Sunday, February 3, 2013

இந்துக்கள் ஏன் பசுவை வழிபடுகிறார்கள்?



இந்துக்கள் பசுக்களை வழிபடுவதில்லை. நாம் மரியாதைத் தருகிறோம், பெருமதிப்பு கொடுக்கிறோம். தான் பெறுவதைவிட அதிகமாகத் திருப்பித் தரும், சாதுவான இந்த விலங்குக்கு பெருமதிப்புத் தரும்பொழுது அனைத்து உயிரினங்களுக்கும் பெருமதிப்புக் கொடுக்கிறோம்.                                                        

இந்துக்கள் அனைத்து ஜீவராசிகளையும் - பாலூட்டி, நீர் வாழ்வன, (மீன்கள்) பறப்பன மற்றும் அனைத்து உயிரினங்களையும் புனிதமானதாகக் கருதுகின்றனர். இந்தக் கொள்கைப்படி விசேஷமாக பசுவையயும் புனிதமானதாகக் ஏற்றுக் கொள்கிறோம். விழாக்காலங்களில் பசுவை அலங்கரித்து மதிப்பளிக்கிறோம். ஆனால் தெய்வங்களை வழிபடுவது போல வழிபடுவதில்லை.       

மற்ற ஜீவராசிகளைப் பசு பிரதிநிதிக்கிறது. பசு பூமியின் சின்னமாகவும் கொள்ளப்படுகிறது. உணவளிக்கும் ஒன்றாக, இடைவிடாமல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒன்றாக, கேட்காமலேயே கொடுக்கும் ஒன்றாகத் திகழ்கிறது. பசு உயிரையும் உயிரின் ஊட்டததையும் பிரதிநிதிக்கிறது. பசு பரந்த உள்ளம் கொண்டது. அது நீர், புல், தானியம் ஆகியவற்றைத் தவிர வேறெதுவும் எடுத்துக் கொள்வதில்லை. வீடுபேறு அடைந்த ஆன்மா, ஆன்மீக ஞானத்தைக் கொடுப்பது போன்று பசு பாலைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. மனித வாழ்க்கைக்குப் பசு இன்றியமையாதது. பல மனிதர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாகத் தாங்கி நிற்கிறது. பசு இறையருள் மற்றும் செல்வத்தின் சின்னமாகத் திகழ்கிறது. பசுவின் மீது கொண்டுள்ள புனிதத் தன்மையால் இந்துக்கள் அன்பு, மதிப்பு, இயற்கையோடு இணைந்திருத்தல் ஆகிய நற்பண்புகளைக் கொண்டிருக்கின்றனர்.                

விரிவான விளக்கம்: பூமியில் யார் நமக்கு அதிகமாகக் கொடுக்கிறார்கள்? ஒவ்வொரு நாட்டிலும் சாப்பாட்டு மேசையில் காலை, மதிய, இரவு உணவுக்கு யாரைப் பார்க்கிறோம்? - பசுவைத் தான். "மாக்டொனால்டு" மற்றும் போட்டியாளர்கள் செல்வம் பெறக் காரணம் பசு. பெருந்தன்மையுள்ள பசு பால், தயிர், வெண்ணெய், நெய், பனிக்கூழ் (ஐஸ்கிரீம்) ஆகியவற்றைத் தருகின்றது. மாட்டிறைச்சி அதன் எலும்புகள் ஆகியவை உணவாகவும் அதன் தோல் காலணி, இடைவார், தோல் ஆசனம், தோல் கோட்டு, தொப்பி மற்றும் பல பொருட்கள் செய்ய பசு காரணமாக இருக்கிறது. இந்துக்கள் கேட்கக் கூடிய ஒரே கேள்வி, பலர் பசுவுக்குப் பாதுகாப்பும் மதிப்புத் தருவதில்லை ஏன்? என்பது தான். மகாத்மா காந்தி ஒருமுறை ஒரு நாட்டின் விலங்குகளை அந்நாடு எப்படி நடத்துகின்றதோ அதைப் பார்த்து அந்நாட்டின் பெருமையையும் அதன் வளர்ச்சியையும் அளவிடலாம் என்று கூறினார். பசு பாதுகாப்பு என்பது வெறுமனே பாதுகாப்பு என்பதைவிட அதற்கும் மேலானதாக நான் கருதுகிறேன். எப்படியெனில் உலகத்தில் வாழும் எளிய பலவீனமான ஜீவராசிகளுக்கும் அது பொருந்தும். பசு என்பது மனிதனுக்குக் கீழ் உள்ள அனைத்து உலகம்/உயிர்களைக் குறிக்கிறது.    

இந்து கலாச்சாரப்படி இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் விழாக் காலங்களில் பசுக்களுக்கு மாலை போட்டு விசேஷ உணவும் கொடுத்து மதிப்பார்கள். முக்கியமாக ஆண்டு "கோபாஸ்துமா" விழாவன்று இவ்வாறு செய்வார்கள். தமிழ் நாட்டில் தைப்பொங்களன்று மேற்கண்டவாறு நடைபெறும். இந்தியக் கிராமப் பகுதிகளில் பசுக்களுக்கான வண்ண வண்ண ஆடை ஆபரணங்கள் சந்தைகளில் விற்கப்படுகின்றன. இதிலிருந்து பசுக்களை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பது தெளிவாகும். சிறு வயதிலேயே இந்துக் குழந்தைகள் பசுக்களுக்கு ஆடை ஆபரணங்களாலும் மாலையாலும் அலங்காரம் செய்வதைப் பற்றிக் கற்றுத் தரப்படுகின்றனர். கேட்டதை வழங்கும் புனிதக் காமதேனு பசு தன்மையை பறைசாற்றுகிறது. பசுவும் அதன் புனித பரிசு எனக் கருதும் குறிப்பாகப் பாலும் நெய்யும் இந்துக்களின் வழிபாடு பரிகாரப் பூசை மற்றும் இறப்புச் சடங்குகளிலும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இந்தியாவில் 3000க்கு மேற்பட்ட கோசாலை அறநிலையங்கள் நிர்வகித்து வருகின்றன. வயதான மாடுகளையும் நலிவுற்று மெலிந்து மாடுகளையும் இக்கலாசாலைகள் கவனித்துக் கொள்கின்றன. இந்துக்களில் பலர் சைவமாக இல்லாவிடினும் அவர்கள் மாட்டிறைச்சி உண்ணக் கூடாதென்ற உயர்ந்த கொள்கையைக் கொண்டிருக்கின்றனர்.
image                                              


 இந்துக்கள் பசுக்களை வழிபடுவதில்லை. ஆனால் அவற்றை அனைத்து உயிர்களிலுள்ள தெய்வீகத்தின் எடுத்துக் காட்டாகப் போற்றுகிறோம். இங்கே ஒரு சிறுமி பசுவுக்கு மாலை போடுகிறாள். அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி வெண்கலப் பூண் பொருத்தியும் குஞ்சங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவளது தங்கை பச்சைப் புல்லைத் தருகிறாள். செல்வம், வலிமை, அபரிமிதமாகக் கொடுத்தல், தன்னலம் கருதாது வழங்குதல், மற்றும் பூமியில் முழுமையான வாழ்க்கை முதலியன தருவதால், இந்தியாவில் பசுவை மேற்கண்டவற்றின் சின்னமாக மதித்துக் காக்கிறார்கள்.
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •

பசுவின் சாந்தம், எதையும் தாங்கிக் கொள்ளும் இயல்பு ஆகியன இந்து சமயத்தின் அடிப்படை நன்னெறிப் பண்பான வன்முறையில்லா அல்லது அஹிம்சையை உணர்த்தும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது. பசு மதிப்பு, வலிமை, தாங்கும் திறன், தாய்மை மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றிற்கு அடையாளமாகத் திகழ்கிறது.
வேதத்தில் பசுவை செல்வமெனவும் மகிழ்ச்சியான பூவுலகு வாழ்க்கை எனவும் சொல்லப்படுகிறது. ரிக் வேதத்தில் நாம் அடியிற் கண்டவாறு படிக்கிறோம். (4.28.1:6). "பசுக்கள் நமக்கு நல்லதிர்ஷ்டத்தைத் கொடுக்கின்றன. பசுக்கள் மாட்டுக் கொட்டிலில் மனநிறைவுடன் அங்கேயே இருக்கட்டும். நமக்காகப் பல வண்ணங்களில் கன்றுக் குட்டிகளைக் கொடுக்கட்டும். ஒவ்வொரு நாளும் இந்திரனுக்குப் பால் கொடுக்கட்டும். ஓ பசுக்களே ஒல்லியான மனிதனைத் திடமாக்கு. அழகற்றவனுக்கு அழகைத் தாருங்கள். எங்கள் இல்லம் இன்பமான விலங்கின் களைப்பொலியால் மகிழ்ச்சியில் திகழட்டும். உன் வலிமையைக் கூடி புகழ் பாடுகிறோம்."
Source :https://himalayanacademy.com

No comments:

Post a Comment