அங்கெங்கினாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்போல், காணும் இடம் எல்லாம் காட்சியளிக்கும் பொருளாகத் தாள்கள் விளங்குகின்றன. மனிதகுல வளர்ச்சியில் தாள்கள் அதிகாரமிக்க ஆயுதமாகவும், புனிதப் பொருளாகவும் கருதப்படுகிறது. வாழ்வியல் மற்றும் இறையியல் தத்துவங்களைத் தாங்கி நிற்கும் தாள்களாலான புத்தகங்கள் புனிதத் தன்மை வாய்ந்தவைகளாக மக்களால் வணங்கப்படுகின்றன.
மனிதனது பிறப்பு முதல் இறப்பு வரையிலும், அவன் இறந்த பிறகும் அவன் பதித்த காலச் சுவடிகளைத் தாங்கியும், எதிர்காலச் சந்ததியினருக்கு காலப் பெட்டகமாகவும், சிறந்த வழிகாட்டியாகவும், அழியா ஆவணமாகவும் விளங்குவது தாள்கள். யாருக்கும் தாள்கள் இன்றி நாள்கள் நகராது. நமது எண்ண அலைகளை வண்ணங்களால் வடித்தெடுத்து கற்போரையும், காண்போரையும் ஈர்க்கும் பெரும் பொருளாகவும் தாள்கள் விளங்குகின்றன.
உலகத்திற்கு கல்வி, தாள்களால்தான் போதிக்கப்படுகின்றன. ஜனநாயகத்தில் கல்வி கற்கவும், அறிவை விருத்தி செய்து கொள்ளவும், செய்திகளையும், கலாசாரப் பண்பாடுகளையும் பரிமாறிக் கொள்ளவும் தாள்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நாடு முழுவதும் பல புரட்சிகளையும், பண்பாட்டு மாற்றங்களையும் ஏற்படுத்தத் தாள்கள்தான் அடியெடுத்துக் கொடுத்தன.
மக்களை ஒருங்கிணைக்கும் சங்கிலியாகவும், அவர்களது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலக் குறிக்கோள்களை எய்தவும் தாள்கள் உதவுகின்றன. நாகரிக வளர்ச்சியில் தாள்களின் கண்டுபிடிப்பு என்பது ஒரு மைல் கல்லாக விளங்குகிறது. தாள்கள், தகவல் பரிமாற்றங்களுக்கு மட்டுமல்லாமல் செலாவணியாகவும், பணம் உருவாகவும் காரணமாக விளங்குகின்றன.
கி.மு. 3,000-ஆம் ஆண்டில் எகிப்தில் பாப்பிரஸ் எனும் தாவரத்திலிருந்து தாள்கள் தயாரிக்கப்பட்டன. சீனாவைச் சேர்ந்த சாய்லூன், தாள்களை உருவாக்கும் கலையைக் கற்று, அக்கலை, அராபியர்களால் கைப்பற்றப்பட்டு, ஐரோப்பியர்களால் மீள கற்கப்பட்டு உலகெங்கும் தாள்கள் உருவாக்கும் கலை பறந்தது.
ஐரோப்பாவில் 12-ஆம் நூற்றாண்டில் தாள்கள் உற்பத்தி தொடங்கியது. தெற்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜோஹனஸ் கூட்டன்பெர்க் என்பவரால் 1436-இல் (முடிவுற்றது 1440) கண்டுபிடிக்கப்பட்ட மரத்தாலான அச்சு இயந்திரம், தாள்கள் உலகில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி தாள்களுக்கு தனிப் பெருமையையும், மகத்துவத்தையும் ஈட்டித் தந்தது. இதனால், அச்சு இயந்திரத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் புத்தகங்கள் உற்பத்தி அதிகமாகி அறிவியல், கலை, மத போதனைகள் மக்களிடையே வளர்ந்தன. தாள்கள் கண்டுபிடிக்கப்படவில்லையானால் இன்னும் நாம் கற்காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.
மரம் தந்த கொடைதான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தாள்கள். மரங்களைச் சிறு சிறு துண்டுகளாக்கி ரசாயன அமிலங்களையும் தண்ணீரையும் சேர்த்து செல்லுலோஸ் எனப்படும் காகிதக் கூழ் மூலம் தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. மரங்களின் அறம் சார்ந்த பயன்பாட்டின் விரிவு, தாள்கள் உற்பத்தியிலும் தடம் பதித்து அதன் பெருமை எங்கும் பறைசாற்றப்படுகிறது. ஒரு டன் தாள்களை உருவாக்க 20 முழுவதும் வளர்ந்த மரங்கள், 90,000 லிட்டர் தண்ணீரும், 1.2 டன் எரிசக்தியும், 1,000 லிட்டர் அமிலமும் தேவைப்படுகின்றன. இதன் மூலம் பசுமைக் குடில்களிலிருந்து வெளியேறும் வாயுக்களின் அளவு 2 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளன. மற்ற எந்தத் தொழிற்சாலைகளையும் விட மரக் கூழ் மற்றும் தாள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில்தான் தண்ணீர் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
தாள்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், புதுப்பித்தலின் மூலமும், மறு உபயோகம் மூலமும், மறு சுழற்சியின் மூலமும் தாள்கள் வீணாவதைக் குறைத்து அதன் பயன்பாட்டை பன்மடங்கு அதிகரிக்கச் செய்யலாம்.
வீணான தாள்களை மறுசுழற்சியின் மூலம் 100 சதவீத புதிய தாள்களை உற்பத்தி செய்யலாம். இதனால் மரங்கள் வெட்டுவது தவிர்க்கப்படுகிறது. தாள்கள் உற்பத்தியில் 47.6 சதவீதம் பழைய தாள்கள் மூலம்தான் தயாரிக்கப்படுகின்றன.
தாள்கள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள் அனைத்தும் மீண்டும் புதுப்பிக்கக் கூடிய, மறுசுழற்சி செய்யக் கூடியவை என்பதால் மரக்கூழ் மற்றும் தாள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயற்கைக்கும், சமுதாயத்திற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படா வண்ணம் தாள்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் பல ஏக்கர் மதிப்புள்ள காட்டின் வளங்கள் காப்பாற்றப்படுகின்றன. ஒரு டன் செய்தித் தாள்களை மறு சுழற்சி செய்த காகித உற்பத்தியின் மூலம் 17 மரங்கள் காப்பாற்றப்படுகின்றன. இதனால் 74 சதவீதம் காற்று மாசையும், 35 சதவீதம் தண்ணீர் மாசுபடுதலையும் குறைக்கலாம். தாள்களின் பயன்பாடு குறைந்தால் சுற்றுச்சூழல் பாதிப்பும் வெகுவாகக் குறையும்.
குப்பைக் கூடைகளில் மூன்றில் ஒரு பங்கு கசக்கி எறியப்பட்ட தாள்களாகத்தான் இருக்கின்றன. வீடுகளிலிருந்து வெளியேறும் திடக்கழிவுகளில் 20 சதவீதம் தாள்களாகவே உள்ளன. எரிசக்தியை அதிக அளவில் பயன்படுத்தும் பெரிய தொழிற்சாலைகளில் 4-வது இடத்தில் மரக்கூழ் மற்றும் தாள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
உலகில் உற்பத்தியாகும் மொத்த எரிசக்தியில் 4 சதவீத எரிசக்தி இந்தத் தாள்கள் தொழிற்சாலைகளில்தான் பயன்படுத்தப்படுகிறது. மரக்கூழ் மற்றும் தாள்கள் தொழிற்சாலைகள் பசுமைக்குடில் வாயுக்களை (ஆக்சிஜன், கார்பன்டை ஆக்ûஸடு, நைட்ரஸ் ஆக்ûஸடு, மீத்தேன்) அதிகமாக வெளியிட்டு சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்து தட்பவெப்ப நிலையை பாதிப்படையச் செய்கின்றன. ஆனால், தாள்கள் கரியை (கார்பன்) உள்வாங்கிக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை.
தாள்களின் உபயோகத்தில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலதிகாரிகள் அலுவலர்களை வற்புறுத்தினால் அந்த அலுவலகத்தில் எழுதுபொருள்கள் தொடர்பான செலவுகள் குறைந்து தாள்கள் வீணடிப்பது தடுக்கப்படும். அவை வீணாவதைத் தடுக்க, தாள்களின் இரு பக்கமும் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். எழுத்துகளைச் சிறிது சிறிதாகவும், சொல்ல வேண்டிய தகவல்களைச் சுருக்கமாகச் சொல்வதன் மூலமும் தாள்களின் பயன்பாட்டை அதிகரிக்கலாம். இன்றைய வணிக லாப நோக்கிலான பொருளாதார வளர்ச்சியில் மரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், தாள்கள் உற்பத்தி வெகுவாகக் குறையும் நாள் வெகு தொலைவில் இல்லை.
தாள்கள் வீணாவதைக் குறைத்தால், மரங்கள் காப்பாற்றப்பட்டு, அவை அழிவது குறையும், மரங்கள் அழிவது குறைந்தால், காடுகள் பெருகும், காடுகள் பெருகினால் மழை பெருகும், மழை பெருகினால் உயிரினங்களின் வளர்ச்சி தடைப்படாது. தட்ப வெப்பநிலை சீராகும். எரிபொருளும் தண்ணீரும் மிச்சப்படுத்தப்படும்.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது. தாள்கள் மரத்தின் பாதங்கள். தாள்கள் அழிந்தால் மரங்கள் மேலும் அழியும். தாள்கள் வீணாவதைத் தடுப்போம் - மரங்களைக் காப்போம் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுப்போம்.
By - பாறப்புறத் ராதாகிருஷ்ணன், சென்னை.
Thanks to Dinamani.com
நல்லதொரு கட்டுரை... பலர் அறிய பதிவாக்கியமைக்கு நன்றி...
ReplyDeleteவீணாவது தொடர்ந்தால் வருங்காலங்களில் குழந்தைகள் மடிக்கணினி கொண்டு செல்வது போல் நிலையும், இன்னும் பலப்பல பிரச்சனைகளும் வரலாம் என்பதும் உண்மை...