Thursday, February 21, 2013

பால் பண்ணை


தார்பார்க்கர் பண்ணைக்குள் ஓர் உற்சாக உலா
அதிசயம், ஆனால் நம்ப முடியவில்லை' என்கிற மாதிரி... 'பத்து லிட்டர் பால் கறக்கும் நாட்டுமாடு; கலப்பின மாடுகளை மிஞ்சும் கிர் மாடுகள்' என்பது போன்ற செய்திகளை சில நேரங்களில் கேள்விப்படுவது உண்டு. ஆனால், இதை எங்கே போய் உறுதிப்படுத்திக் கொள்வது என்பதுதான் தலைசுற்றல் விஷயமாக இருக்கும்.
"நாட்டுரக மாடுகள் விஷயத்தைப் பொறுத் தவரை தலைசுற்றலே தேவையில்லை. சொல்லப் படுவது அத்தனையும் உண்மையே... இதை உறுதிப்படுத்திக் கொள்ள வேறு எங்கும் அலைய வேண்டாம். நேரடியாக என் பண்ணைக்கு வந்தால் போதும்" என்று அழைக்கிறார் செங்கல்பட்டு விவசாயி முகுந்தன்.
செங்கல்பட்டு அருகே ஓடிக்கொண்டிருக்கும் பாலாற்றின் கரையில் இருக்கும் சின்னஞ்சிறு சிறிய கிராமம் சிதண்டிமண்டபம். இங்கேதான் இருக்கிறது முகுந்தனுடைய பண்ணை. இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட தார்பார்க்கர் மாடுகள் சுதந்திரமாக மேய்ந்து கொண்டிருக்க... கன்றுக் குட்டிகளைத் தடவி கொடுத்தபடியே தொடர்ந்தார் முகுந்தன்.
"பரம்பரையாக விவசாயம் செய்து வரும் குடும்பம்தான் எங்களுடையது. அதேபோல மாடுகளையும் வளர்த்து வருகி றோம். முன்பு நிறைய மாடுகள் இருந்தன. பிறகு ஒன்றிரண்டு மாடுகள் எனச் சுருங்கிவிட்டன. நாட்டு மாடு மற்றும் ஜெர்ஸி மாடு கலந்து பிறந்த கலப்பின மாடுகளைத்தான் பெரும்பாலும் வளர்த்தோம். ஒரு நாளைக்கு 6 முதல் 8 லிட்டர் வரை பால் கிடைத்தது. அதுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், வேறு பல தொல்லைகள் வந்தன. கலப்பின மாடுகள் அடிக்கடி நோய்வாய்ப் பட்டன. இரண்டாம் தலைமுறை மாடுகள் சரியான காலத்தில் கருத்தரிக்க முடியாமல் கஷ்டப்பட்டன.
இயற்கை விவசாயத் தேடலில் சிக்கிய தார்பார்க்கர்!
இந்தச் சமயத்தில்தான் பெரிய அளவில் இயற்கை வழியில் காய்கறி சாகுபடி செய்யும் முயற் சிகளில் நான் இறங்கியிருந்தேன். அதனால், இயற்கை உரங்களுக்காக மாட்டுப் பண்ணை ஒன்றையும் உருவாக்க நினைத்தேன். என்ன மாதிரியான மாடுகளை வளர்ப்பது என்கிற கேள்வி எழுந்ததும் பல வகையான மாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தென்னிந் தியாவில் காணப்படும் பல வகை நாட்டுரக மாடுகள் உழவு மாடுகள்தான். அவை நிறைய பால் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், நிலத்தை உயிர்ப்போடு வைத்திருக்க அந்த மாடுகள் மிகவும் உதவும். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் இந்த நாட்டு மாடுகளை வளர்த்துதான் நிலத்தை உயிர்ப்போடு வைத்திருந்தனர்.
ஆனால், வடநாட்டு மாடுகளான சிந்தி, கிர், தார்பார்க்கர், சாகியவால் போன்றவை சிறந்த உழவு மாடுகள் மட்டுமல்ல, அதிக அளவில் பால் கொடுக்கவும் செய்யும். கிர் மாடுகளில் சில, 25 லிட்டர் பால்கூட கறக்கும் என்கிறார்கள். இந்த ரகங்களில் இன்னொரு சிறப்பம்சம், பாலில் கொழுப்புச்சத்து 4.5% அளவுக்கும் குறைவில்லாமல் இருக்கும். கருத்தரிப்பதில் பிரச்னை என்கிற பேச்சே பெரும்பாலும் வராது. வெளிநாட்டு மாடுகளைப் போல ஏ.ஸி, பேன் என்று நவீன வசதிகளை செய்து கொடுக்க வேண்டியதில்லை. 108 டிகிரி வெயில் அடித்தாலும் தார்பார்க்கர் மாடுகள் சளைக்காமல் மேய்ந்துகொண்டிருக்கும். நாள் கணக்கில் மழை பெய்தாலும் அப்படியே கிடக்கும். இந்தப் புல்லைத்தான் சாப்பிடுவேன், அந்த இடத்தில்தான் மேய்வேன் என்றெல்லாம் அடம் பிடிக்காது. கொடுத்ததைச் சாப்பிட்டுவிட்டு நிறைய பால் கொடுக்கும். எல்லாவற்றும் மேலாக அடிக்கடி நோய்வாய்ப்படுதல் என்கிற பிரச்னை இல்லவே இல்லை.
இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு, 'இத்தனைச் சிறப்புகள் கொண்ட தார்பார்க்கர் மாடுகளை நாம் ஏன் வளர்க்கக்கூடாது?' என்று நினைத்தேன். இந்த ரக மாடுகளை ஏற்கெனவே வாங்கி வளர்த்த அனுபவம் கொண்ட என் நண்பர் மணிசேகர் உதவியோடு ராஜஸ்தானுக்குப் போய், தார்பார்க்கர் மாடுகளை வாங்கி வந்தேன். அவற்றை வளர்க்க ஆரம்பித்தபிறகு, அந்த மாடுகள் பற்றி சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மை என்பதை நானே நேரடியாக உணர்ந்துகொண்டேன். இன்று நூற்றுக்கும் அதிகமான தார்பார்க்கர் மாடுகள் என்னிடம் இருக்கின்றன. இதில் நாற்பது பசு, மற்றதெல்லாம் காளைகள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சில மாடுகள் குரல் கொடுக்க... அவற்றுக் கெல்லாம் புல்லை அள்ளிப் போட்டபடியே தொடர்ந்தார் முகுந்தன்.
இரண்டு லிட்டர் கறந்தாலே போதும்!
"நான் வாங்கி வந்த மாடுகள் முதல் தடவை கன்று ஈன்ற பிறகு 12 லிட்டருக்கும் அதிகமாக பாலைக் கொடுத்தன. இரண்டாம் ஈத்துக்குப் பிறகு பாலின் அளவு கொஞ்சம் குறைந்தது. அதேசமயம் தரத்தில் எந்தக் குறையும் இல்லை. என்னிடம் இருக்கும் மாடுகள் சராசரியாக 8 லிட்டர் பால் கறக்கின்றன. 2 லிட்டர் பாலை கன்றுக்குட்டி குடிக்க விட்டுவிடுகிறோம்.
நாங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு நிறைய தீனி கொடுக்கிறோம் என்று சொல்ல முடியாது. கம்பு, சோளம், வைக்கோல், புல் என ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 40 முதல் 50 ரூபாய் வரை செலவு செய்கிறோம். எங்களைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 2 லிட்டர் பால் கறந்தாலே அந்தச் செலவை ஈடுகட்டிவிடும். ஒரு லிட்டர் பால் 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். அதுபோக அந்த மாட்டிடம் இருந்து கிடைக்கும் சாணம், சிறுநீர் போன்றவையெல்லாம் எங்களுக்கு லாபம் தான். பால் மூலம் கிடைக்கும் வருமானம் போனஸ்தான். அதைவிட பெரிய வருமானம்.... இயற்கை உரம். அதை வைத்துதான் இத்தனை பெரிய தோட்டத்தில் காய்கறி சாகுபடி நடக்கிறது. சாணம், சிறுநீர் போன்றவற்றை அப்படியே சேமித்து, பாசன நீருடன் வயலுக்குப் பாய்ச்சிவிடு கிறேன். இதன் காரணமாக காய்கறித் தோட்டம் செழிப்பாக இருக்கிறது" என்றார் பெருமிதமாக!
30 மாடு... 20 ஏக்கர் காடு!
அடுத்து, தார்பார்க்கர் மாடுகளை வளர்த்தெடுப் பது பற்றி விவரித்தார் முகுந்தன். "இந்த மாடுகள் கும்பலாக அலைந்து திரிந்து இரை தேடிச் சாப்பிட வேண்டுமென்று நினைப்பவை. எனவே, கொட்டில் முறையைவிட மேய்ச்சல் முறையே சிறந்தது. தார்பார்க்கர் மாடுகளை வளர்க்க நினைத்தால், உங்களிடம் நிறைய இடம் இருக்க வேண்டும். 30 மாடுகள் வளர்க்க, 20 ஏக்கர் நிலமாவது வேண்டும். மாடுகள் மீது நன்றாக சூரிய வெளிச்சம் பட வேண்டும். அப்போதுதான் மாடுகளுக்கு எந்த நோயும் வராது. மாடுகளுக்கென நீங்கள் ஒதுக்கும் இடத்தில் உங்கள் மாட்டுக்குத் தேவையான தீவனப் புற்களை வளர்த்துக் கொள்ளலாம். அப்படி வளர்ப்பதன் மூலமே மாடுகளுக்கு ஆகும் செலவை உங்களால் கணி சமாகக் குறைக்க முடியும். மாட்டுக்குத் தேவையான எல்லாவற்றையும் வெளியிலிருந்து வாங்கினால், நீங்கள் இதில் நிச்சயம் வெற்றி காண முடியாது. கம்பு, சோளம், பிண்ணாக்கு போன்றவற்றை மட்டுமே மற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொள் ளலாம். மேய்ச்சலுக்குத் தேவையான இடமில் லாதவர்கள் தார்பார்க்கர் மாடுகளை வளர்க்க நினைப்பது பற்றி யோசிக்ககூட வேண்டாம்" என்று கண்டிப்பான குரலில் சொன்னவர், பால் விற்பனை பற்றியும் சொன்னார்.
தயிருக்கு ரசிகர் மன்றம்!
"தார்பார்க்கர் மாடுகள் தரும் பால் மிகவும் சுவை நிறைந்ததாக இருக்கும். சென்னையில் எனக்குத் தெரிந்த சிலரிடம் இந்தப் பாலை ஒருமுறை கொடுத்தேன். தொடர்ந்து அந்தப் பால் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். எங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் பால், பெரும்பாலும் சென்னையில் உள்ளவர் களுக்குத்தான் போகிறது. ஆனால், கேட்கிற எல்லோருக்கும் கொடுக்க முடிவதில்லை.
இந்தப் பாலில் தயாராகும் தயிரின் சுவையும் அற்புதமாக இருக்கும். செங்கல்பட்டில் உள்ள ஒரு ஓட்டலில் எங்கள் தயிரைத்தான் தினசரி வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். அதற்கு பெரும் ரசிகர் கூட்டமே இருப்பதாக ஓட்டல் உரிமையாளர் சொல்லியிருக்கிறார்" என்று சொல்லும் முகுந்தன், தார்பார்க்கர் மாடு வளர்க்க நினைப்பவர்களுக்கு சில யோசனை களையும் முன் வைத்தார்.
கூட்டுறவுச் சங்கத்திடம் விற்காதீர்கள்!
"உங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் பாலை கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, நேரடியாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியுமா என்று பாருங்கள். நான் இப்படிச் சொல்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று, நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் உங்களுக்கு நல்ல விலை கிடைக்கும். உடனுக்குடன் பணமும் கிடைக்கும். தவிர, உங்கள் பால் வேறு மாடுகளின் பாலோடு சேர்ந்து தனித்தன்மையை இழக்காமல் இருக்கவும் இது உதவும்.
பிளாஸ்ட்டிக் பால் பாக்கெட்டுகளின் ஆதிக்கம் பட்டி தொட்டிகளில் எல்லாம் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் நம்மிடம் யார் பால் வாங்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. தமிழ்நாட்டில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய புதிய குடியிருப்புகள் உருவாகியுள்ளன. சத்தான, நல்ல பால் வேண்டும் என்று மக்களும் ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாலின் தரத்தில் மட்டும் எந்தக் குறையும் இல்லாமல் உங்களால் கொடுக்க முடியும் எனில், 100 லிட்டர் பாலைக்கூட உங்களால் நிச்சயம் விற்க முடியும். பால் மட்டுமல்ல, நீங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளையும் விற்க இது ஒரு நல்ல வாய்ப்பு" என்று தன்னுடைய அனுபவத்திலிருந்து எடுத்து வைத்தார் முகுந்தன்.
'பாலை பெருக்குகிறேன் பேர்வழி' என்று அந்நிய நாட்டு மாடுகளை இறக்குமதி செய்வதற்கு அளவில்லாத உதவிகளைச் செய்யும் அரசு, பரந்துவிரிந்த பாரத தேசத்துக்குள்ளேயே இருக்கும் இத்தகைய நாட்டுமாடுகளை கொஞ்சம் ஏறெடுத்துப் பார்க்கலாமே!
40 ஆண்டுகள் நிற்கும் கொட்டகை!
மாட்டுப் பண்ணையை பெரும்பாலும் கீற்று மற்றும் வைக்கோல் வேயப்பட்ட கொட்டகையில்தான் அமைப்பார்கள். அல்லது "ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்' எனப்படும் கல்நார்ப் பலகை கொண்டு மைத்திருப் பார்கள். முகுந்தனோ கொஞ்சம் வித்தியாசமாக ஃபெரோ சிமென்ட் (Ferrocement) பயன்படுத்தி மாட்டுக் கொட்டகையை அமைத் திருக்கிறார்.
"அது என்ன ஃபெரோ சிமென்ட்?' என்று அவரிடம் கேட்டோம்.
"ஃபெரோ சிமென்ட் என்பது இரும்பு மற்றும் சிமென்ட் கொண்டு உருவாக்கப்படும் பலகை தான். ஆனால், ஆஸ்பெஸ்டாஸில் உள்ள தீமை தரும் விஷயம் இதில் இல்லை. பல வெளிநாடுகளில் ஆஸ்பெஸ்டாஸைத் தடை செய்திருக்கிறார்கள். ஃபெரோ சிமென்ட்டுக்கு அப்படித் தடை ஏதும் இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் பலகையின் விலை ஒரு சதுர அடி 10 ரூபாய். ஃபெரோ சிமென்ட் பலகை 30 ரூபாய். விலை அதிகம்தான் என்றாலும், குறுக்குவாட்டில் தாங்கி நிற்க எந்த முட்டும் கொடுக்காமல் இந்தப் பலகையை நிறுத்த முடியும். ஆஸ்பெஸ்டாஸ் பலகையை அப்படி நிறுத்த முடியாது. இன்னொரு முக்கியமான விஷயம், ஆஸ்பெஸ்டாஸ் 5 ஆண்டு காலம் மட்டுமே பயன் தரக் கூடியது. ஃபெரோ சிமெண்ட் பலகையோ 40 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கக் கூடியது பராமரிப்புச் செலவு ஏறக்குறைய பூஜ்யம் என்றுதான் சொல்லவேண்டும். ஃபெரோ சிமெண்ட் பலகையைக் கொண்டு செட் அமைப்பது குறித்து பாண்டிச்சேரி அருகேயுள்ள ஆரோவில்லில் பயிற்சி கொடுக்கிறார்கள்’’ என்றார் முகுந்தன்
Source :. முன்பு  ஆல் இடுகையிடப்பட்டது

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஐயா சாஹி ரக மாட்டின் கன்று கிடைக்குமா

    ReplyDelete