Sunday, January 27, 2013

SRI RAMAGOPAALAN ON WHITE REVOLUTION


இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!

வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திடும் முதல்வரைப் பாராட்டுகிறோம்..


வெண்மைப் புரட்சிக்கு உதவிட, மருத்துவ வசதி இல்லாத கிராமங்கள் பயன்பெற 50 கால்நடை கிளை நிலையங்களைத் திறக்க நிதி ஒதுக்கீடு செய்தும், கால்நடை பயிற்சி, ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கவும் உத்தரவிட்ட தமிழக முதல்வரை இந்து முன்னணி பாராட்டுகிறது.

தமிழகக் கிராமங்களில் விவசாயத்திற்கு அடிப்படையான கால்நடைகள் பெருகவும், அதனுடன் பால் உற்பத்தி பெருகவும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முயற்சி நல்ல பலனை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெண்மைப் புரட்சிக்கு உதவிடும் முதல்வர் அவர்கள் கூட்டுறவு பால் கொள்முதல் நிலையங்கள் நன்கு செயல்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளார் என்பது வரவேற்கத்தக்கது. சுகாதார மையங்கள் (பிரைமரி ஹெல்த் சென்டர்) போல் ஒவ்வொரு கிராமத்திலும், பகுதிகளிலும் கால்நடை மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.

தமிழக அரசு அளித்துள்ள புள்ளிவிவரப்படி, நமது மாநிலத்தில் ஒரு கோடியே 20 லட்சம் கறவை மாடுகளும்,இருபது லட்சம் எருமை மாடுகளுமே உள்ளன. முதல்வரின் விலையில்லா கறவை மாடு வழங்கும் திட்டத்திற்கு மாடுகள் வாங்க பயனீட்டாளர்கள் அரசின் உதவியோடு ஆந்திராவிற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பசு மற்றும் மாடுகள் வெட்டுவதைத் தமிழகம் முழுவதும் தடை செய்வதுடன், கேரளாவிற்குக் கசாப்பிற்கு லாரிகளில் மாடுகள் கடத்தப்படுவதையும் தடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. அப்போதுதான் முதல்வரின் செயல்பாடு முழுமையான பலன் தரும். மாடு வெட்டுவதையும், அண்டை மாநிலங்களுக்கு லாரிகளில் கடத்தப்படுவதையும் முழுமையாகத் தடை செய்து கர்நாடக அரசு சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தி வருவது எடுத்துக்காட்டு.

நமது தமிழகத்திற்குச் சிறப்பு சேர்க்கும் நாட்டுப் பசு, காங்கேயம், மலைமாடுகள் போன்ற பல வகையானவை இன்று அழிந்து வரும் நிலையில் உள்ளன. இவற்றைப் பாதுகாக்க, பெருக்க ஆவன செய்ய வேண்டும்.

பசுக்கள் பால் வளத்திற்கு மட்டும் என்ற நிலையிலிருந்து பாலோடு, இயற்கை பசுஞ்சாண உரம், பஞ்சகவ்ய பூச்சிக்கொல்லி மருந்து, பசுவிலிருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் மற்றும் சாண எரிவாயு முதலானவை பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டும்.பசும்பாலுக்குக் கிடைக்கும் விலைபோல் பசுவின் கோமூத்திரத்திற்கும் அதிக விலை கிடைக்கிறது.

இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கோசாலை வைத்திருப்போர், பசு ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டுள்ளோர் முதலானவர்களைக் கொண்டு குழு அமைத்து கிராமந்தோறும் முகாம்களை நடத்திட வேண்டும்.சாண எரிவாயு திட்டத்தைக் கிராமந்தோறும் செயல்படுத்தி, குழாய்கள் மூலம் இணைத்திட்டால் வருங்காலத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்பது மட்டுமல்ல சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதுகாக்கப்படும்; கிராமப் பொருளாதாரமும் மேம்படும்.

இத்தகைய நடவடிக்கையால் நமது விவசாயப் பொருட்கள் நச்சுப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் தீங்கு இல்லாமலும், வெளிநாடுகளில் இயற்கை உணவுக்கு (ஆர்கானிக்) நல்ல கிராக்கி இருப்பதால் வருமானமும் பெருகும். கிராமங்கள் செழித்தால் மட்டுமே தமிழகம் பொருளாதார மேம்பாடு அடையும்.வேலை இல்லாததாலும், பொருளாதார முன்னேற்றம் இல்லாமையாலும் நகரங்களை நோக்கி வருவது நிற்பதோடு,கிராமங்கள் புனர்நிர்மாணம் அடையும்.

இதற்கு முதலும், அடிப்படையுமான அவசியமும் அவசரமுமானது பசுவதைத் தடையும், மாடுகள் கடத்தல் தடை செய்யப்படுவதும்தான் என்பதை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

Source:http://rsschennai.blogspot.in

No comments:

Post a Comment