Saturday, April 27, 2013

இந்தியனுக்கு இந்தியாவின் பெருமைஉணர்த்தியவர் விவேகானந்தர்


இந்தியனுக்கு இந்தியாவின் பெருமைஉணர்த்தியவர் விவேகானந்தர்

இந்தியனுக்கு இந்தியாவின் பெருமையை உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர் என "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ண கான சபா சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா சென்னையில் சனிக்கிழமை (ஏப்.27) கொண்டாடப்பட்டது. இதில் "தினமணி' ஆசிரியர் பேசியது:-
உலகுக்கு இந்தியாவின் பெருமையை முதன்முதலில் எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர் என்று மட்டுமே நாம் கருதி வருகிறோம். அது தவறு. முதன் முதலாக இந்தியர்களுக்கு இந்தியாவின் பெருமையை உணர்த்தியதும் சுவாமி விவேகானந்தர்தான்.
விவேகானந்தரைப் பின்பற்றிய மகாத்மா: சுவாமி விவேகானந்தர் ஒரு துறவியாக, ஆன்மிகவாதியாகத் தடம் பதிக்க முற்பட்டபோது, அவருக்கு இரண்டு முன்னோடிகள் இருந்தனர். ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜம் நிறுவியிருந்தார். சுவாமி தயானந்தாவின் ஆர்ய சமாஜமும் நிறுவப்பட்டிருந்தது. இருவரும் தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு, சமூகத்தில் சில மாற்றங்களைச் செய்துகொண்டிருந்தனர். பிரம்ம சமாஜம், ஆர்ய சமாஜ் இரண்டுமே சில சமயச் சீர்திருத்தங்களையும், சமூகச் சீர்திருத்தங்களையும் முன்வைத்தனவே தவிர, ஒரு தெளிவான முழுமையான ஆன்மிகப் பாதையை அவர்கள் அமைக்க முற்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலகட்டத்தில், சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகப் பயணம் தொடங்கியபோதுதான், தெளிவான பாதை வகுக்கப்பட்டது.
வெறும் வறட்டு வேதாந்தமும், ஆன்மிகமும் பேசவில்லை சுவாமி விவேகானந்தர். பசிக்கும் வயிற்றுக்கு ஆன்மிகமும் இறைவனும் பொருட்டாக இருக்க முடியாது என்று சொன்னார் அவர். முதலில், மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டுத்தான், ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்து செயல்பட்டவர் சுவாமி விவேகானந்தர்.
விவேகானந்தர்தான் காந்தியடிகளின் முன்னோடி. அவரது வழியொற்றி நடந்தவர்தான் காந்திஜி. பெண் விடுதலை, சமூக நீரோட்டத்தில் ஹரிஜனங்களை இணைப்பது, ஆன்மிகம் தழுவிய அரசியல் என்பன உள்ளிட்ட சுவாமி விவேகானந்தரின் அனைத்துக் கருத்துக்களையும் பின்பற்றியவர் காந்தியடிகள் என்றார் வைத்தியநாதன்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி: "இந்து' நடைமுறை என்பது ஒரு மதம் கிடையாது. அது ஒரு கலாசாரம். ஒரு போதும் அது அழியாது என்று கூறியவர் ஆதிசங்கரர்.
இந்தியாவின் இந்த அடிப்படை கலாசாரத்தை வேறோடு சாய்க்கும் வகையில், மேற்கத்திய கல்வி முறை இந்தியாவில் ஊடுருவிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் சுவாமி விவேகானந்தர் தடம் பதித்தார்.
இந்து சமுதாயத்தின் அடிப்படைக் கருத்துக்களையும், அது எப்படி மதசார்பற்ற நடைமுறைகளைக் கொண்டுள்ளது என்பதையும் சமுதாயத்துக்கு எடுத்துக் கூறினார். மனிதனை கடவுளாக மதிக்க வேண்டும் என்று கூறினார்.
இன்று யார் யாரோ மதச் சார்பின்மை பற்றிப் பேசுகிறார்கள். முதன்முதலில் மதச் சார்பின்மை பற்றிப் பேசியவர் சுவாமி விவேகானந்தர்தான். ""பள்ளிவாசலில் தொழுகையில் அமர்வதும் மாதாகோவிலில் சிலுவையின் முன்னால் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்வதும், புத்த விகாரத்தில் பெüத்த மத விதிகளை கடைப்பிடிக்கவும் என்னால் முடியும். ஏன் என்றால் இதையெல்லாம் உள்ளடக்கியதுதான் இறைத் தத்துவம் என்று எனக்கு வாழ்க்கை நெறியை உணர்த்திய இந்துத் தத்துவம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. மத, இன அடையாளங்களை மீறிய சகோதரத்துவ உணர்வுதான் உலகின் தேவை'' என்றார் சுவாமிஜி.
பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் அசம்பாவிதச் சம்பவங்களை, மனிதனை மனிதனாகக் கூட மதிக்காத நிலை இங்கு இருப்பதை உணர்த்துகின்றது. இந்தியாவில் தனி மனித ஒழுக்கம் இருந்தபோதும், சமுதாய ஒழுக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற புதிய விவேகானந்தர், அரசியல் விவேகானந்தர் நமக்கு அவசியம் என்றார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
அசோக் லேலண்ட் துணைத் தலைவர் ஆர். சேஷசாயி: நாட்டில் இப்போது நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு சுவாமி விவேகானந்தர் கூறியதைப் பின்பற்றினாலே தீர்வு கண்டுவிட முடியும்.
இந்தியாவின் எதிர்காலத்தை அப்போதே தீர்மானித்துக் கூறினார். 50 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெறும், சீனா வல்லரசாகும், ரஷ்யாவில் கம்யூனிஸ புரட்சி ஏற்படும் என்று தீர்க்கதரிசனம் கூறியவர் விவேகானந்தர். மேலும், இந்தியாவுக்கும் வெளி நாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்தையும் உணர்த்தினார். அதாவது இந்து மதம் எப்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சிலும், அரசியலிலும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
இந்து மதம், பண்பாடு, அதன் கலாசாரம் இன்றி பொருளாதார வளர்ச்சியையோ, சமூக வளர்ச்சியையோ பெற்றுவிட முடியாது என்று உணர்த்தினார். மகாத்மா காந்தியும் இதே கருத்தைத்தான் தெரிவித்தார்.
ஆனால், இந்த அடிப்படையை இன்றைய சந்ததியினருக்கு கற்றுத்தர தவறி வருகிறோம். பாடங்களுக்கும் மதிப்பெண்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. எனவே, சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண, விவேகானந்தரை பின்பற்றுவோம் என்றார் சேஷசாயி.
விழாவில் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஆர்.சிவாவுக்குசுவாமி விவேகானந்தா விருதை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி சுவாமி ஆத்மஞானந்தா வழங்கினார். முன்னதாக தொழிலதிபர் நல்லி குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.
News of தினமணி /சென்னை
First Published : 28 April 2013 04:14 AM IST

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 17/2013)


Posted: 21 Apr 2013 03:00 PM PDT
ஸ்ரீ சாயிசத் சரித்திராவை கவனமாகவும், தொடர்ந்து இடைவிடாதும் படியுங்கள். எல்லா விடைகளும் உங்களுக்கு கிடைக்கும். எல்லா ஆன்மீகப் புத்தகங்களும், குருக்களின் வாழ்க்கை வரலாறுகளும் அடிப்படையில் உண்மையான வாழ்க்கை பாதை பற்றியே கூறுகின்றன.
Posted: 22 Apr 2013 03:00 PM PDT
சாயி-யின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து, தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்பிக்கிறானோ, அவன் வாழ்கையின் நான்கு முக்கிய குறிக்கோளாகிய அறம் (தருமம்), பொருள் (செல்வம்), இன்பம் (ஆசை), வீடு (முக்தி) இவைகளை எளிதில் அடைகிறான்- ஷிர்டி சாய்பாபா (சாயி சத்ச்சரித்ரா 6 )
Posted: 23 Apr 2013 03:00 PM PDT
வெளிப்புறமாக நீங்கள் செய்யும் ஆராதனை, உங்களுக்குள் இருக்கும் என்னை அடைகிறது. அப்போது நான் சக்தி உடையவனாகி உங்களை காப்பாற்றுகிறேன். - ஷிர்டி சாய்பாபா
Posted: 24 Apr 2013 03:00 PM PDT
நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன்- ஷிர்டி சாய்பாபா.
Posted: 26 Apr 2013 03:00 PM PDT
பி.லகாதே, பி.., எல்.எல்.பி.
(ஸப் ஜட்ஜாக இருந்தவர், வயது 70, பூனா) ஜூலை 20, 1936.

1913
அல்லது 1914-ம் ஆண்டு வாக்கில் நான் சாயிபாபாவிடம் சென்றேன். நான் ஒரு இக்கட்டில் இருந்தேன்; அதிலிருந்து விடுதலை பெற ஆசிகளை நாடி நான் அவரிடம் சென்றேன். நான் அவரை அணுகிய போது, அவர் என்னிடம் தக்ஷிணை கேட்டார்; நான் கொடுத்தேன். அவராகவே "வேம்பை விதை; பின்னர் மரத்தை வெட்டிவிடு"* என என்னிடம் கூறினார். அவருடைய இந்தப் பேச்சு எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் அவரிடம் வேண்டிச் சென்ற ஆசிர்வாதம் அல்ல அது. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.

*
குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்சம் வாங்கியதாக அவர் மீது ஒரு ஊழல் வழக்கு தொடரப்பட்டு, அவர் குற்றவாளி எனக் கருதப்பட்டு கடும் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டிலும் இது ஊர்ஜிதமாயிற்று. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது தான் இவர் (லகாதே) தாம் வெற்றிபெற ஆசிகோரி பாபாவை அண்டினார். வேம்பு விதைப்பதும், வேம்பு அறுவடை செய்வதும் கர்மாவின் நியதி பற்றிய பாபாவின் உபமானக் கதை. கசப்பானதை விதைத்தால், கிடைப்பது அதே ரகமாக, கசப்பாகத் தான் இருக்கும். ஆதலால், ஒருவன் தான் செய்த பாவச் செயலுக்கு உண்டான தண்டனை முழுவதும் அனுபவித்து கர்மவினையைப் போக்கிக் கொண்டு, இதை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் பயனடைவதே சிறந்தது. - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்- பூஜ்ய நரசிம்ம சுவாமிஜி.         
அன்புத் தந்தை நான்
Posted: 27 Apr 2013 03:00 PM PDT
என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும் எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான்.

நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.













Friday, April 26, 2013

பூமி வெப்பமயமாவதால் நமக்கென்ன என்று நினைக்க வேண்டாம்.


பூமி வெப்பமயமாவதால் நமக்கென்ன என்று நினைக்க வேண்டாம். பூமி வெப்பமயமாவதால், நாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல எதிர்விளைவுகளை சந்தித்து வருகிறோம்.
பூமி வெப்பமயமாவதால் தட்பவெப்ப நிலை உயருகிறது. இதனால், வரலாறு காணாத வெயில், வெயில் சதம் அடித்தது  என்ற செய்திகளை வாசித்து வருகிறோம். மழையின் பருவம் மாறி, ஓரிடத்தில் அதிகப்படியான மழை அல்லது வறட்சி போன்ற நிலை காணப்படுகிறது.
மறைமுகமாக பனிப்பாறைகள் உருகுவதால், கடல் மட்டம் உயர்ந்து, நிலப்பரப்பு குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இவற்றில் இருந்து பூமியைக் காக்க தனி மனிதனாக நாம் என்ன செய்ய முடியும் என்று எண்ணாமல், நாமும் எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு சில குறிப்புகள்...
நாம் பயன்படுத்தும் வாகனத்தை சரியாக பரிமரித்து, அதிக புகையை வெளியிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பிளாஸ்டிக் பை,  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி எறியாமல், மறு சுழற்சிக்கு பயன்படுத்தலாம்.
வீட்டிலோ, பக்கத்தில் இடம் இருந்தாலோ, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கலாம்.
நாம் வாங்கிப் போட்டுள்ள இடங்களில் தற்போதைக்கு குடியேற முடியாமல் இருந்தாலும், அவற்றில், ஒரு சில மரங்களையாவது நட்டுவிட்டு வரலாம்.
வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றலாம். குண்டு பல்புகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கலாம்.
தேவையற்ற மின் சாதன பயன்பாட்டை தடுக்கலாம். ஒரு யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது, 2 யூனிட் மின்சார உற்பத்திக்கு சமம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வெப்பமயமாதலால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும். எனவே, தேவைக்கு அதிகமாக தண்ணீர் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கியிருந்தால் எவ்வாறு உபயோகிப்போமோ அப்படி உபயோகித்தால் நாட்டுக்கு நல்லது.
கணினிகளைப் பயன்படுத்தும் போது, 10 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால், தானாகவே மானிட்டர்கள் ஆப் ஆகும் வகையில் செய்து விடுங்கள்.
அனைவரும் வீட்டில் ஒரு சைக்கிளை வாங்கி வைத்துக் கொண்டு அவசரத்துக்கும், தனியாக கடைக்கும் செல்ல வேண்டும் போது சைக்கிளைப் பயன்படுத்தினால், உடலுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.
ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரு மரத்தை வெட்ட வேண்டி இருந்தால், அதற்கு பதிலாக குறைந்த்து 5 மரக்கன்றுகளையாவது நட்டு வையுங்கள்.
சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தைத் தயாரித்து இயங்கும் கருவிகளை வாங்கி பயன்படுத்துங்கள்.
First Published : 24 April 2013 05:53 PM IST


புனித நூல்


புனித நூல்


சீனர்களின் கைவேலைப்பாடு மிக்க அந்த பேழையில் பட்டு துணி சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது அந்த புத்தகம். இன்று வரை யாரும் அதை திறந்து பார்த்ததில்லை.

குரு மட்டுமே அதை கையில் சில நேரம் வைத்திருந்து நான் பார்த்திருக்கிறேன். நான் அவரின் பிரதான சிஷ்யன் என்பதால் எனக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது.  இங்கே இருக்கும் பலருக்கு இதுவும் கிடைத்ததில்லை.

குரு பிறருக்கு காட்டாமல் பொத்தி வைத்திருக்கும் அந்த புனித நூலில் இருக்கும் தேவ ரகசியம் என்ன என தெரிந்துகொள்ள ஆவல் பிறந்தது.

எத்தனை நாள் தான் அதற்கு பூஜைகள் மட்டும் செய்து கொண்டிருப்பது? நானும் அதை படித்து ஆன்மீகத்தில் உயர வேண்டாமா? இந்த வேட்கை என்னை பல்வேறு வகையில்` தூண்டியது.

அன்று இரவு அப்புத்தகத்தை திறந்துபார்க்கும் திட்டம் உருவாகியது. குருவை அவரின் அறையில் சந்தித்து பூஜை அறையை தூய்மையாக்க போகிறேன் என சொல்லிவிட்டு தனியாக வந்துவிட்டேன்.

இதோ அறைக்கதவை சாத்தி தாழ்போட்டாகிவிட்டது.யாரும் உள்ளே வரவோ நடப்பதை பார்க்கவோ முடியாது.

நறுமணம் கமழும் அந்த பெட்டியை மெல்ல திறந்து பட்டுத்துணியை விலக்கி அந்த புனித நூலை எடுத்தேன்.

அப்புத்தகத்தின் அட்டைப்படம் தாண்டி உள்ளே இருக்கும் தேவரகசியத்தை ஒரே மூச்சில் பருகும் ஆவலில் திறந்தால்....அனைத்தும் வெற்றுக்காகிதமாக இருந்தது...!

புனித நூல் ஏன் வெற்று தாளாக இருக்கிறது? இதை ஏன் வைத்து வழிபட வேண்டும் என பல குழப்பம் தோன்றியது...

மெல்ல திரும்பினால்...

பூட்டிய அறைக்குள் குரு நின்று என்னை தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருந்தார்.

அதிர்ச்சியில் உச்சத்துக்கே சென்று அவர் காலில் விழுந்தேன். தேம்பி அழுதுக்கொண்டு என் கண்ணீரால் அவரின் கால்களை கழுவும் என்னை தோள்களை பிடித்து தூக்கினார்.

“புனித நூல் என்றவுடன் அதில் பல தெய்வீக கருத்துக்கள் இருக்கும் என நினைத்தாயா? இறை கருத்துக்கள் என்பது ஒரு மொழியில் அடங்கக் கூடியது அல்ல. இறைகருத்துக்கள் வார்த்தையால் உணரக்கூடியது அல்ல.. இறைவன் என்ற பிரம்மாண்டம் சில வார்த்தையால் விளக்கிவிட முடியுமா என்ன? இறைக்கருத்துகள் மெளனத்தால் பகிர வேண்டியவை... மெளனம் எப்படி அனைத்தையும் கொண்டிருக்கிறதோ...அதுபோல இந்த வெற்றுத்தாள்களும் எல்லையற்ற இறைவனின் வார்த்தைகளை நிரப்பிக்கொண்டு தேடுதல் உள்ளவர்களுக்காக காத்திருக்கிறது... இதோ நீ இன்று வந்துவிட்டாய்”

எனக்கூறி என்னை அவரின் கூர்மையான கண்களால் மெளனமாக பார்த்தார்.

------------ஓம்-------------------
இறைவனை மதத்தாலும்..மொழியாலும் சிறுமைபடுத்துவதைவிட இறை அனுபூதியை மெளனத்தால் உணர முற்படுவதே நாம் செய்ய வேண்டிய ஆன்மீக பயிற்சியாகும்..



நன்றி:ஸ்வாமி ஓம்கார்- ஆதாரம் :குருகதைகள் by ஸ்வாமி ஓம்கார்










Saturday, April 20, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 16/2013)



Posted: 14 Apr 2013 03:00 PM PDT

ஒரு உண்மையான பக்தரின் கோரிக்கைகள் பாபாவினால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் நிராகரிக்கப்பட்டதில்லை அசையாத தளராத நம்பிக்கையும், பொறுமையும் கொண்டு பாபாவின் பதிலுக்காக காத்திருத்தல் வேண்டும்.

Posted: 15 Apr 2013 03:00 PM PDT
எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன் பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை (முந்தைய கர்மாக்களை) நன்கு அறிந்த சத்குரு அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைப்படுகிறது. இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். 
Posted: 16 Apr 2013 03:00 PM PDT
பூனாவில் வாழ்ந்த கோபால் ஆம்ப்டேகர் நாராயண் என்ற பக்தர், பிரிட்டிஷ் ராஜாங்கத்தில் கலால் வரி இலாக்காவில் 10 ஆண்டு வேலை பார்த்த பிறகு அந்த வேலையை விட்டு விட்டார். அதன் பிறகு கஷ்ட காலம் ஆரம்பித்தது. துன்பத்திற்கு மேல் துன்பம் நேரவே, எல்லா விதத்திலும் சோர்வடைந்து விட்டார். நிதி நிலைமை மோசமானது. ஆபத்துகள் வரிசையாக வந்தன. குடும்ப நிலைமை சகிக்க முடியாமல் ஏழு வருடம் திண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் ஷிர்டி சென்று பாபாவை இரவு, பகலாக வணங்கி ஓப்பாரி வைத்து அழுதார். (பாபா உடம்போடு இருந்த காலம் அது.)

1916-
ஆம் ஆண்டு, 2 மாதம் ஷீரடியில் தங்கினார். துன்பத்தை தாங்க முடியாமல் ஒருநாள் ஷிர்டி கிராமத்திலுள்ள ஒரு கிணற்றில் விழுந்து இறந்து விட முடிவு செய்து கொண்டு ஒரு மாட்டு வண்டி மீது உட்கார்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சகுண் மேரு நாயக் என்ற பாபாவின் பக்தர் ஒருவர், தன் வீட்டருகே கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் ஆம்ப்டேகரை கவனித்து, அவரிடம் வந்து அக்கல்கோட் மகாராஜ் பற்றிய புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்கச் சொன்னார். அதை வாங்கிய ஆம்ப்டேகர் அந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை புரட்டினார்.

அக்கல்கோட் மகராஜின் பக்தர் ஒருவர், வியாதியை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயச்சித்த சம்பவம் அந்த புத்தகத்தில் அவர் படித்த பக்கத்தில் இருந்தது. அந்த பக்தர் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற போது அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரை காப்பாற்றி, தற்கொலையின் தீங்கு பற்றி உபதேசம்செய்தார் .

"
எதை அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதை அனுபவித்தே தீரவேண்டும். பூர்வ ஜென்மத்தின் வினைகளை ரோகங்களாகவும் (வியாதி), குஷ்டமாகவும், வலி, கவலையாகவும் முழுவதும் அனுபவித்து தீர்க்கும் வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்? துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்து தீர்க்காவிட்டால் அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்கவேண்டும். ஆகவே, இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே!" என்று உபதேசித்தார்.

இந்த செய்தியை படித்த ஆம்ப்டேகர் மனம் மாறி, தன் செயலுக்கு வருந்தினார். சமயத்தில் தகவலை அனுப்பி காப்பாற்றிய பாபாவுக்கு நன்றி சொன்னார்.  
வளம் பெருகும்
Posted: 17 Apr 2013 03:00 PM PDT
பாலக்ருஷ்ண ராமச்சந்திர கைரீகர், வயது 70, ஜூலை 27, 1936.

நான் முதன் முதலில் சாயி பாபாவைப் பற்றி கேள்விப்பட்டது அவர் ஒரு பைத்தியக்காரன் என்று. அது சுமார் 35 வருடங்களுக்கு முன்பு. ஆனால் எல்லோருமே அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும் ஷிர்டியிலுள்ள எனது உறவினர் குல்கர்னி முலம் அவரை காணச் சென்றேன். நான் ஒரு பரம்பரை கிராம அதிகாரி. 1916-ம் ஆண்டில் அரசாங்கம் எங்களைப் பணியிலிருந்து நீக்கிவிட்டது. அந்தக் காலத்தில் மக்கள் சித்தலே, ஜல்காம், ராம்பூர், நாத்யட்ல்சா,வாடி, பிம்பல்வாடி வழியாக ஷிர்டி செல்வார்கள். அந்த சாலை உபயோகிக்கப்படாததால் இப்போது அது காணப்படவில்லை.

பாபா விளக்குகளில் நீர் ஊற்றி எரிய வைத்ததை நான் பார்த்திருக்கிறேன். 1908-ம் ஆண்டில் ஒரு சமயம் நான் பாபாவிடம் சென்றபோது மசூதியில் ஒரு தம்பிடி (பைசா) நாணயத்தின் மீது காலை வைத்துவிட்டேன். நான் அதை கையில் எடுத்து. "இதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இது தங்களுடைய நாணயம்" எனச் சொல்லி பாபாவிடம் கொடுத்தேன். பாபா அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து, "அது சரி. இந்த நாணயத்தை உன் வீட்டிற்கு கொண்டு போ. மற்ற விக்ரகங்களுடன் இதையும் உன் பூஜையில் வை. உனக்கு வளம் பெருகும்" எனக் கூறினார். நான் அதை எடுத்துச் சென்று பூஜித்து வந்தேன். மூன்று ஆண்டுகள், அதாவது 1911-ம் ஆண்டு வரை, நான் வளமாயிருந்தேன். அதற்கு முன்பு, இரவு சாப்பாட்டுக்கு எனக்கு அரிசி கூட கிடைக்காது. ஆனால் இந்த பூஜை தொடங்கிய பின், என் மனைவி தங்க வளையல்கள் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு என் உத்தியோகத்தில் வருமானம் கிடைத்தது. பின்னர் பயணம் மேற்கொண்டு அசுத்தி ஏற்பட்ட சமயம் என் பூஜையையும், பாராயணம் செய்யும் புத்தகத்தையும், தம்படி (நாணயத்தை) ஒரு நண்பரிடம் கொடுத்து வைத்திருந்தேன்; சில நாட்களுக்கு பின்னர் நாணயம் காணாமற்போயிருந்தது. அது முதல் (1911) என்னை துரதிருஷ்டம் துரத்துகிறது. நாணயம் தொலைந்து 6 மாதங்களில் என் மனைவி இறந்தாள். 1916-ல் என் வேலை பறிபோயிற்று. 1917-18-ல் என் அன்னை இறந்தாள். இப்போது உணவை நான் யாசித்துப் பெறுகிறேன். ஓவ்வொரு ராம நவமிக்கும் ஷீரடிக்கு சென்று வருகிறேன். - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்.
Posted: 18 Apr 2013 03:00 PM PDT
நான் இல்லாமல் போய்விடுவேன் என்று ஒரு காலமும் கவலைபடாதீர்கள். உங்கள் நலன் கொண்ட விஷயங்களைபற்றி என்னுடைய எலும்புகள் பேசுவதை கேட்பீர்கள். - ஷிர்டி சாய்பாபா    
Posted: 19 Apr 2013 03:00 PM PDT
உனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கவனமாகக் கேள்! இதுவரை மட்டுமல்ல, இன்னமும் நீ அனுபவிக்கிற, எதிர் கொள்கிற ஒவ்வொரு செயலும் உன் முன் ஜென்ம கர்மாவின் படிதான் நடக்கிறது. இதை மாற்ற இயலாது. பரமேஸ்வரனாலேயே மாற்ற முடியாத ஒன்றை நீ அனுபவித்துதான் ஆகவேண்டும்.

கர்மாவை மாற்ற முடியாத கடவுளை எதற்காக கும்பிடவேண்டும் என நீ நினைக்கலாம். கர்மாவின் தீவிரத்தை குறைத்து, அதை நல்ல வழியில் மாற்ற வழி காட்டுவதற்கு குரு வழிபாடு வேண்டும்.  - ஸ்ரீ சாயியின் குரல்.
Posted: 20 Apr 2013 03:00 PM PDT
பொறுமையை யார் கையாள்கிறாரோ, அவருடன் தாம் இருப்பதாக பாபா எப்போதும் சொல்லி வந்தார். ஆனால் உங்களால் இயன்றவரை எதிர்மறையான சூழ்நிலைகளிலிருந்து விலகி நிற்பது நன்று. அவரை வேண்டி நின்றால், உள்ளிருந்த வண்ணமே அவர் நல்வழி காட்டுவார். பயனற்ற விவாதங்களிலும், சச்சரவுகளிலும் வீணாக்காமல் உங்கள் பொன்னான நேரத்தை சேமித்து வைத்து பாபாவின் சேவைக்கு என ஒதுக்குங்கள். - சத்பதி