Sunday, March 17, 2013

மீண்டும் தேவை சுதேசி இயக்கம்


மீண்டும் தேவை சுதேசி இயக்கம்

சுதந்திரப் போராட்டத்தின்போது காந்தியடிகளின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில், அன்னியப் பொருள்கள் பகிஷ்கரிப்பு (புறக்கணிப்பு) முக்கிய இடம்பிடித்தது. மக்கள் அனைவரும், ஆங்கிலேய நிறுவனங்களில் உற்பத்தியான துணிகள் உள்ளிட்ட பொருள்களை வீதிகளில் போட்டு எரித்தனர். ஆங்கிலேயர்கள் நடத்திய பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவர்களும் ஆங்கிலேய அரசில் பதவிகளை வகித்தவர்களும் அவற்றைத் துறந்து வெளியேறினர். உள்நாட்டில் தயாரானவற்றையே (சுதேசி) தரம் குறைவாக இருந்தாலும் பயன்படுத்தினர்.
இது பொருளாதார ரீதியாக ஆங்கிலேய அரசுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதியில் அவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற நேர்ந்தது. இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் இப்போது மிகவும் தேவையானதாக இருக்கிறது.
சாதாரண நபராக இருந்து, அரசியலில் நுழைந்தபிறகு முறைகேடுகளைச் செய்து, பெரும் அளவில் பொருள் சேர்த்துவிடும் இந் நாளைய அரசியல்வாதிகள் குற்ற உணர்ச்சியே இல்லாமல் உலா வரும் நாடு இது. நம் நாட்டில் உள்ள செல்வங்களைச் சுரண்டி தத்தம் நாடுகளில் கொண்டு சேர்த்த அன்னிய நாட்டவர்களுக்கும் நம் நாட்டில் அதே மனப்பான்மையுடன் இருந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
ஆங்கிலேயர்கள் வர்த்தக நோக்கத்தில் வந்து இங்கேயுள்ள செல்வங்களைச் சுரண்டியவர்களாக இருந்தாலும், அவர்கள் உருவாக்கிய சில திட்டங்களை நாம் இன்றைக்கும் பயன்படுத்தி வருகிறோம். கல்வித் திட்டம், சட்ட விதிகள், ரயில் பாதைகள், கட்டடங்கள், அணைகள் என அவர்கள் நிர்மாணித்தவற்றை இன்றளவிலும் நாம் பயன்படுத்துகிறோம்.
ஆனால், இன்றைய சுயநல அரசியல்வாதிகளோ சொந்த மக்களை ஏமாற்றி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேடாக சேர்த்த பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்திருக்கின்றனர்.
இவர்கள் ஒருபுறமிருக்க, அரசியல்வாதிகளைத் துணையாகக் கொண்டு அரசு சொத்துகளையும், விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்து பெரும் அளவில் சொத்து, பணம் சேர்க்கும் தொழில் அதிபர்கள் இன்னொரு வகை. இவர்களும் புற்றீசல்போல் பெருகி வருகின்றனர்.
இதன் விளைவு அரசியலிலும் தொழிலிலும் நேர்மையற்ற தன்மையே தொடர்கதையாக நீடிக்கிறது. அவர்களின் வாரிசுகளாவது அதிலிருந்து வேறுபட்டு நிற்கின்றனரா என்றால், அப்படியும் தெரியவில்லை. தங்கள் முன்னோர்களின் பாதையைப் பின்பற்றித் தவறிழைக்கின்றனர்.
பணம் பாதாளம் வரை பாயும் என்பதைப்போல் எத்தனை வழக்குகள் வந்தாலும், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்துவிடுகின்றனர்.
ஒரு கட்டத்தில், வாக்களிக்கும் உரிமையையும் பணத்தால் பறிக்க முற்படுகிறது இந்த கும்பல். பணம் அல்லது அடியாள் பலத்தைப் பயன்படுத்துவதால் அதற்கு அஞ்சி, வாக்கு என்ற பிரம்மாஸ்திரத்தையே பறிகொடுக்கும் பரிதாபம் சாதாரண மக்களுக்கு ஏற்படுகிறது.
பிறகு எப்படி இவர்களைக் கட்டுப்படுத்துவது? காந்தியடிகள் கற்றுத்தந்த புறக்கணிப்பு உத்தியை நாம் மீண்டும் கையாண்டு பார்க்கலாம். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் பொருளாதார பலம் பொருந்திய நபர்களைப் பொருளாதார ரீதீயாகவே அணுக வேண்டும். பணம் சேர்க்கும் நபர்கள் அதை சும்மா வைத்திருக்கப் போவதில்லை. ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்வார்கள்.
அந்த முதலீடுகள் இடம்பெற்றுள்ள நிறுவனங்களை அடையாளம் கண்டு கொண்டு புறக்கணிப்பைத் தொடங்க வேண்டும். அது ஓர் உற்பத்தி நிறுவனமாக இருந்தால் அதிலிருந்து வெளியாகும் உற்பத்திப் பொருள்களை வாங்குவதைத் தவிர்த்துவிடவேண்டும். அது ஒரு சேவை நிறுவனமாக இருந்தால் அந்தச் சேவையைப் பெறுவதைப் புறக்கணித்து விடவேண்டும் அல்லது அதில் முதலீடு செய்யாமல் இருக்க வேண்டும்.
இப்படி ஒவ்வொரு நுகர்வோரும் ஒரு பொருள் அல்லது சேவையின் தரத்தைத் தேர்வு செய்யும்போது அதன் உரிமையாளரின் குணத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே இதில் முக்கியமானதாகும்.
"எங்கும் ஊழல் நடக்கிறது, அரசியல்வாதிகள் சரியில்லை' என புலம்புவதை விடுத்து முதலில் நம்மை சரிப்படுத்திக் கொண்டு உறுதியாக புறக்கணிப்பில் இறங்கினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
First Published : 16 March 2013 02:14 AM IST


No comments:

Post a Comment