Tuesday, February 19, 2013

காங்கயம் டு பிரேசில் - காளைகளின் ராஜா!
வளைந்து நிமிர்ந்த கூரான கொம்புகள், முதுகுக்கு மேல் அடங்காமல் ததும்பும் திமில், நடையில் ராஜ தோரணை, பார்வையில் பற்றிக் கொள்ளும் நெருப்பு, நாசித் துவாரங்களில் புயலெனக் கிளம்பும் மூச்சுக் காற்று... இந்த ஆடையாளங்களோடு ஒரு காளையைப் பார்க்கிறீர்கள் என்றால்... கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யலாம், இது காங்கயம் காளை.
“இந்தியாவில் மொத்தம் நாற்பத்து ரெண்டு வகையான மாடுகளின் இனங்கள் இருக்கின்றன’ என்கிறார் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி.
“தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் காங்கயம் இன மாடுகள், சோழ மண்டலம் மற்றும் நெல்லைச் சீமையில் உம்பளச்சேரி இனம், அந்தியூர்ப் பகுதியில் பங்கூர் இனம், தேனியில் மலை மாடு... போன்ற வகைகள் இருக்கின்றன. என் தாத்தா ராவ்பகதூர் நல்லத்தம்பி மன்றாடியார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக அமிர்த மகால் என்ற இன மாட்டினை கொண்டு காங்கயம் காளைகளை அழகுபடுத்தினார். ஆனால், காங்கயம் கலப்பினம் அல்ல’ என்கிறார் இவர்!
“கடுமையான வெய்யிலில் தொடர்ந்து பன்னிரண்டு மணி நேரங்களுக்கு வேலை செய்யும் திறன் கொண்டவை காங்கயம் காளைகள். நான்கு டன்கள் வரைக்கும் எடைகளை இழுத்துச் செல்லும் திறனும், தெம்பும் இதன் வீர அடையாளங்கள். கழுத்தளவு தண்ணீரில் கூட இவை பாரங்களை அனாயாசமாக இழுத்துச் செல்வது ஆச்சர்யமான அதே நேரத்தில் அழகான காட்சி. எல்லாவற்றையும்விட எப்பேர்பட்ட வறட்சியையும் தாங்கும் சக்தி கொண்ட காங்கயம் இனம் மாடுகள், பஞ்சக் காலத்தில் பனையோலைகளைத் தின்றுகூட தன்னைத் தக்க வைத்துக் கொள்வதில் கில்லாடிகள். இவை இயல்பிலேயே அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை. அதனால் அரிதிலும் அரிது, காங்கயம் காளைகள் நோய்வாய்ப்படுதல் அரிது!’ என்கிற கார்த்திகேய சிவசேனாபதி, “இந்தக் காங்கயம் இனக் காளைகளின் விந்தினை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று கலப்பினங்களை உற்பத்தி செய்வது தேசிய பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 2002ன்படி குற்றம்’ என்கிறார். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரேசில் நாட்டுக்குக் கொண்டு சென்று கலப்பின உற்பத்தி மாடுகளை உருவாக்கி இருக்கின்றனர். அதற்கு பிரம்மன் இன மாடுகள் என்று பெயராம்!
“மாடுகளில் இனக் கலப்பு செய்வதை சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி நிலையம் வரவேற்பதில்லை. இனக்கலப்பு செய்வதன் மூலம் பிறக்கும் கன்று தன் வீரியத் தன்மையை இழந்துவருகிறது. ஓர் இனம் உருவான, நிலத்தின் தட்பவெட்பத்துக்கு ஏற்ப அந்த இனத்தின் ஜீன் கூறுகள் அமைந்திருக்கும். அதை மாற்ற முயல்வது அறிவீனம் மட்டுமல்ல, இயற்கைக்கு எதிரானதும்கூட. 1990 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்சம் எண்ணிக்கையில் இருந்த காங்கயம் இன மாடுகள் 2000 ஆண்டு 5 லட்சமாகக் குறைந்து தற்போது சுமார் இரண்டரை லட்சத்துக்குள் இருப்பதாகக் கூறுகின்றன கணக்கெடுப்பு. இவை அதிகம் பால் தராது. எனவே, பால் வியாபார ரீதியாக யாரும் இந்த இன மாடுகளை வளர்க்க விரும்பவில்லை. மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருகின்றன. இவை விரும்பிச் சாப்பிடும் கொலுக்கட்டை புல், செப்பு நெருஞ்சிங்காய், வேலங்காய் போன்றவை அழிந்து வருகின்றன. எனவே, காங்கயம் இன மாடுகளின் எண்ணிக்கையும் குறைகின்றன. இவை மாற வேண்டும். இந்த இனம் அழிவதைத் தடுக்கு 2005இல் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி நிலையம், இம்மாடுகளை வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. ஆர்வமுள்ள ஏழைகளிடம் இந்த இனத்தின் கன்றுகள் கொடுக்கப்பட்டு எட்டு அல்லது பத்து மாதம் அவர்கள் வளர்த்துக் கொடுத்தால் அதனை விற்று வளர்த்தவர்களுக்குப் பாதி தொகை அளிக்கிறோம். இம்மாடுகளின் மேய்ச்சல் நிலமான கொறங்காடுகளை பட்டா நிலமாக்க அரசு ஆலோசித்து வருகிறது. அவற்றை மேய்ச்சல் நிலமாகவே விட்டுவிட அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம். காங்கயம் மாடுகளுக்கான அருங்காட்சியகம் அமைக்கும் திட்டமும் இருக்கிறது’ என்கிறார் கார்த்திகேயசிவ சேனாபதி.
வள்ளுவர் செல்வத்தைக் குறிப்பிட குறள்களில் “மாடு’ என்றுதான் குறிப்பிடுகிறார். மாடு என்றால் செல்வம், அதுவும் காங்கயம் மாடுகள் நம் பராம்பரிய பெருஞ்செல்வம்! 

நன்றி:தினமலர் 

No comments:

Post a Comment