Wednesday, March 13, 2013

கண் கெடுமுன் ஞானம்!-தினமணி-தலையங்கம் 14-3-2013


கண் கெடுமுன் ஞானம்!

இந்த மசோதா குறித்து யாரும் பேசவில்லை; விவாதிக்கவில்லை; மசோதா தாக்கல் செய்யப்பட்டதுகூட பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகம்தான். இருப்பினும், இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட்டு, நாளையே அமலுக்கு வந்தாலும் அதற்காக இந்திய மக்கள் நம் அரசியல்வாதிகளுக்கு நன்றி சொல்வார்கள். அந்த அளவுக்கு அதன் தேவை இருக்கிறது.
வேளாண் உயிரி-பாதுகாப்பு ஆணையத்தின் முதன்மை நோக்கம் என்ன என்றால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உணவு தானியங்களுடனும், வெளிநாட்டவர் மற்றும் இந்தியர் சிலராலும் நம் நாட்டுக்குள் வந்து சேரும் விலங்குகள், செடிகொடிகள், பூச்சிகள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் ஆகியவற்றால் மனிதருக்கு நோய்களும், விளைநிலத்தில் களைகளும், பயிர்களைத் தின்னும் பூச்சிகளும் வந்துவிடாதபடி தடுத்தல், கட்டுப்படுத்துதல், அழித்தொழித்தல், மேலாண்மை செய்தல் ஆகியனவே இந்த ஆணையத்தின் அரும்பணி.
இந்த ஆணையம் ஏன் அவசியம்? என்று விளக்கும் மத்திய அரசு, "உலகமயமாதல் காரணமாக வேளாண்மையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பொருளாதாரத்தைக் குலைக்கும் வகையில், மோசமான களைத் தாவரங்கள், பூச்சிகள் புகுத்தப்படும் அபாயம் உள்ளது. மரபணு பொறியியல் வளர்ச்சி காரணமாக. புதிய நுண்ணுயிர்கள் இந்தியாவுக்கு வரும் ஆபத்தினை முறையாக மதிப்பிடவும், மேலாண்மை செய்யவும் வேண்டும். அதிகரித்துவரும் பயோ-டெரரிஸத்தை எதிர்கொண்டாக வேண்டும்' என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருப்பதைப் பார்க்கும்போது இதன் தேவையை எவரும் புரிந்துகொள்ள முடியும்.
வளர்ந்த நாடுகள் இத்தகைய தேவையற்ற நுண்ணுயிரிகளும், தாவரங்களும் தங்கள் மண்ணில் வந்து கலந்து, தேவையற்ற சுற்றுச்சூழல் கேட்டினையும், மக்களுக்கு உடல்நலக் கேட்டையும் விளைவிக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளன. இறக்குமதி செய்யப்படும் பொருள்களை துறைமுகம் அல்லது விமானநிலையத்திலிருந்து கொண்டு செல்லும் முன்பாக, கவனமாகக் கண்காணிக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வருவோர் கொண்டுவரும் தாவரம், வளர்ப்புப் பிராணி ஆகியவற்றை அதிக கவனத்துடன் ஆராய்கின்றன.
இந்திய விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வருவோரிடம் சோதனைகள் நடத்தப்பட்டாலும், சில அரியவகை பூச்செடி அல்லது வேறு தாவர வகைகள், விதைகளை, அதிகாரிகளை ஏமாற்றியோ, அல்லது அதிகாரிகளைச் சமாளித்தோ எளிதாகக் கொண்டு வர முடிகிறது.
இறக்குமதியாகும் கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள் அடைக்கப்பட்ட மூட்டைகளுடன் கலந்து வரும் நுண்ணுயிரி அல்லது சிறு களைச்செடி விதைகள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்துவது இல்லை. இவ்வாறாக இந்தியா வந்த தேவையற்ற தாவரங்கள் நிறைய. அவை தீமையாக அமைந்ததே அதிகம். அவற்றில் குறிப்பிடத்தக்கவை இரண்டு. ஆகாசத் தாமரை எனப்படும் பார்த்தீனியம் மற்றும் சீமைக் கருவேல மரம்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை பார்த்தீனியத்தால் நம் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. பார்த்தீனியம் ஒழிப்புக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனியாக ஒரு திட்டத்தையே அறிவித்தார்.
1960-களில் வறட்சி நிலவிய காலத்தில் கிராமத்தினருக்கு விறகு வெட்டிப் பிழைக்கவென கொண்டுவரப்பட்ட வேலிக் காத்தான் அல்லது சீமை கருவேல் எனப்படும் "புரோசோபிஸ் ஜூலிஃபுளோரா' வகை மரங்கள் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. அன்றைய நாளில் இதன் மோசமான பின்விளைவுகள் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமே சுமார் 52,000 ஹெக்டேரில் விதைக்கப்பட்ட இந்த வேலிக்காத்தானின் வேர்கள் மண்ணுக்குள் சுமார் 50 அடி ஆழம் சென்று உறிஞ்சக்கூடியவை. ஆனால், இந்தச் செடிகள் நீர்நிலைப் பகுதிகளிலேயே அதிகமாக நடப்பட்டதால், இவை ஏரி குளங்களுக்கு எதிரானதாகஅமைந்துவிட்டன. இந்த வேலிக் காத்தான் தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவிக் கிடக்கிறது.
வேலிக் காத்தான், பார்த்தீனியம் ஆகியன நம் காண நேர்ந்த தாவரங்கள். இதுபோன்று நாம் அறியவராத களைச்செடிகள், பயிர்களைத் தின்னும் பூச்சிகள் எத்தனை வந்து சேர்ந்தன, வந்துகொண்டிருக்கின்றன? யாருக்கும் தெரியாது.
நாம் கண்கொண்டு காண முடியாத மரபணு மாற்றப்பட்ட நுண்ணுயிர்கள் என்னவெல்லாம் இறக்கிவிடப்பட்டு, காற்றில் பரவிக் கொண்டிருக்கிறதோ நாம் அறியோம்! சக்திமிக்க மருந்துகளுக்கே நோய்கள் கட்டுப்படாமல் இருப்பதற்கும், தொற்றுநோய்கள் இந்தியாவில் அதிகரிப்பதற்கும், பெயர் தெரியவராத மர்மநோய்கள் தாக்கி மக்கள் இறப்பதற்கும் காரணம், நாம் அறியாமலேயே நம் நாட்டுக்குள் வந்த நுண்கிருமிகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட நுண்ணுயிர்கள் என்று சொல்வதற்கு இடம் இருக்கிறது.
பயிர்களுக்குப் புதிதுபுதிதாக நோய்கள் வரும். பன்னாட்டு நிறுவனங்கள் அதற்கு பூச்சிகொல்லி மருந்துகளை விற்கும். மனிதர்களுக்குப் புதிது புதிதாக நோய்கள் வரும். மாத்திரைகள் விற்பனையாகும். உலகமயமாக்கலின் பங்களிப்புகள் இவை. பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் தேசத்தின் கதவுகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விட்டபோதே வந்திருக்க வேண்டிய ஞானம் இது!
இத்தனை காலம் தூங்கினீர்களா? என்று கேட்பதா அல்லது இப்போதாகிலும் விழித்துக் கொண்டீர்களே என்று நமது ஆட்சியாளர்களைப் பாராட்டுவதா?

தினமணிஆசிரியர்க்கு நன்றி
First Published : 14 March 2013 03:40 AM IST

No comments:

Post a Comment