகம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் அதைச் சேகரித்துவிடுவோம். ஒரு மாடு சிறுநீர் கழிக்கத் தொடங் கியவுடன் பக்கத்தில் உள்ள மாடுகள் அடுத்தடுத்து கழிக்கத் தொடங்கிவிடும். சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சேகரித்துவிடுவோம்" என்று விளக்கம் கொடுத்தார் திரிபாதி.
பயிற்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்!
பொழுது புலர்ந்துவிட, அந்த 22 ஏக்கர் பரப்புக்குள் இருக்கும் முக்கியமான இடங்களை வலம் வந்தோம். மருத்துவப் பொருட்கள், வேளாண் இடுபொருட்கள் போன்றவை மும்முரமாகத் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்க... மறுபடியும் நம்மிடம் பேசிய சுனில்மான் சின்ஹா, "இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், இந்தியக் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் போன்றவை எங்களுடைய பணி மற்றும் தயாரிப் புகளை அங்கீகரித்துள்ளன. முழுக்க சேவை அடிப் படையில் இயங்கும் இந்த மையத்தில் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்புக் குறித்த பயிற்சியும் கொடுத்து வருகிறோம். நாட்டின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகளும், சுய உதவிக்குழு பெண்கள், தொழில்முனைவோர் என்று பலரும் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சிக் கொடுக்க தயாராக உள்ளோம். பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க விரும்புகிறார்களா... அல்லது அர்க் போன்ற மருந்து பொருட்கள் தயாரிக்க விரும்புகிறார் களா என்பதைப் பொறுத்து பயிற்சியின் கால அளவு நிர்ணயிக்கப்படும். உணவு செலவுக்காக மட்டும் சிறிய தொகையினைக் கட்டணமாக செலுத்தினால் போதும்" என்று சொன்னார் சுனில்மான் சின்ஹா.
தமிழகத்திலிருந்து லாரி லாரியாக கேரளத்து கசாப்புக் கடைகளுக்கு தினசரி அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான 'காமதேனு'க்களுக்காக கண்ணீர் வடித்தபடியே அங்கிருந்து புறப்பட்டோம்!
தொடர்புக்கு: Govigyan Anusandhan Kendra, Kamadhenu Bhavan, Ghtae wada (Near bachharaj vyas chowk), Chitar oil, Mahal, Nagpur-32 .phone: 0712-2772273,2734182. Cell: 94221-01324
சுரபி பாதுகாப்பு இல்லத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் பட்டியல்!
1. குளியல் சோப்பு, 2. ஷாம்பு, 3.பற்பொடி, 4. மூட்டுவலி தைலம், 5. அர்க், 6. விபூதி, 7. தூபம் (சுற்றுசூழல் தூய்மைக்கு), 8. உபாடன் (முகப்பரு, வெண்புள்ளி நீக்குவதற்கு), 9. கன்வடி (நோய் எதிர்ப்பு மற்றும் சர்க்கரை நோய்க்கு), 10. பஞ்சகவ்ய க்ருத் (மூளைக்கோளாறுக்கு), 11. க்ருத் (பக்க வாதத்துக்கு), 12. ஸ்வீத்ரநாசக் வடி (வெண்படைக்கு உண்ணும் மருந்து), 13. ஸ்வீத்ரநாசக் லேப் (வெண்படை மீது பூசும் மருந்து) 14. எக்சிமா சோப் (தோல் வியாதிகளுக்கு), 15. ஹர்தே சூரணம் (அஜீரணம், வாயு தொந்தரவுக்கு), 16. பால் பால் ரஷ் (குழந்தைகளுக்கு பலம் ஊட்ட), 17. சிர்தர்த் நாசக் (ஒற்றைத் தலைவலிக்கு) போன்றவை தயாரிக்கப்படுகின்றன.இதுதவிர... மண்புழு உரம், பயிர்களில் பூச்சியை விரட்டும் கரைசல் (கீட் நியந்தரக்), குறைந்த சாணத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் ஊட்டமேற்றிய தொழுவுரம் ('நாடேப் கம்போஸ்ட்) ஆகியவையும் தயாராகிறது. இங்கே தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. |
இப்படித்தான் தயாரிக்க வேண்டும் அர்க்!
மகாராஷ்டிராவின் 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'வில் பயிற்சி பெற்று, தமிழகத்தில் 'அர்க்' உள்ளிட்ட மருந்துப் பொருட்களைத் தயாரித்து வருகிறது 'சுரபி பசு பாதுகாப்பு இல்லம்'. சேலம், தெற்குஅம்மாபேட்டை பகுதியில் உள்ள நாம மலை அடிவரத்தில் 'ஸ்ரீராஜராஜேஸ்வரி மகிளா சமாஜம்' சார்பில் இந்த இல்லம் இயங்கி வருகிறது.சமாஜத்தைச் சேர்ந்த சுவாமி ஆத்மானந்தாவைச் சந்தித்தபோது, "இங்கே 142 பசுக்கள் உள்ளன. அவற்றிலிருந்து கிடைக்கும் பால், சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி... குளியல் சோப்பு, பற்பொடி, ஷாம்பு என பல வகையானப் பொருட்களை 2000-ம் ஆண்டிலிருந்து தயாரித்து வருகிறோம். இவற்றில் 'அர்க்' மிகமுக்கி யமானது. 'அர்க்' என்றால், ஒரு பொருளில் இருந்து தூய்மைப் படுத்தப்பட்ட பொருள் என்று அர்த்தம். 50 மிலி, 25 ரூபாய் வீதம் விற்பனை செய்கிறோம். 1 லிட்டர் 500 ரூபாய். நாக்பூர் கேந்திராவில் மிகநுணுக்கமான சாதனங்களையும் பலவிதமான தொழில் நுட்பங் களையும் பயன்படுத்தி அர்க் தயாரிக்கிறார்கள். அதனால், 20 லிட்டர் சிறுநீரில் 13 லிட்டர் அர்க் கிடைக்கிறது. இதன் காரணமாக குறைவான விலைக்குக் கொடுக் கிறார்கள். கேன்சர் முதல் சர்க்கரை நோய் வரை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது, இந்த அர்க். நல்ல உடல் நலம் உள்ளவர்கள் இதைக் குடித்தால் உடலில் உள்ள திசுக் களின் வேலையை வேகப்படுத்தும். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும். ஆயுர்வேத மற்றும் சித்த மருந்து விற்கும் கடைக்காரர்களிடம், இதற்கு தேவை இருக்கிறது.
ஒரு லிட்டர் சிறுநீர் 5 ரூபாய்!
பசு மூலமாகக் கிடைக்கும் மருந்துப் பொருட்களுக்கு மட்டுமில்லை. அதன் சிறுநீருக்குக் கூட தேவை அதிகமாக உள்ளது. கர்நாடகாவில் உள்ள ஒரு அமைப்பு, நாட்டுப் பசுவின் சிறுநீரை லிட்டர் 5 ரூபாய் என்று விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறது. அதிலிருந்து அர்க் போன்ற பொருட்களைத் தயாரித்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.பாலுக்காக வளர்த்த காலம் போய்... சாணம், சிறுநீர் என மற்றப் பொருட்களுக்காக வளர்க்கும் காலம் துவங்கியிருக்கிறது. கிராமங்களில் வேலை இல்லை என்று சொல்லி ஊர் ஊராக வேலை தேடி அலைவதைக் காட்டிலும்... உள்ளூரில் உட்கார்ந்து கொண்டு, பசுமாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி பலவிதமான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யலாம். நாட்டுப் பசுமாடு ஒன்றின் விலை கிட்டத்தட்ட 7 ஆயிரம் ரூபாய். 5 மாடுகள் 35 ஆயிரம் ரூபாய். மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் உபகரணங்கள் வாங்க 10 ஆயிரம் ரூபாய். மாட்டுக் கொட்டகை மற்றும் மாடு மேய்த்தல் போன்றவற்றுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய். ஆக மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் மாதம் 10 ஆயிரம் உறுதியாக லாபம் கிடைக்கும்" என்று அழுத்தமாகக் குறிப்பிட்ட ஆத்மானந்தா, "ஆண்டுக்கு ஒரு முறை வெளி இடங்களில் இதற்கான பயிற்சியைக் கொடுத்து வருகிறோம். அதிகமான நபர்களுக்கு பயிற்சி தேவை என்றால்... எங்கள் இடத்திலேயே கூட பயிற்சி அளிக்கிறோம். இதற்காகக் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை" என்றார். தொடர்புக்கு: சுரபி பசு பாதுகாப்பு இல்லம், ஸ்ரீ குருதேவ் குருகுலம், ஸ்ரீநகரம், தெற்குஅம்மாப்பேட்டை, சேலம்- 636 014. அலைபேசி:94432-29061. |
அருமையான தகவல்கள் !
ReplyDelete