Thursday, March 7, 2013

நிறைந்த ஆனந்தம்-தெய்வத்தின் குரல்


தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
அத்வைதம்
நிறைந்த ஆனந்தம்
கிருதா யுகத்தில் பிருகு என்பவர் தம்முடைய பிதாவான வருணனிடத்தில் போய் நிறைந்த வஸ்து எதுவோ அதை அப்படி அறிவது என்று கேட்டாராம். நிறைந்த வஸ்து எதுவோ அது காலத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். வஸ்துவிலும் நிறைந்து ஒரு குறை என்பதே இல்லாமல் இருக்க வேண்டும். அத்தகைய நிறைந்த வஸ்துவை எனக்குச் சொல்ல வேண்டும் என்று பிதாவான வருணனிடத்தில் கேட்டாராம்.
c போய் தபஸ் பண்ணு. அது உனக்கே தெரியும். என்று வருணன் சொல்லிவிட்டாராம்.
அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு பிருகு போய்த் தபஸ்பண்ண ஆரம்பித்தார். முதலில் அதனால் அவருக்கு ஒன்று தெரிந்தது. இந்தச் சரீரத்தின்
உயர்ந்த வஸ்து. இதுதான் எல்லாவற்றையும் உணருகிறது. உணரப்படுகிற பொருளைக் காட்டியும் உணர்ந்து கொள்கிற பொருள் உயர்ந்தது. அது இந்தத் தேகந்தான் என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அப்பாவிடம் போய் இந்தச் சரீரம்தான் உயர்ந்த நிறைந்த வஸ்து என்று சொன்னாராம்.
அப்பா திரும்பவும், இன்னும் கொஞ்சம் தபஸ் பண்ணு என்று சொல்லிவிட்டாராம்.
இப்படியே கொஞ்சம் தபஸ் பண்ணுவது, உடனே தமக்குக் கோன்றியதைப் போய்ச் சொல்வது என்று ஐந்து தடவைகள் பிருகு செய்தாராம். முதலில் உடம்பு நிறைந்த வஸ்துவாகத் தோன்றிற்று. இந்த உடம்பு ஒருநாள் பிரேதமாகிப் போவதுதானே என்று யோசித்தபின், உடம்பு நிறைந்த வஸ்து இல்லை என்றும், பிராணன்தான் நிறைந்த வஸ்துவாகவும் தோன்றிற்று. அதன்பின் மனமே நிறைந்த வஸ்திவாகப் தோன்றியது. ஐந்தாம் முறை போனபோது ஆனந்தாநுபவம்தான் நிறைவாகத் தோன்றுகிறது.
நீங்கள் சொன்னபடி நான் இத்தனை நாட்களாகத் தபஸ் பண்ணினேன். இப்போதெல்லாம் நடுநடுவே ஏதோ ஒரு விதமான ஆனந்தம் ஸ்புரிக்கிறதே. இது என்ன. என்று தந்தையைக் கேட்டாராம் பிருகு.
உனக்கு ஒவ்வொரு சமயத்தில் கொஞ்சம் ஸ்புரிக்கிறது. என்று சொல்கிறாயே என்ற ஆனந்தம்தான் வஸ்து. இது உனக்குத் துளி உண்டாகிறது. இதுவே நிறைந்து விட்டதனால் அதைத்தான் பேரானந்தம் என்கிறோம். அந்தப் பேரானந்தம் எப்போதும் குறைவு இல்லாமல் காலத்தாலும் தேகத்தாலும் நிறைந்து இருக்கும்படியான ஒரே வஸ்து. சரீரம், பிராணன், மனசு, அறிவு எல்லாவற்றிற்கும் ஆதாரமாக, இவை எல்லாவற்றையும் கடந்த ஒன்று ஆத்மா என்று இருக்கிறது. அது தன்னைத்தானே அறிந்து அநுபவிப்பதில்தான் இந்த ஆனந்தம் உண்டாகிறது. என்று பிதா சொன்னாராம். இப்படி உபநிஷத் கதை இருக்கிறது.
அந்தப் பேரானந்த சமுத்திரத்தின் ஏதோ ஒரு திவலை தான் நமக்கு எப்போதாவது உண்டாகிறது. கிளைகள், இலைகள் எல்லாம் அடர்ந்து இருக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்தால் கீழே கொஞ்சம்கூட வெயில் படாமல் நிழல் இருக்கிறது. காற்று அடிக்கும்போது, இலைகள், கிளைகள் நகர்ந்து விலகுகிற சமயத்தில் சூரியனுடைய வெயில் கீழே அந்த இடைவெளி அளவுக்கு விழுகிறது. அப்புறம் மறுபடியும் கிளைகள் மூடி, அது மறைந்து போகிறது. ஆனந்தம் என்பது எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும்படியாக வஸ்து. ஆனால் நம்முடைய கெட்ட கர்மா, மனம், புத்தி இவற்றினால் அது நம்மிடம் படாமல் மறைந்திருக்கிறது. ஒரு க்ஷணம் நாம் பண்ணியிருக்கிற புண்ணிய கர்மாக்களினாலே அவை விலகும்போது, சூர்ய ஒளி அதன் வழியாக வருவது போல், நம்முடைய கர்மாக்கள் விலகியதால், எங்கும் பரவிய ஆனந்தத்தின் திவலை நமக்கு உண்டாகிறது. இதுவே வளர்ந்து விட்டால் பேரானந்தமாகிறது. அந்த ஆனந்த சமுத்திரத்தின் லவலேசத்தைத்தான் நாம் எப்போதாவது அடைந்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறோம். தபஸ் பண்ணிப் பண்ணி விசாரம் செய்தால் எப்போதும் ஆனந்த மயமாக இருக்கும் சமுத்திரத்திலேயே கலந்து அதாகவே இருக்கலாம்.

Source:www.kamakoti.org



No comments:

Post a Comment