Thursday, January 3, 2013

“தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்” – ஒரு விளக்கம்



பரமாச்சார்ய மஹா ஸ்வாமிகள்
ஜெகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி அருளிய
தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்” – ஒரு விளக்கம்
1. பிறருக்கு நல்லது செய்ய கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும், தக்க முறையில் பயன்படுத்திக் கொள்வது, மனிதராகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமையாகும். உடலாலும், பணவசதியினாலும், சமுதாயத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கினாலேயும், சமுதாய சேவை செய்யும் உணர்வினை நமது இதயத்தில் வாழச் செய்யலாம். (-ம் பண வசதி குறைவாக உள்ளவர்கள், நாட்டிற்கு உண்மையாக சேவை செய்வதன் மூலம், பிறருக்கு சேவை செய்யலாம்; பண வசதி உள்ளவர்கள், தங்கள் செல்வத்தின் மூலம், இல்லாதவர்களுக்கு உதவலாம். செல்வாக்கு உள்ளவர்கள், தங்கள் செல்வாக்கினை, தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கைநிலையினை உயர்த்தப் பயன்படுத்தலாம்.)
2. மனிதன் தானாக, ஒரு புல்லின் இதழைக் கூட உருவாக்க இயலாது. நமக்கு வேண்டிய அன்றாட உணவினையும், உடைகளையும், அளித்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்காமல் இருப்போமேயானால், மிகப் பெரிய, செய்நன்றி மறந்த குற்றமிழைத்த உணர்வுடையவர்களாகக் கருதப்படுவோம்நாமுண்ணுவதில் மிகச் சிறப்பானதும், தேர்ந்தெடுக்கப்பட்டதையுமே அவனுக்கு (இறைவனுக்கு) நிவேதனமாக்க வேண்டும். (நிவேதனம் என்றால் நன்றியுடன் அறிவித்தல் எனப் பொருள்)
3. தன்னலமில்லாத அன்பு (பிரேமை) இல்லாத வாழ்க்கை வீண். அனைத்து மனித உயிர்கள்; பறவைகள் மற்றும் விலங்கினங்களிடத்தும் பிரேமை அல்லது தூய அன்பினை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. தரும சிந்தனைக்கு இடமில்லாத மனிதர்கள் பாடுபட்டு, சிறுகச் சிறுக சேமித்து வைத்திருக்கும் சொத்தானாலும்,, அவர்கள் மன நிம்மதி கெடும் வகையில் பொதுவாக அவனது வாரிசுகளால் உதாரித்தனமாக செலவழிக்கப்படும். இயல்பாகவே பிறருக்கு உதவுகிற நாட்டமுடைய பரோபகாரியின் குடும்பங்கள் எந்நாளும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்படிக்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும்.
5. பாராட்டத்தக்க வகையில் செயல் செய்திருக்கிற ஒரு மனிதன், அடுத்தவர்களின் பாராட்டுக்களை விரும்பிக் கேட்டாலோ அல்லது தானாக தனது செயல்களைக் குறித்து தற்பெருமை கொண்டாலோ அவனது நற்செயல்களினால் உண்டாகும் மதிப்பினை இழப்பான்.
6. நடந்து முடிந்த செயல்களைக் குறித்து வேதனையடைவதனால் எந்தவித நண்மையும் உண்டாகாது. நல்லதையும் தீயதையும் வேறுபடுத்தி உணரக் கற்றுக் கொண்டோமானால், அது மறுபடியும் தீமையினால் நம் நிலை தடுமாறாது நம்மைப் பாதுகாத்திருக்கும்.
7. நாம் நமது வாழ்நாளின் நாட்களை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும். நமது சொந்த விருப்பங்களுக்கல்லாது, பிறரின் நல்வாழ்விற்குத் துணையாக இருக்கும் செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
8. அன்றாட வாழ்வில் நமக்காக விதிக்கப்பட்டிருக்கிற அனைத்துக் கடமைகளையும் (கர்மானுஷ்டானங்களை) இறைவனிடத்து முழு விசுவாசமுடன் நம்பிக்கையுடையவராக, மனம் ஒருமுகப்பட்டு (பக்தி சிரத்தையுடன்) செய்ய வேண்டும்.
9. அவரவர் தங்களது நித்திய கடமைகளை (கர்மானுஷ்டானங்களை) தவறாது செய்வதன் மூலமே, அவர்களின் (வாழ்வின்) குறிக்கோள்களை அடைகிறார்கள்.
10. நமது அனைத்துத் துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும், தெளிவான வழியுரைப்பது, ஞானம் (பெறுவது) ஒன்றேயாகும்!

No comments:

Post a Comment