பலிவாங்கும் "கசப்பு
விதைகள்'
மிஷா.எக்ஸ். பிலட் என்பவர் அண்மையில் தயாரித்து வெளியிட்டுள்ள ஒரு ஆவண
சினிமாப்படம் ""பிட்டர் சீட்ஸ்''. அதாவது கசப்பு விதைகள். விதர்பா
பிராந்தியத்தில் பருத்தி விவசாயிகளின் தற்கொலை பற்றிய ஆவணப்படமாகும்.
பிலட் அமெரிக்காவில் வாழும் இஸ்ரேலிய படத் தயாரிப்பாளர். ஏற்கெனவே, சில்லறை
வணிகத்தில் வால்மார்ட் மூன்றாம் உலக நாடுகளுக்கு வந்தால் ஏற்படும் விபரீதங்களை
மனதில்கொண்டு ""ஸ்டோர்வார்: வென் வால்மார்ட் கம்ஸ் டு டவுன்'' என்ற
படத்தையும் சீனாவில் உடை தயாரிப்பை மையமிட்டு, ""சைனா புளூ'' என்ற
படத்தையும் வெளியிட்டார்; அதே கையோடு இந்தியா வந்து விதர்பா பிராந்தியத்தில்
மாதக்கணக்கில் தங்கி ஆயிரக்கணக்கான பருத்தி விவசாயிகளை - குறிப்பாகத் தற்கொலை
செய்து கொண்ட விவசாயக் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசி அரிய தகவல்களைத்
திரட்டினார்; பின்னர் படமெடுத்து வெளியிட்ட பின்னரும் விழிப்புணர்வுப் பிரசாரமாக,
"பி.டி.' பருத்தி விதையைக் கைவிட வேண்டும் என்ற நோக்கில் மறுபடியும் விதர்பா
வந்து கிராமங்களில் மேற்படி ஆவணப்படத்தைப் போட்டுக் காட்டி வருகிறார்.
இவர் ஏராளமாக சினிமாப் படம் எடுத்திருந்தாலும் இவருடைய லட்சியம்
உலகமயமாதலினால் சுரண்டப்படும் நாடுகளில் உள்ள மக்கள் துயரத்தை வெளிப்படுத்தி
விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
ஜனவரி மாதம் மீண்டும் இவர் இந்தியாவுக்கு வந்தபோது பல பத்திரிகையாளர்கள்
இவரைச் சந்தித்துப் பேசினர். ""கசப்பு விதை'' என்ற தலைப்புக்குப்
பதிலாகப் ""பிணம் தின்னும் பி.டி. விதைகள்'' என்று மாற்றியிருக்கலாம்
என்ற அளவில் ஆவேசம் கொண்டார்.
பிலட் திரட்டியுள்ள தகவல்களின் அடிப்படையில், விதர்பா என்றால் "உலகப்
பருத்தி விவசாயிகளின் தற்கொலைத் தலைநகரம்' என்றே சொல்லத் தோன்றுகிறது.
பல நூற்றாண்டுகளாக உலகத்திலேயே பருத்தி உற்பத்திக்கு மிகவும் பிரசித்தமாக
விளங்கிய விதர்பா விவசாயிகள் வசதியுடன் வாழ்ந்த பாரம்பரியம் உள்ளவர்கள், ஆனால்
கடந்த 15 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதற்கு முதன்மையான காரணம் வறட்சியில் விளையக்கூடிய "தேசி' பருத்தி
(உள்நாட்டுப் பருத்தி) சாகுபடியைக் கைவிட்டு "பி.டி.' பருத்தி சாகுபடி
செய்ததுவே என்கிறார்.
""பி.டி. பருத்தி பயிரிட்டால் காய்ப்புழு தாக்காது;
பூச்சித்தொல்லை இருக்காது'' என்று பி.டி. விதை ஏகபோக நிறுவனமாகிய
"மான்சென்டோ' கூறுவதெல்லாம் பொய் என்று நிரூபித்துள்ளார்.
பி.டி. விதை விலை மிக அதிகம். பி.டி. பருத்தி சாகுபடி செய்யும்போது கூடுதல்
தண்ணீர் வேண்டும். ஏனெனில் பி.டி. பருத்திச் சாகுபடி, ரசாயன உரத்தை நம்பியுள்ளது.
ரசாயன உரம் வேலை செய்யத் தண்ணீர் அதிகம் வேண்டும். ஆகவே ஆழ்துளைக் கிணறுகள் அதிகப்
பணச் செலவில் தோண்டப்படுகிறது. ஆகவே மிகவும் செலவு மிகுந்த முதலீடு
தேவைப்படுகிறது.
இந்தச் செலவுக்கு விதர்பா விவசாயிகள் கடன் வாங்குகிறார்கள். பருத்தி
விளைந்தால் புடவையாகக் காய்ப்பதில்லை. விளைந்த பருத்திக்கு விலை இல்லாமல் நஷ்டம்.
வறட்சி வந்தால் விளையாமல் நஷ்டம். வாங்கிய கடனைத் திருப்ப முடியாமல் தற்கொலைகள்
நீடிக்கின்றன.
விதர்பாவின் தட்பவெப்பத்திற்கு பருத்தி உகந்த பயிர் என்றாலும் சுமார் 10
சதவீத விவசாயிகள் மட்டுமே ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி பி.டி. பருத்திக்குத் தேவையான
தண்ணீரை ஓரளவு பெறலாம். இந்த 10 சதவீதத்தில் 5 சதவீத விவசாயிகள் நிலை பரவாயில்லை.
சுத்தமாகப் பாசன வசதியில்லாதவர்கள் 90 சதவீத விவசாயிகள். இவர்களுக்கு பி.டி.
பருத்தி உகந்தது இல்லை. மழை பெய்தால் வாழ்வு. மழை பொய்த்துவிட்டால் சாவு.
வறட்சிக்கு உகந்த "தேசி' ரக பருத்தி விதைகளே அழிந்துவிட்டன என்பது
கசப்பான உண்மை. விதர்பா விவசாயிகள் "தேசி' ரகப் பருத்தியை சாகுபடி செய்வதற்குத்
தயாராக உள்ளனர். போதிய விதைகள் இல்லை. இருப்பினும் விதர்பாவில் சில இயற்கை
விவசாயிகள் இருக்கும் விதைகொண்டு "தேசி' ரக விதைகளைப் பயன்படுத்தி சற்று
லாபமும் பெறுகின்றனர்.
விதர்பா விவசாயிகளிடமிருந்து பெற்ற புள்ளிவிவரங்களிலிருந்து அறியப்பட்ட
உண்மை எதுவெனில் 1 ஏக்கர் பி.டி. பருத்திச் சாகுபடிக்கு ஏற்படும் செலவு ரூ.
27,000-லிருந்து 33,600 ஆகும். இதில் விதை விலை மட்டும் ரூ. 2,400 ஆகும். அதேசமயம்
1 ஏக்கர் "தேசி' பருத்தி இயற்கை வழியில் ஏற்படும் சாகுபடிச் செலவு சராசரியாக
ரூ. 10,000 மட்டுமே. விதைச்செலவு ரூ. 350-தான். நிகர லாப - நஷ்டம் பி.டி. என்றால்
ரூ. 13,000 லாபமும் வரலாம். 10,000 நஷ்டமும் வரலாம். அதிக அளவில் நஷ்டமும் குறைந்த
அளவில் லாபமும் உண்டு.
"தேசி' பருத்தியில் அதிக அளவில் 12,000 லாபமும் பெறலாம், குறைந்த
அளவில் 3,000 நஷ்டமும் பெறலாம். நஷ்டம் குறைந்த அளவும் லாபம் அதிக அளவிலும் உண்டு.
அதிக அளவில் நஷ்டம் தற்கொலைக்குக் காரணமாகிறது. விலை உள்ளபோது விளைச்சல்
இருக்காது. விளைச்சல் உள்ளபோது விலை இருக்காது. வாழ்வு தரவேண்டிய பி.டி. பருத்தி
விதை விதர்பா விவசாயிகளின் வாழ்வையே பறித்துவிடுவதைச் சித்திரிக்கும் "கசப்பு
விதை' ஆவணப்படம் விதர்பாவின் கண்ணீர்க்கதை.
பிலட் நிகழ்த்திய ஆய்வுப்படி, விதர்பா விவசாயிகளின் தற்கொலைக்குத் தலையான
காரணம் பி.டி. பருத்தி விதைகளின் அறிமுகம் என்றும், உலகமயமாதலின் ஓர் அம்சமாக
இந்தியாவில் பி.டி. பருத்தி விதை வியாபாரம் செய்யும் மான்சென்டோ அமெரிக்க நிறுவனத்தையே
குற்றவாளியாக மேற்படி "கசப்பு விதைகள்' அல்லது "பிணம் தின்னும் பி.டி.
விதைகள்' என்ற ஆவணப்படம் சித்திரித்துள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் விதர்பா பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து
கொள்ளக் காரணமான பி.டி. பருத்தி விதையை அரசு ஏன் ஊக்குவிக்கிறது என்று புரியவில்லை
என்று கேட்கும் பிலட்டுக்கு நாம் என்ன பதில் கூறுவது?
இந்தியாவின் விவசாய அமைச்சரே விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் என்பது எவ்வளவு
முரணான நகைச்சுவை? அதுமட்டுமல்ல. கடந்த ஆண்டு மான்சென்டோவுடன் இணைந்து பி.டி.
பிக்கனீர் பருத்தி மரண விதையைக் கண்டுபிடித்த இந்திய விவசாய அறிவியல் கழக
விஞ்ஞானியும் இயக்குநருமான பி.ஏ. குமாருக்கு விவசாய அமைச்சர் சரத் பவார்
"சர்தார் படேல்' விருது வழங்கியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் மட்டுமல்ல. மத்தியப் பிரதேசத்திலும், ஆந்திரப்
பிரதேசத்திலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் பி.டி. பருத்தி விவசாயிகள் தற்கொலை
செய்து கொள்கின்றனர். அதேசமயம் மான்சென்டோ உறவை விவசாய அமைச்சர் விரும்புவதைக்
கவனித்தால், ""ரோமாபுரி பற்றி எரியும்போது ரோம சாம்ராஜ்ஜிய மாமன்னன்
நீரோ பிடில் வாசித்தார்'' என்று ""ரோம சாம்ராஜ்ஜியச் சீரழிவு'' என்ற
வரலாற்று நூல் எழுதிய எட்வர்ட் கிப்பன் நினைவுக்கு வருகிறார்.
மரண பயமுள்ள பி.டி. விதைக்குச் சரியான மாற்று "தேசி' ரகப் பாரம்பரிய
விதைகளே. ஆனால், விதைகளை எங்கே தேடுவது? பி.டி. அறிமுகமான நோக்கமே "தேசி'யை
அழிப்பதுதானே. தேனீக்களும் கழுகுகளும் நினைவுக்கு வருகிறது. தேனீக்களின் எதிரி
கழுகுகள். தேன் கூட்டைக் கலைப்பது கழுகுகளே. மற்ற எந்தப் பறவையும் தேன்கூட்டை
நெருங்குவதில்லை. கழுகுகளின் விருப்ப உணவு தேனுடன் தேன் குஞ்சுகள். தேன் கூடு
என்பது தேன் மட்டுமல்ல. தேனீக்களின் இனப்பெருக்கமும் தேன் கூடுகளில் நிகழ்கிறது.
ஒரு காலத்தில் இந்தியாவில் உள்ள எல்லாப் பருத்தி விவசாயிகளும் நாட்டு ரகப்
பருத்தி விதைத்தபோது புடவையாகக் காய்த்தது உண்மைதான். நல்ல லாபம் கிட்டியது.
"தேசி' விதை விதைத்துத் தேன்கூடு கட்டிச் சுகமாக வாழ்ந்து வந்தனர்.
மான்சென்டோவும் விவசாய அமைச்சரும் கழுகுகளாக அவதாரமெடுத்தனர். மான்சென்டோ கழுகு
தேனீக்குஞ்சுகளாக இருந்த "தேசி' விதைகளைத் தின்றது. விவசாய அமைச்சர் தேனைக்
குடித்துவிட்டார். அது தேனல்ல. மரணமுற்ற பருத்தி விவசாயிகளின் ரத்தமே. கீழே
விழுந்துவிட்ட சில தேன் கூடுகளில் குற்றுயிரும் கொலை உயிருமாயுள்ள சில தேன்
குஞ்சுகளைச் சில இயற்கை விவசாயிகள் காப்பாற்றியதால் "தேசி' விதைகள் சற்று
மிஞ்சியுள்ளன. பறந்துவிட்ட தேனீக்களை, மீண்டும் ஒற்றுமைப்படுத்த அனைத்துலகிலும்
இயற்கைப் பருத்திக்குத் தேவை பெருகி வருவதால் இயற்கைப் பருத்தி விவசாய அமைப்புகள்
முயலுகின்றன. ஏனெனில் பிணம் தின்னும் பி.டி. பருத்திக்கு மாற்று வாழ்வுதரும்
"தேசி' விதைகள் என்பது நிரூபணம். ஒருபக்கம் பி.டி. பருத்தி விதைக்கு அரசு
ஆதரவு தருகிறது. மறுபக்கம் இயற்கை விவசாயிகள் அமைப்புகள் தங்கள் சொந்த முயற்சியால்
ஏற்றுமதி நோக்கில் இயற்கைப் பருத்தி சாகுபடிக்குரிய "தேசி' விதைகளுக்கு ஆதரவு
தருகின்றன. "தேசி' பருத்திக்கு அரசு ஆதரவு இல்லை.
உலக இயற்கை விவசாயப் பருத்தி உற்பத்தி 2009-10-இல் 2,41,697 டன்கள். இதில்
70 சதவீதம் இந்தியப் பங்களிப்பு. மீதி துருக்கியின் வழங்கல். சீனாவில் இயற்கைப்
பருத்தி சுத்தமாக இல்லை.
1990-களில் இயற்கைப் பருத்தி விவசாயம் செய்த விதர்பா விவசாயிகளில் பாஸ்கர்
சாவே, ஆனந்தராவ் சுபேதார் ராய்சாஹேப் தகாட்கர், குஜராத்தில் காந்திலால் படேல்,
தாரா மித்ரா, சேத்னா விகாஸ் பங்கேற்பால் 1995-இல் விதர்பா இயற்கைப் பருத்தி
விவசாயக் கூட்டுறவு அமைப்பு ஏற்றுமதியில் களமிறங்கியது.
ஆந்திரத்தில் எம்.எஸ். சாரி என்று ஏராளமான பெயர்களின் பங்கேற்புகள்
குறைவானது அல்ல. எனினும் மத்தியப் பிரதேசத்தில் கடந்த நூற்றாண்டில் ஹாவார்ட்
தொடங்கிய மையப் பருத்திக் குழுவின் வளர்ச்சி காரணமாக, 1.33 லட்சம் ஏக்கரில்
இயற்கைப் பருத்தி சாகுபடி தொடர்கிறது. சுமார் 60,000 டன் உற்பத்தி. 85,106 இயற்கை
விவசாயிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளனராம்.
இரண்டாவதாக விதர்பா அடங்கும் மகாராஷ்டிரத்தில் சுமார் 45,000, ஒடிசாவில்
30,000, ராஜஸ்தானில் 8,000, ஆந்திரத்தில் 12,000 இயற்கை விவசாயிகள் உள்ளனர்.
இந்தியாவிலிருந்து இயற்கைப் பருத்தி ஏற்றுமதியிலும், உள்நாட்டு வணிகத்
தேவைக்கும் பருத்தி வழங்குகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் "தேசி' பருத்தி சாகுபடி செய்யும் திலோக்
சாந்த் பூரியா என்ற விவசாயி, "தேசி' பருத்தி மானாவாரியில்கூட இருமுறை
பூக்கும் என்றும் இரண்டு அறுவடை செய்யலாம் என்றும் பி.டி. பருத்தி ஒருமுறைதான்
பூக்கும். ஒரு அறுவடைதான் செய்யலாம் என்பதுடன், தனக்கு "தேசி' பருத்தியே
லாபமாயுள்ளது என்கிறார். விதர்பா விவசாயிகளுக்கு "தேசி' விதைகளின் வழங்கல்
போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மெல்ல மெல்ல எதிர்காலத்தில், பிணம்
தின்னும் பி.டி. விதைகள் அழிந்து வாழ்வு தரும் "தேசி' விதைகள் பன்மடங்கு
பெருக வாழ்த்துவோம். வாழ்க பாரதம்.
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.- ஆர்.எஸ். நாராயணன்
First Published in தினமணி on 26 March 2013
நன்றி:தினமணி
No comments:
Post a Comment