Thursday, March 14, 2013

மாயை-தெய்வத்தின் குரல்


தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
அத்வைதம்
மாயை
எல்லாம் மாயை, சத்தியமாக எதுவும் இல்லை. என்று பௌத்தம் சொல்கிற மாதிரி அத்வைதம் சொல்லவில்லை. பிரபஞ்சமேல்லாம் மாயைதான். ஆனால் இதற்கு, ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது என்கிறது அத்வைதம்.
உலகத்தை மாயை என்று சொல்கிறீர்களே, இந்த உலகத்தில் இத்தனை காரியங்கள் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும்போது இதை எப்படி மாயை என்று சொல்லலாம் என்று கேட்கிறீர்கள்.
மாயை என்றால் அடியோடு இல்லாத வஸ்து என்று நினைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறார்கள். ஆனால் மாயை என்பது அடியோடு இல்லாத வஸ்து (அத்யந்த அஸத்) அல்ல. முயல் கொம்பு அல்லது மலடி மகன் என்று சொன்னால் உடனே அது அட்யோடு இல்லத வஸ்து என்று தள்ளி விடுகிறோம். மாயை அப்படி இல்லை. அது இருப்பதாக நினைக்கிற மட்டில் இருப்பதாகவே தோன்றும். அது முயல் கொம்பு மாதிரி இல்லை. கானல் நீர் மாதிரி கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதில் ஜலம் இல்லை. அதைக் குடித்து நாம் தாக சாந்தி செய்து கொள்ள முடியாது. கானல் நீர் தெரியத்தான் செய்கிறது. அவ்விதமே உலகை மாயம் என உணர்த்த ஞானிகளுக்குக் கூட லோகம் தெரியத்தான் செய்கிறது என்று சொல்வதுண்டு. ஆனால் அது நிரந்தர சத்தியமல்ல என்று அவர்கள் அறிவார்கள்.
ஒரு பழுதையைப் பாம்பென்று தவறாக எண்ணுகிறோம். பழுதையில் பாம்பு இல்லை என்பது உண்மை. இருந்தாலும்கூட அதைப் பாம்பாக எண்ணியமட்டும், வாஸ்தவத்தில் இல்லாத பாம்பே நிஜமான பாம்பு உண்டாக்குகிற அத்தனை பயத்தையும், பதற்றத்தையும் நம்மிடம் உண்டாக்கி விடுகிறது. பாம்பு மெய்யாக இல்லாத போதிலும் நமக்கு வேர்த்து விறுவிறுத்தும், நாம் பயப்பிராந்தி அடைந்ததும் உண்மையே. உலகம் உண்மையில் நிரந்தர சத்தியமாக இல்லாதபோதிலும் அதையே நாம் சத்தியமாக எண்ணுகிற மட்டில் இவ்விதமே சகல காரியங்களும் நடக்கின்றன. பழுதையைப் பழுதை என்று தெரிந்து கொண்டவுடன் பயம் ஒடிப்போவதுபோல், உலகமும் பிரம்மத்தைச் சார்ந்த ஒரு தோற்றமே. அதற்கும் ஆதார பிரம்மம் ஒன்றே நிரந்தர உண்மை என்று அறிகிறபோது, காரியங்கள் எல்லாம் நின்றுபோகின்றன.
அடியோடு இல்லாத வஸ்துவல்ல உலகம். ஞானம் வருகிற வரையில் உள்ள தோற்றம் அது. கனவு காண்கிற வரையில் கனவு மெய்யாக இருந்து, நாம் விழித்துக் கொண்டபின் கனவு நசிங்கிப்போவது போல், அஞ்ஞானத்தில் தூங்கிக் கொண்டிருந்த வரையில் உலகம் மெய்யாக இருந்து, நாம் ஞான நிலையில் விழித்துக் கொண்டபின் மறைந்து போகிறது. இவ்வாறு, அப்பட்டப் பொய்யாக இல்லாமல், தோன்றி மறைகிற தாற்காலிக உண்மையாக உள்ள உலகத்தை அத்யந்த அஸ்த் என்று சொல்லாமல், பிராதி பாஸிக ஸத்தியம் என்பார்கள். கிளிஞ்சலில் வெயில் வெள்ளி மாதிரி மினுமினுப்பதுபோல் பிரம்மத்தில் மாயையால் உலகம் தாற்காலிகமாக மினுமினுக்குகிறது.
மாயை என்பது ஞானிக்குப் பூஜியம் (Zoro) தான் ஆனால் ஞானம் வராத நிலையில் உள்ள ஜீவன் தன்னை ஒரு தனி எண்ணாக வைத்துக்கொண்டு பக்கத்தில் இந்தப் பூஜ்ஜியத்தைச் சேர்த்துக் கொள்கிறான். ஒர் இலக்கத்துக்குப் பக்கத்தில் வருகிற பூஜ்யம் அதாப் பாத்து, இருபது, நூறு, ஆயிரம் என்று ஆக்குவதுபோல் இந்த அஞ்ஞானிகளுக்கு மாயையே பலவாக விரித்து சத்திய வஸ்துக்களாக உலகமாக தோன்றுகிறது.
ஞானியே உள்ளது உள்ள படி பார்க்கிறான்.ஒரே சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்திருக்கிறதுபோல் ஒரே பிரம்மம் இத்தனையையும் ஆகியிருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால், விஷயம் தெரியாத குழந்தை அது கசக்கும் என்று ஒடிப்போயிருக்கும். கசப்பு வஸ்துவாகத் தோன்றுகின்ற அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான். உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே என்று ஞானி அறிவான். நமக்குக் கசப்பு அவனுக்கு இனிப்பு நமக்குக் கருப்பு அவனுக்கு வெளுப்பு. நமக்குப் பகல் அவனுக்கு இருட்டு என்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். பிரம்மம் என்கிற வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது. இருட்டான மாயைத்தான் நமக்கு வெளிச்சமாக தெரிகிறது. இதெப்படி முடியும் என்று கேட்கலாம். மாயையும் பிரம்மையைச் சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. இந்தக் குறைந்த ஒளிதான் நம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது. சுமாரான வெளிச்சத்தில்தான் புஸ்தகத்தின் கறுப்பு எழுத்துக்கள் தெரியும். ஜொலிக்கிற சூரிய வெளிச்சத்தில் நேரே புஸ்தகத்தைப் பிரித்தால் எழுத்தே தெரியாது. நமக்கு மாயையின் அற்பப் பிரகாசத்தில் உலக காரியங்கள் தெரிகின்றன. ஞானியின் ஆத்ம பிரகாசத்தில் அவை மறைந்து போகின்றன. ஞானியின் பகல் நமக்கு இரவு என்பதன் அர்த்தம் இதுவே.

Source :kamakoti.org

No comments:

Post a Comment