Sunday, March 24, 2013

சித்த மருத்துவத்தில் பசு நெய்யின் பங்கு!


பசு நெய் ஒரு தெய்வப் பிரசாதம்.


மகரிஷி தன்வந்திரியின் ஆயுர் வேதாவின் கூற்றுப்படி, சுத்தமான பசுநெய் வாழ்வின் புத்துணர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும், நீண்ட ஆயுளுக்கும் ஒரு இரசாயனமாகக் கருதப்படுகிறது.

நல்ல கொழுப்புச்சத்து ஆரோக்கியமான சருமம், நரம்புகள் மற்றும் உயிர் அணுக்களுக்கு மிகவும் தேவை. நம் ஆரோக்கியத்துக்காக எடுக்கப்படும் எந்த முயற்சியும், நமது உடலுக்குத் தேவையான, நன்மை பயக்கக் கூடிய கொழுப்புகளைத் தவிர்ப்பதற்காக அமைந்து விடக் கூடாது. அது நமக்கு நாமே தீங்கு விளைவிக்கும் முயற்சியாக அமையும்.

சரியான அளவு பசு நெய் உட்கொள்வதின் மூலம் வாத, கப நோய்களிலிருந்து நம்மை நாம் காப்பது மட்டுமில்லாமல் மனத்தையும், உடலையும் ஒருமைப்படுத்தும் ‘ஓஜஸ்’ சக்தியையும் பெற லாம்.

பசி உண்டாக:

பிரண்டையை பசு நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும். மூல நோய் குணமாகும். உடலும் வலிமை பெறும்.

வாய்ப்புண் குணமாக:

மாசிக்காயை நன்றாகத் தூள் செய்து ஒரு வேளைக்கு இரண்டு சிட்டிகை வீதம் நெய் அல்லது வெண்ணெயுடன் சேர்த்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர புண் குணமாகும்.

குழந்தைகளுக்கு மாந்தம்:

கறிவேப்பிலை, மிளகு சேர்த்து பசும் நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுத்து வர மாந்தம் குறையும். பசி எடுக்கும்.

வயிற்று வலி நீங்க:

வெந்தயத்தை பசு நெய்யில் வறுத்துப் பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.


இரத்த மூலம் குணமாக:

பசும்பால் 400 மில்லி, பசு நெய் 50 மில்லி, வெங்காயச் சாறு 100 மில்லி, அதி மதுரப் பொடி 20 கிராம், அடுப்பில் வைத்துக் காய்ச்சி நல்ல பதத்தில் இறக்கி ஆற வைக்கவும். இதனை நாள்தோறும் ஒருவேளை 1 கரண்டி வீதம் 10 தினங்கள் சாப்பிடவும். நல்ல குணம் தெரியும்.

பிள்ளைகள் சுறுசுறுப்பாக:

ஓமம், வசம்பு, இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு இவற்றை சம அளவு எடுத்து தூள் செய்து வைத்துக் கொண்டு 1/4 கரண்டி பவுடரை பசு நெய்யில் கலந்து தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் மக்குப் பிள்ளைகளும் கெட்டிக்காரப் பிள்ளையாக மாறி விடுவார்கள்.

இரத்தப் போக்கு நிற்க:

பசு நெய்யுடன், செம்பருத்திப் பூவைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வர இரத்தப் போக்கு உடனே நிற்கும்.

நரம்புத்தளர்ச்சி குணமாக:

பசு நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

அலுப்பு நீங்க:

மிளகை பசு நெய்யில் வறுத்து, தூள் செய்து வெல்லம் பசுநெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர அலுப்பு தீரும்.

மூலம் குணமாக:

மாதுளம் பழச்சாறுடன் 1 பங்கு பசு நெய் சேர்த்துக் காய்ச்சி தைலம் போன்ற நிலை வந்ததும் இறக்கி பத்திரப்படுத்தி அதனை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கடுமையான மூல நோய் குணமாகும்.

மார்புச் சளி நீங்க:

ஏலப்பொடியைப் பசு நெய்யில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, மார்புச்சளி குணமாகும்.

‘நெய்’ என்பது அன்ன சுக்தி என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது உணவைப் புனிதப்படுத்தும் பொருள் என்பதாகும். இதனால்தான் உணவில் இதை முக்கியமானதாக உபயோகிக்கிறோம்.

வளரும் குழந்தைகள் மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஓர் அவசியமான உணவாகிறது. இது முற்றிலும் கொழுப்புப் பொருள் என்பதால், இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் முடிந்த மட்டும் இதைத் தவிர்த்து விடுதல் நன்மை பயக்கும்.

மணமிக்க நெய்ச்சோறு என்றாலே குழந்தைகள் பொதுவாக மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் இனிப்புப் பண்டங்கள் முழுக்க முழுக்க தனி நெய்யினால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதன் ருசியே அலாதியானதுதான். இருப்பினும், அலாதியான ருசி என்பதால் அளவுக் கதிகமாக உண்டு விடாதீர்கள். பிறகு அது மருத்துவருக்கு இலாபமாகி விடும்.

No comments:

Post a Comment