Tuesday, February 26, 2013

அழுக்கு நீங்க வழி-தெய்வத்தின் குரல்


தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
அத்வைதம்
அழுக்கு நீங்க வழி
ஞானத்துடன் - அறிவுடன் பார்த்தால் - எல்லாவற்றையும் ஆனந்தமாகவே பார்ப்போம். ஆனந்தம் முடிவில்லாதது. உண்மையாக அறிந்தால் எல்லாம் ஆனந்தம் என்று காண்போம். ஆனந்தம் எல்லையில்லாதது. அது இல்லாத இடமில்லை. எல்லையில்லாத எங்கும் நிறைந்த பொருள் இரண்டு இருக்கமுடியாது. ஆகையால் ஆனந்தமும் ஞானமும் ஒன்றே. அது இல்லாத இடமில்லை என்பதால், அதுவே. இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும் உடைய ஜீவனும்.

நாம் கண்ணால் மட்டுமே பார்க்கிறோம். ஒன்றை ரோஜா என்கிறோம். இன்னோன்றை ஊமத்தை என்று சொல்கிறோம். ஞானம் என்கிற அறிவால் பார்த்தால் அது ரோஜா அன்று. ஆனந்தமாகத்தான் தெரியும். ஊமத்தம் பூவும் அப்படியே தெரியும். நமக்கு ஞானம் இல்லாதபடியால் ஒன்றை ரோஜாவாகவும், மற்றோன்றை இன்னோரு பொருளாகவும் பார்க்கிறோம். உண்மையில் எல்லாம் ஆனந்தம்தான். உண்மை நமக்குப் புலப்படாததற்குப் காரணம். நமக்குச் சித்தத்தில் அழுக்கு இருப்பதும், ஒருமைப்பாடு இல்லாததும்தான். கண்ணாடி ஆடிக் கொண்டிருந்தால், அதில் தெரியும் பிரதி பிம்பம் யதார்த்தமாக அல்லாமல் விரூபமாகத் தெரியும். ஆட்டத்துடன் அந்தக் கண்ணாடியில் அழுக்கும் இருந்தால் பிரதிபிம்பத்தில் யதார்த்த பாவமே கொங்சங்கூட இராது. நம்முடைய மனக்கண்ணாடி ஆடிக் கொண்டும், அழுக்குப் படிந்தும் இருப்பதால் பொருள்களை அது உள்ளபடி ஆனந்த வஸ்துவாகப் பிரதிபலிப்பதில்லை.

பைத்தியம் பிடித்த ஒருவனிடம் இந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக் கொண்டே இரு என்றால், அவனால் முடியாது. நம்மால் அந்தத் தடியைத் கால்மணி நேரம் பிடித்துக் கொண்டிருக்க முடிகிறது. ஆனால் ஒரு பொருளை மட்டும் குறிப்பிட்ட நேரம்வரை நினைத்துக் கொண்டு இரு என்றால் அப்படிச் செய்ய முடியவில்லை. சித்தம் மறுகணமே ஆயிரக்கணக்கான எண்ணங்களை சினிமாப் பாடல்கள் ஒடுவதுபோல் ஒட்டமாக ஒடியபடி நினைக்கிறது. ஆகையால், நாம் எப்படிப் பைத்தியங்களை நினைக்கிறோமோ, அதுபோல் மகான்களுக்கு நாமும் பைத்தியமாகத்தான் படுவோம். மனம் கட்டப்படுகின்ற வரையில் எல்லோரும் பல வகைப்பட்ட பைத்தியங்களே. அழுக்குடனுள்ள கண்ணாடி ஆடுவதுபோல் நம்முடைய சித்தம் தோஷத்துடனும் ஜகாக்ரதை இல்லாமலும் (ஒரு முகமாகாமலும்) இருப்பதுதான் இதற்குக் காரணம். தோஷம் போனால் ஜகாக்ரதை வரும். ஜகாக்ரதை வந்தால் உண்மை விளங்கும்.

தோஷத்தைப் எப்படிப் போக்குவது. நமக்கு அழுக்கு என்பது தேகம். இந்தத் தேகம் எதனால் வந்தது. பாபத்தினால் வந்தது. அந்தப் பாபத்தை எதனால் செய்தோம். கர சரணாதி அவயங்கள், மனம் இவற்றினால் செய்தோம். சுற்றியுள்ள கயிற்றை அவிழ்க்க வேண்டியிருந்தால், சுற்றின பிரகாரமே திரும்பவும் அவிழ்க்க வேண்டும். அதே மாதிரி அஸத் காரியங்களை ஸத்காரியங்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் தொலைக்க வேண்டும். கர சரணாதி அவயங்கள், மனம் இவற்றினால் செய்த பாவங்களை இந்த அவயங்களினாலேயே தொலைக்க வேண்டும். தானம், தருமம், கர்ம அநுஷ்டானம், ஈசுவர நாமோச்சாரணம், ஆலய தரிசனம் முதலியவையே ஸத்காரியங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம். இவற்றால் பாபத்தைப் போக்கிக் கொண்டு பிறகு ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு எல்லையில்லாத ஞானமாக ஆனந்தமாக ஆக வேண்டும்.


நன்றி:/www.kamakoti.org

No comments:

Post a Comment