பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும் ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது.
மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை கிருஷ்ணன் தூங்கிகொண்டு இருந்தான். கண்ணனின் மேல் பாசம் கொண்டவள் போல நடித்து, குழந்தைக்கு தாய்பால் கொடுத்தாள்.
அவளின் நோக்கம் பாசம் அல்ல. அது கொடுமையான திட்டம். அது என்னவென்றால், அரக்கியின் தாய்பாலை குழந்தை குடித்தால், அவள் உள்ளத்தில் இருக்கும் விஷம், அவள் உடல் முழுவதும் இருந்த காரணத்தால், தாய்பாலின் மூலமாக அவ்விஷங்கள் குழந்தையான கண்ணனின் ரத்தத்தில் பரவி, கண்ணனி்ன் இரத்தத்தை அட்டைபூச்சியை போல உறிஞ்சி எடுத்துவிடும் என்று நினைத்தாள் அந்த அரக்கி.
நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். ஆனால் அந்த அரக்கியோ ஒரு தெய்வத்தையே மடியில் வைத்துக்கொண்டு கொடுமை செய்ய நினைத்தாள். தெய்வ குழந்தையான கண்ணனும் அவள் உயிரை எடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தான். அவளாக வந்து மாட்டினாள். பாலுடன் அரக்கியின் உயிரையும் உறிஞ்சினான் கண்ணன். செத்து தொலைந்தாள்.
அவள் உயிர் பிரிந்த போது பெரும் அலறலுடன் பூமியில் விழுந்தாள். மிக பயங்கரமான அந்த குரலை கேட்ட ஊர் மக்களும், தாய் யசோதையும் ஒடிவந்து பார்த்தபோது, அரக்கி ஒருத்தி மாமிச மலை போல் இறந்து கிடப்பதை பார்த்தார்கள். என்ன நடந்தது என்பதையும் புரிந்துக் கொண்டார்கள். ஒரு கொடூரமான அரக்கியை தன் குழந்தை கண்ணன் வீழ்த்தினான் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், ஒரு உயிரை கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாக கண்ணனை பிடித்துக்கொள்ளக் கூடாதே என்று அஞ்சினாள் தாய் யசோதை.
உடனே அதற்கான தோஷ நிவர்த்திக்காக பசுவின் வாலில் கண்ணனை சுற்றி, அவன் தலையில் கோமியத்தை தெளித்து தோஷத்தை போக்கினாள் யசோதை. இது, ஸ்ரீவி்ஷ்ணு புராணத்தில் இருக்கிற தகவல்.
ஆகவே, இறைவனாக இருந்தாலும் இறைவனுக்கே தோஷம் பிடிக்காமல் இருக்க சிறந்த பரிகாரம் பசுதான் என்கிறது சாஸ்திரங்களும் – புராணங்களும்.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள்
பூமாதேவியே கோமாதாவாக அவதாரம் எடுத்தாள் என்கிறது புராணம். தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து தோன்றியது பசு. கோமாதா என்று போற்றப்படும் அந்த பசுவின் உடலில் தேவர்களும், முனிவர்களும், இறைவனும், இறைவியும் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்கள்.
அதனால் முனிவர்கள், தேவர்கள், இறைவனும் பசுவின் உடலில் குடி வந்தார்கள். அப்படியே முப்பத்து முக்கோடி தேவர்கள்களும்பசுவின் உடலில் குடிவந்து விட்டார்கள்.
கடைசியாக வந்த கங்கையும் – லஷ்மியும், தங்களுக்கு இடம் இல்லாததால் வருந்தினார்கள். இதை கண்ட கோமாதா, “அகில உலகத்தையே பூமாதேவியாக இருந்து சுமக்கும் நான், உங்களை சுமக்க மாட்டேனா?” என்று கூறி தன் பின் பகுதியில் இடம் தந்தாள். இதனால் பின்பாகத்தில் கங்கையும், ஸ்ரீலஷ்மி தேவியும் அமர்ந்ததால், பசுவின் சாணத்தில் ஸ்ரீலஷ்மியும், கோமியத்தில் கங்கையும் இருப்பதாக ஜதீகம்.
தோஷத்தை போக்கும் கோமாதா
கோயிலுக்கு நல்லவர்கள் – கெட்டவர்கள் என்று பல பேர் வருவதால் அவர்களுடைய தோஷம் அந்த கோயிலுக்குள் நிலைத்துவிடாமல் இருக்க அந்த காலத்திலிருந்து இந்த காலம்வரையிலும் சில கோயில்களில், காலையில் பசுவுக்கு கோபூஜை செய்வதுடன், அந்த கோயிலை சுற்றி அந்த பசுவை வலம் வர வைப்பார்கள்.
கங்கை எப்படி புனிதம் வாய்ந்ததோ அதுபோல், எண்ணற்ற மடங்கு புனிதம் வாய்ந்தது பசுவின் சாணம். பசு சாணத்தை கரைத்து வீட்டின் வாசலில் தெளித்தால் கிருமி நாசினியாகும். பசுவின் சாணத்தால் தயாரிக்கப்படும் திருநீறின் மகிமை அற்புதமானது. திருநீறை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் கண் திருஷ்டி பாதிப்பு, விரோதிகளால் எற்படும் தொல்லை, நோய்கள் போன்றவை நீங்கும். துஷ்டசக்திகளும் அண்டாது.
கோமியத்தை வீட்டிற்குள் தேளித்தால், வீட்டில் இருக்கும் தோஷங்கள் விலகியோடும். கங்கையின் அருளாசி கிடைக்கும். ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்வாள்.
கோ பூஜை
வருடத்திற்கு ஒருமுறையாவது நம் வீட்டிற்கு பசுவை அழைத்து வந்து, அதற்கு மஞ்சள் – குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து, அந்த பசுமாடு வயிறு நிறைய சாப்பிட பழங்கள், அகத்திகீரை போன்றவற்றைகொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும். பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வ – குல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிக்ஷம் பெருகும்.
யாகம் - ஹோமம்
வீட்டில் யாகம் – ஹோமம் போன்ற தெய்வ வழிபாடுகளை செய்யும் போது, யாகத்தில் (அ) ஹோமத்தில் பசு வரட்டியை போட்டால் இன்னும் அந்த யாகத்திற்கும் ஹோமத்திற்கும் சக்தி கூடும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். யாகம் – ஹோமம் போன்றவை நிறைவு பெற்றதும் அந்த சாம்பலை ஒரு வெள்ளை துணியில் கட்டி வீட்டின் தலைவாசலில் மாட்டினால் அந்த வீட்டுக்குள் எந்த தோஷமும் நுழையாது. ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
இப்படி எண்ணற்ற சக்தி வாய்ந்த பசுவை வணங்கி, முப்பத்து முக்கோடி தேவர்களின்ஆசியை பரிபூரணமாக பெற்று, தலைமுறை தலைமுறைக்கும் வளமோடும் – நலமோடும் வாழ்வாங்கு வாழ்வோம். ’கோமாதா நம் குலத்தை காக்கும் குலமாதா’. ஆகவே கோமாதாவான பசுக்களை நன்றாக பராமரித்து – பாதுகாத்து வணங்கினால் நிச்சயம் அனைவருக்கும் சுபிக்ஷத்தை அள்ளி அள்ளி தருவாள் கோமாதா.!
நன்றி: நிரஞ்சனா
சிறப்பான பகிர்வு ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDelete