நாட்டின் செல்வங்கள் | ||||
| ||||
மேய்ச்சல் நிலம் தேடி மாடுகள் மந்தையாக செல்லும் காட்சி அற்புதமானது.நெடி மனதை கவரக்கூடியது. 80கள் வரை நீடித்த இவ்வகையான நிகழ்வுகள் தற்போது புழக்கத்தில் இல்லாமலேயே போய்விட்டன. இன்று மேய்ச்சல் நிலமும் இல்லை, மேய்பவரும் இல்லை. நாட்டு பசுக்களும் அனாவசியமாகிப் போய் விட்டன. ரியல் எஸ்டேட் கொள்ளையர்களின் பார்வையில் வளம் தரும் வயல் வெளிகளே "அவசியமா" என கேள்விக்கு உட்படுத்தபடும் போது பசுக்களை பற்றி கேட்கவே வேண்டாம். வனத்துறையும் போதாக் குறைக்கு தலைமுறை சார்ந்த மேய்ச்சல் குடிகளுக்கும் நிரந்தர தடை விதித்து விட்டனர்.பாலுக்கென்றே வளர்க்கப்பட்ட நெல்லூர், தார்பார்க்கர், காங்கேயம், காங்கிரஜ்...என நம் பாரம்பரிய இனங்கள் அருகிப்போய் ஜெர்சியும், பிரீஷியனும் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகளால் புகுத்தப்பட்டன. தினமும் "வாளி நிறைய பால் கறக்கலாம்" என்று ஆசைவார்த்தை காட்டி மோசம் செய்த சீமை ரகங்களின் உடம்பெல்லாம் வியாதி. பண்டுகம் பார்த்தே நொந்து போனான் விவசாயி. சீமைப்புல் ,கியூபா புல், நேப்பியர் புல், யூரியா கலந்த வைக்கோல் என செயற்கையாக தருவிக்கப்பட்ட உணவே அளிக்க வேண்டும். இதில் நகைச்சுவை என்னவென்றால், இப்புற்களின் விதை கிலோ 60 ரூபாய், விதை நெல்லின் விலையோ வெறும் 6ரூபாய்! நஞ்சையே உணவாக உட்கொள்ளும் இவைகளின் பாலும் நஞ்சாக இருப்பது இயல்பு தானே. வெள்ளை புரட்சியின் கறுப்பு சுவடுகள் இங்கிருந்து தான் துவங்கின. தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆய்வுப்படி கெடால் ஹியூக் (Catal huyuk) என்ற துருக்கி நாடே அடிப்படை இனங்களின் தாயகமாக கருதப்படுகிறது. அடிப்படை இனங்கள் என கருதப்படும் (1) திமில் இல்லாத நீண்ட கொம்பு (Bos taurus), (2)திமில் இல்லாத குட்டை கொம்பு மற்றும் (3) திமில் புடைத்தது (Bos indicus)போன்றவை இங்கிருந்தே வந்தவை. ஐரோப்பிய இனங்களில் காணப்படும் முன்னோர்களும் இவ்வினங்களில் காணப்படும் சகோதர வழி பந்தங்களே. "செபு" என அழைக்கப்படும் பெருத்த திமில் கொண்ட காளை இனம் 5000ஆண்டுகளாக இந்திய உபகண்டத்தில் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வினத்தில் இருந்தே தோன்றியுள்ளன தற்போது வரை இந்திய பாகிஸ்தான் தேசத்தில் எஞ்சி இருக்கும் நாட்டு இனங்களின் வாரிசுகள். செபு இன பசுக்கள் ஆப்பிரிக்கா, தென், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கு கப்பல் முலம் அனுப்பப்படுகின்றன. 16ம் நூற்றாண்டில் இருந்தே இவ்வகையான இறக்குமதி நடைமுறையில் இருந்து வருகிறது. 1950 ல் கிருஷ்ணாராவ் என்பவர் கால்நடை துறை அமைச்சராக இருந்தார்.அந்த சமயம் டி.எம்.எஸ் என அழைக்கப்படும் (DELHI MILK SCHEME) துவங்கப்பட்டது. அப்போதைய உயர் அதிகாரிகள் ஜெர்சி மற்றும் பிரீஷியன் போன்ற ஐரோப்பிய இனங்களை இறக்குமதி செய்தால் தான் திட்டம் வெற்றிப் பெறும் என்றனர். நம்மிடம் உள்ள தார்பார்கர், சாகிவால் மற்றும் சிந்தி போன்ற நாட்டுமாடுகள் இத்தேவையை பூர்த்தி செய்யும் போது ஐரோப்பி இனங்கள் தேவையில்லை என பதில் குறிப்பு எழுதினார் கிருஷ்ணாராவ். விளைவாக அவர் பதவி பறிபோனது. பிளிட்ஸ் இதழ் அவர் பழிவாங்கப்பட்டதாய் கூறியது.அப்போதை ஜனாதிபதி பக்ரூதின் அலி அகமது உண்மை நிலை அறிந்து அவரை மீண்டும் பதவியில் அமர்த்தினார். அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் வரை எந்த அன்னிய மாடுகளையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை.காங்கிரஜ் என்ற மாட்டின் பெயரே மருவி "காங்கிரஸ்" வந்ததாய் ஒரு கருத்து உண்டு. காந்தி பிறந்த இடத்திற்கு அருகில் தான் இம்மாடுகளின் தோற்ற மையம். கூட்டம் கூடும் இடம், கலப்பு என்ற அர்த்தம் தொனிக்க உபயோகப்படும் இச்சொல் ஒரு தேசிய கட்சியின் பெயராக உருமாற்றம் அடைந்து சீரழிந்து விட்டது. 1952 முதல் நான்கு பொது தேர்தல்களிலும்"மாட்டு பொட்டிக்கு ஓட்டுப்போடுங்க" என்றே ஓட்டுக்கேட்டார்கள். இன்று சூட்கேசாக கைமாற்றம் அடைவது பரிணாம வளர்ச்சி ! அறிவியல் பயின்ற வேளாண் அதிகாரிகளும், கால்நடை வல்லுனர்களும் கலப்பினம் மூலமே மிக அதிக பயன் பெற முடியும் என்ற தவறான நம்பிக்கை கொண்டு தங்களை நாடிவரும் விவசாயிகளை மூளைச் சலவை செய்கிறார்கள்! அவ்வாறு கலப்பினம் தான் தேவை என்றால் கால்நடைகளில் ஓங்கோல், சிந்தி மற்றும் தார்பார்க்கர் போன்ற இந்திய இனங்களுடன் தமிழ் மாநிலத்தில் உள்ள நாட்டு மாடுகளை சேர விடலாமே? அதற்காக ஜெர்ஸி மற்றும் பிரீஷியன் தேவையில்லை. "நம் நாட்டின் மாடுகள் நமது தேவையை விட குறைவாக பால் கொடுப்பது முற்றிலும் நமது தவறினால் தான்." என்ற காந்திஜியின் வரி நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. வெள்ளையர்களை எதிர்த்து சண்டையிட்ட திப்பு சுல்தான் போர் முனைக்கு தனது ஆயுதங்களை கர்நாடக மாநில மாடுகளில் ஒன்றான ஹல்லிகர் மூலம் கொண்டு சென்றான். அவைகளின் சுறுசுறுப்பையும் இழுவைத்திறனையும் கண்ட எதிர் படை தளபதியான வெல்லஸ்லி பிரபு "இம்மாடுகளை போன்று100ஜோடிகள் நம்மிடம் இருந்திருந்தால் நெப்போலியனை எதிர்த்து போரிட்ட போது எளிதில் வெற்றி பெற்றிருப்போம்" என்றாராம். இந்தியாவில் சுமை தூக்க, இழுக்க என 6.39 கோடி கால்நடைகள் பயன்பாட்டில் உள்ளன. இது 2007ல் எடுக்கப்பட்ட ஆய்வு. இவற்றில் 5.23 கோடி காளைகளும், 61 லட்சம் ஆண் எருமைகளும், 25 லட்சம் குதிரைகள், கோவேரி கழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் யாக் எருமைகள் என பலவும் கைகோர்த்து உயர் சக்தி ஆற்றலை மிச்சம் செய்கின்றன. உண்மையில், இவற்றின் அதிக பட்ச பயன்பாடு இறைச்சிகாக அவை உண்ணப்படுவது தான்! கால்நடை வளர்ப்பு பொதுவாக பால் வளத்தை குறிவைத்தே பிரதானப்படுத்தப்படுகிறது. இது தவறு. அவைகளின் கழிவு, இழுவைத்திறன் மற்றும் மாமிசம் போன்ற பயன்பாடுகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.அரசின் உதவியோடு வெளிநாட்டு விந்துகளை நம் மாடுகளுக்குள் செலுத்தி,அவைகளின் உண்மையான இனம் அழிய நாமே வழி வகுக்கிறோம். இந்திய பொலி காளைகளின் வளர்ப்பு அதனால் புறக்கணிக்கப்படுகிறது. காளை மாடுகளின் ஆற்றல் இன்றும் பஞ்சாப் ,ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளினால் உணரப்பட்டுள்ளது. இங்குள்ள முரண்நகை என்னவெனில் அதிக டிராக்டர் மற்றும் விவசாய உபகரணங்கள் இம்மாநிலங்களில் தான் தயாரிக்கப்பட்டு தமிழகத்திற்கு சப்ளை செய்யப்படுகின்றன. விதைப்பு எந்திரம்,மண்கட்டிகளை சமன்படுத்தும் எந்திரம், ஆழ உழுது களையை புரட்டும் எந்திரம், கரும்புச் சாறு பிழியும் எந்திரம் என அம்மாநில விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு பயன் பெறும் வகையில் எந்திரங்களை வடிவமைத்துள்ளனர். அதைப்போன்று ஏன் நாமும் வடிவமைத்து நம் கால்நடைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கூடாது? இதற்குண்டான விடையை வேளாண் பல்கலை கழகங்கள்தாம் கூற வேண்டும். சீமை மாடுகள் குறைந்த காலத்திற்கு அதிக பாலை தரலாம். ஆனால் நம் நாட்டு ரக மாடுகளைப் போல் சக்தியும் திறனும் படைத்தவை அல்ல அவை.காங்கேயம் மற்றும் ஹல்லிகர் காளைகளின் சக்தி (BULL POWER) அரேபிய குதிரைகளின் குதிரை சக்திக்கு (HORSE POWER) நிகரானது என்ற மேலை நாட்டு அறிஞர் குறிப்பை நான் தஞ்சை சரஸ்வதி மகாலில் கண்டேன். உழவு மாடுகளின் பராமரிப்பு செலவிற்கும் பால் தரும் நாட்டு ரக வளர்ப்பிற்கும் அரசு மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். மானியம் வழங்குவதில் இவ்வகைகளுக்கு முன்னுரிமை வழங்குதல் மிக அவசியம். "அப்போது தான் நம் நாட்டு வளர்ப்பு ரகங்கள் கீழ்மை அடையாது". நன்றிஎஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா/ |
Wednesday, February 20, 2013
நாட்டின் செல்வங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment