Saturday, February 2, 2013

தின மணியின் -தலையங்கம்:விவசாயத்துக்கு அப்"பால்


இந்திய விவசாயத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாகவும், விவசாயிகளின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் உறவாகவும் தொடர்வது கால்நடைப் பராமரிப்பு.
இந்திய விவசாயத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாகவும், விவசாயிகளின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் உறவாகவும் தொடர்வது கால்நடைப் பராமரிப்பு. சமீபகாலமாக, விவசாயம் பின்னடைவுகளைச் சந்தித்துவரும் வேளையிலும், இந்தியாவில் பால் உற்பத்தி கணிசமாக அதிகரித்திருக்கிறது என்பதும், இறைச்சி ஏற்றுமதியும் கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்திருக்கிறது என்பதும் வெளியில் பேசப்படாத வெற்றிகள்.
இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி, 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இரண்டு பங்கு அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமா? 2007-08-ம் நிதியாண்டுக்கான புள்ளிவிவரப்படி, அரிசி (ரூ. 95,038 கோடி), கோதுமை (ரூ. 71,579 கோடி), கரும்பு (ரூ. 33,691 கோடி) ஆகியவற்றின் உற்பத்தி மதிப்பைவிட, பால் உற்பத்தியின் மதிப்பு (ரூ. 1,62,136 கோடி) அதிகம். சொல்லப்போனால், இந்தியாவின் மிகப்பெரிய விவசாய வளம் எது என்று கேட்டால், பால்வளமாகத்தான் இருக்கும்.
இவ்வளவு இருந்தும், பால் உற்பத்தியும், கால்நடைப் பராமரிப்பும் நமது அரசின் சிறப்புக் கவனத்தைப் பெறவில்லை என்பது மட்டுமல்ல, விவசாயிகள் மத்தியிலும் பெற வேண்டிய முக்கியத்துவம் கிடைக்கப் பெறாமல் தொடர்கிறது. விவசாயிகள் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை, விவசாயத்துடன் இணைந்த அல்லது விவசாயம் சார்ந்த ஒன்றாகத்தான் கருதுகிறார்களே தவிர, முன்னுரிமை பெற்ற ஆதாயம்தரும் செயல்பாடாக ஏனோ கருதுவதில்லை.
அரை நூற்றாண்டுக்கு முந்தைய இந்தியச் சூழலில், கிராமங்களைச் சுற்றிலும் ஏராளமான மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. மாடு அல்லது ஆடு மேய்ப்பது என்பதேகூட ஒரு பிழைப்பாக இருந்த காலம் உண்டு. நெல் பயிரிடும்போது கிடைக்கும் துணைப்பொருளான வைக்கோலுக்கு மிகவும் குறைவான விலைதான் கிடைத்தது என்பதுடன், விவசாயியைப் பொறுத்தவரை வயலில் கிடைத்த வைக்கோலை வீணாக்காமல் உபயோகிப்பதற்குக் கால்நடை வளர்ப்பு என்கிற நிலைமை இருந்த காலம் அது.
இன்றைய நிலைமை அதுவல்ல. விளைநிலங்கள் குறைந்து வருகின்றன என்பதுடன், அதிகரித்த கரும்பு, வாழை போன்ற பணப்பயிர் விவசாயம், வைக்கோல் விலையை அதிகரித்து விட்டிருக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கமும், வளர்ச்சிப் பணிகளும் மேய்ச்சல் நிலங்களை வெகுவாகக் குறைத்து விட்டிருக்கின்றன.
இந்த நிலையில், கால்நடைப் பராமரிப்புக்காக அத்தியாவசியத் தேவைகள் என்று கருதப்படும், புல், வைக்கோல், கால்நடைத் தீவனம் போன்ற எல்லாமே இலவசமாக இருந்ததுபோய் ஒரு செலவினமாக மாறிவிட்டிருக்கிறது.
பராமரிப்பு தவிர வேறு எந்தவிதச் செலவும் இல்லாமல் நடத்தப்பட்டு வந்த கால்நடை வளர்ப்பு என்பதை இனிமேல் நினைத்துப் பார்க்க முடியாது என்கிற நிலைமை. இனிமேல், பால் உற்பத்தியையும், கால்நடை வளர்ப்பையும் ஒரு முழுநேரத் தொழிலாக அல்லது விவசாயத்துக்கு நிகரான முக்கியத்துவமுள்ள ஒரு தொழிலாக இந்திய விவசாயி கருதியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.
பால் உற்பத்திக்காகவே புல் வளர்ப்பு, கால்நடைகளின் மருத்துவப் பராமரிப்பு, கால்நடைத் தீவனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது என்பது விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். பால் உற்பத்தியை அதிகரிக்க அதிக அளவில் பால் சுரக்கும் பசு மற்றும் எருமை இனங்களை வாங்குவதில் முதலீடு செய்வதுடன் நின்றுவிடாமல், புல், வைக்கோல், மருந்துகள், கால்நடைத் தீவனங்கள் ஆகியவற்றிலும் முதலீடு செய்தால்தான், கால்நடை வளர்ப்பு என்பது பயனளிப்பதாக இருக்கும்.
பால் உற்பத்தியிலும், கால்நடைப் பராமரிப்பிலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு காட்டிய ஆர்வம்தான் இன்று பால் உற்பத்தி, ஏனைய விவசாய உற்பத்திகளைவிட அதிகமாக இருப்பதன் காரணம். கடந்த 30 ஆண்டுகளாக, நாம் தனியார் கால்நடைப் பண்ணைகளை ஊக்குவிப்பதில் காட்டும் முனைப்பை, கால்நடைப் பராமரிப்பை ஒரு தனிப்பட்ட விவசாயியை முன்னிறுத்தித் தருவதில் காட்டாமல் விட்டிருக்கிறோம்.
கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்பது கிராமத்துக்கு கிராமம் அமைக்கப்பட்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் பரவலாகக் கலப்பின கறவை மாடுகளை வாங்கவும், பராமரிக்கவும் கடனுதவி வழங்கப்பட்டு எழுபதுகளில் "வெள்ளைப் புரட்சி' என்கிற பெயரில் பால் உற்பத்திப் பெருக்கத்துக்கு வழிகோலியதை நாம் மறந்து விட்டோம் என்றே தோன்றுகிறது.
இன்றைய நிலையில் தேசிய அளவிலான பால் உற்பத்தி என்பது சுமார் 100 மில்லியன் டன்கள். இதில் பால் பண்ணைகளின் பங்கு வெறும் 15 விழுக்காடுதான். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சேகரிக்கப்படும் பாலின் அளவு வெறும் 9 மில்லியன் டன்கள் மட்டுமே. இன்னொரு புள்ளிவிவரம்கூட இருக்கிறது. தேசிய அளவிலான பால் உற்பத்தியின் சரிபாதி, குஜராத் மாநிலத்தின் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கமும், கர்நாடக அரசின் நந்தினி பால் பண்ணையும் தரும் பங்களிப்பு.
கூட்டுறவு முறையில் பால் பண்ணைகள் கிராமம்தோறும் அமைப்பதும், அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை அந்தச் சங்கங்களுடன் இணைந்து கால்நடைகளின் மருத்துவத் தேவைகளையும், இனப்பெருக்கத் தேவைகளையும் பூர்த்தி செய்வதும், கால்நடைப் பராமரிப்பை ஒரு விவசாயத் தொழிலாகக் கருதி வங்கிகள் கடனுதவி வழங்குவதும்தான் பால் உற்பத்தி பெருகுவதற்கும், பாலின் விலை கட்டுக்குள் அடங்கி இருப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கும். சில தனியார் பண்ணைகள், இடைத்தரகர்கள் மூலம் பால் சேகரிப்பது, அரசுப் பண்ணைகள் தாங்களே கால்நடைகளை வளர்ப்பது போன்ற போக்கு பாலின் விலையை அதிகரிக்க மட்டுமே உதவும்.
கால்நடைகளின் பராமரிப்பில் விவசாயிகளை அதிக கவனம் செலுத்த ஊக்குவிப்பது, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் உற்பத்தி மற்றும் சேகரிப்பை உறுதிப்படுத்துவது, வங்கிகளின் பங்களிப்பு ஆகியவை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல முடுக்கிவிடப்பட்டால், உலகத்துக்கே பால் விநியோகம் செய்யும் நிலைமைக்கு இந்தியா உயர முடியும். சராசரி இந்திய நகர்ப்புறவாசிக்குக் குறைந்த விலையில் பால் கிடைக்கவும் வழிகோல முடியும்...
விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது!

நன்றி தின மணி

No comments:

Post a Comment