Thursday, July 11, 2013

மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!

ஸ்டீபன் ஹாகிங்
 
பெளதிகத் துறையில் உலகின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டு வருகிறார் ஸ்டீபன் ஹாகிங். இவரது ஆராய்ச்சித் தொகுப்பான "பிரபஞ்சம் எவ்வாறு உருவானது?' என்பதன் மூலம் பல புதிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
 கை,கால்கள் சரியாக இயங்காமல் இருக்கலாம். பேசும் பேச்சு பிறருக்குப் புரியாமல் இருக்கலாம். உடலில் மேலும் பல குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் சிந்தனையும் தன்னம்பிக்கையும் கொண்டு செயல்பட்டால் உலகம் போற்றும் அறிவியல் அறிஞராக முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஸ்டீபன் ஹாகிங்.
 தர்போது மின்சாரத்தால் இயங்கும் சக்கர நாற்காலியில்தான் பயணிக்கிறார். இவரால் கை,கால்கள் மற்றும் உடலின் பிற உறுப்புகளை நினைத்தபடி இயக்க முடியாது. தலையை நிமிர்த்தி வைத்துக் கொண்டிருக்க முடியாது. மூச்சுத் திணறல் அடிக்கடி ஏற்படும். சிரமப்பட்டுத்தான் உணவே உட்கொள்ள முடியும். அவர் பேச முயற்சித்தாலும் அவருடைய பேச்சைப் புரிந்து கொள்ள முடியாது. வாசனையையும் உணர முடியாது.
 தன் உடலில் இத்தனை குறைபாடுகளையும் வைத்துக் கொண்டு உலகம் போற்றும் விஞ்ஞானியாக வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
 நம்பித்தான் ஆக வேண்டும்.
 இவருடைய சக்கர நாற்காலி, பல சிறப்பு அமைப்புகளைக் கொண்டது. பாட்டரி மின்சாரம் மூலம் இயங்குவது. அதில் மிகவும் தனித்தன்மை உடைய ஒரு சிறிய கம்ப்யூட்டரும் அமைக்கப்பட்டுள்ளது. அதிகம் செயல்தன்மை இழக்காத தன்னுடைய விரல்களால், இவர் தாம் பேச விருப்புவதை டைப் செய்தால், அது கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்டுள்ள -எழுத்தை ஒலியாக மாற்றும் சிந்தசைசர் என்னும் - கருவியின் மூலம் இவருடைய எழுத்தைப் பேச்சாக மாற்றி இவர் பேசுவது போல ஒலிக்கச் 
 செய்யும்.
 இவருடைய தினசரி வாழ்க்கை முறை இதுதான். ஆனால் முகத்தில் எப்போதும் வாடாத புன்னகை. தனது உடலில் எவ்விதக் குறைபாடும் இல்லை என்ற எண்ணம்.
 இவருக்கு, இவருடைய உடலில் இத்தனை குறைபாடுகள் ஏற்படக் காரணம் 1963-ஆம் ஆண்டு (இருபத்தியொன்றாம் வயதில்) ஏற்பட்ட நரம்பு சம்பந்தமான நோயின் பாதிப்புதான்.
 ஸ்டீபன் ஹாகிங் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் 1942-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர்களுக்கு இவரை ஒரு டாக்டராக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் இவருக்கோ பெüதிகத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. இவருடைய விருப்பம் நிறைவேறியது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த நோய் அவரைத் தாக்கியது. இவர் அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். அவர்கள் கூறியதையெல்லாம் முறியடித்து, இன்னும் வாழ்ந்து விஞ்ஞானத்துக்கு அளப்பரிய சேவை செய்து வருவதற்குக் காரணம், இன்றைய மருத்துவத்துறை மற்றும் அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றங்களும் ஸ்டீபன் ஹாகிங்கின் மன உறுதியும்தான்.
 அத்துடன் அந்தக் காலகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட காதலும் வாழவேண்டிய ஆசையை அவருக்குத் தூண்டிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
 நோயின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்த சமயத்தில், தான் காதலிக்கத் தொடங்கிய ஜேன் என்னும் பெண்ணை 1965-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஜேன் இவருடைய குடும்ப வாழ்க்கையில் மட்டுமல்லாமல் கல்லூரிப் படிப்பிலும் ஊக்கமும் உதவியும் புரிந்து வந்தார். ஹாகிங் தனது முனைவர் பட்டத்தை 1966-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் 
 பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
 1967-இல் இவருக்கு ஒரு மகனும் 1970-ஆம் ஆண்டில் ஒரு மகளும் பிறந்தனர். இதனால் இவருக்கு வாழ்க்கையில் பிடிப்பு மேலும் அதிகமாகியது. இவரிடம் இவர் மனைவி காட்டிய அன்பும் அன்றாடத் தேவைகளைப் பொறுப்புடனும் கவனத்துடனும் செய்த பாங்கும் இவரை மிகவும் உற்சாகப்படுத்தியது. 1979-ஆம் ஆண்டு மூன்றாவது குழந்தை பிறந்தது.
 ஸ்டீபன் ஹாகிங்கின் வயது முப்பத்தைந்தான போது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் புவிசக்தி பெüதிகப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவருடைய ஆற்றல் உணரப்பட்டு பல அங்கீகாரங்கள் இவருக்குக் கிடைத்தன.
 இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே பல்கலைக்
 கழகத்தில் மிக உயர்ந்த பதவியாகக் கருதப்பட்ட பேராசிரியர் பதவிக்கு இவர் உயர்த்தப்பட்டார். உலகப் புகழ்பெற்ற ஐசக் நியூட்டன் வகித்த பதவி இது.
 1988-ஆம் ஆண்டில் "எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் ஃப்ரம் பிக் பாங்க் டூ ப்ளாக் ஹோல்ஸ்' என்னும் விஞ்ஞானத் தகவல்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்று அதில் அவர் தெரிவித்த மிகவும் வித்தியாசமான புதிய ஒப்பரிய கருத்துகள் பற்பல விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
 பெüதிகத் தகவல்கள் அடங்கிய இந்தப் புத்தகத்தில் கணித சம்பந்தமான சமன்பாடுகள் பெரும்பாலும் இல்லாமல் எழுதியிருப்பது மிகவும் வியப்புக்குரியது. சாதாரண கதைப் புத்தகம் படிப்பது போல இந்த விஞ்ஞானத் தகவல்கள் அடங்கிய புத்தகத்தை அனைவரும் ஆர்வத்துடன் வாங்கிப் படித்து எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் கணிதம் சம்பந்தப்பட்ட சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதினார்.
 புத்தக விற்பனையில் நீண்ட காலம் முதலாவது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்த புத்தகம் - தன்னுடைய சாதனைகளுடன் தனது குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிப் பேசப்படுவதை அவர் விரும்பவில்லை.
 உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ சில குறைபாடுகள் இருக்கும். அதுபோல தனக்கும் சில குறைபாடுகள் உண்டு, அவ்வளவே என்றுதான் ஸ்டீபன் நினைக்கிறார். மிகக் குறைந்த சொற்களைக் கொண்டு மிகத் தெளிவாகத் தனது கருத்துகளை வெளிப்படுத்துவதில் வல்லவர். இவர் தனது கருத்துகளைத் தெரிவிக்கும்போது பல சமயங்களில் மெல்லிய நகைச் சுவையும் வெளிப்படும்.
 வெளிநாடுகளுக்குப் பலமுறை சென்று வந்துள்ளார். பலமுறை திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். தற்சமயம் இவருடன் எந்த நேரமும் சிகிச்சை அளிக்க உதவியாக ஒரு மருத்துவக்குழு கூடவே இருந்து வருகிறது. தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய உடல் குறைபாடுகளை முற்றிலும் மறந்து, தனது கூரிய அறிவுத் திறனைப் பயன்படுத்தி பிரபஞ்சம் பற்றி வியக்கத்தக்க ஆராய்ச்சிகள் செய்துவரும் ஸ்டீபன் ஹாகிங், உலகுக்குச் செய்து வரும் அரிய அறிவியல் சேவை, உடல் குறைபாடுகளுடன் வாழ்க்கையில் வெற்றி பெற முயல்பவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்

 Thanks to செவல்குளம் "ஆச்சா'
 Published : in (Dinamani )சிறுவர் மலர்  on 05 July 2013






No comments:

Post a Comment