Thursday, March 21, 2013

ஆதிகாலத்தில் சூரியனுக்கு என்று தனி மதமும் வழி பாடும் இருந்தது

ஆதிகாலத்தில் சூரியனுக்கு என்று தனி மதமும் வழி பாடும் இருந்தது இன்று இந்து மதத்தில் சூரியனை கடவுளாக வணங்கும் முறை நடைமுறையில் இருக்கிறதா?
நமது இந்து மதத்தில் ஆறு விதமான உட்பிரிவுகள் உள்ளன.
திருமாலை வழிபடும் வைஷ்ணவம், சிவனை வழிபடும் சைவம், முருகனை வழிபடும் கௌமாரம் கணபதியை வழிபடும் காணாபக்தியம், சக்தியை வழிபடும் சாக்த்தம். சூரியனை வழிபடும் சௌரம் என்பது அந்த ஆறு பிரிவுகளாகும்.
இவை எல்லாம் ஒரு காலத்தில் தனித்தனியாக இயங்கின. சண்டை போட்டன. தலையை பிய்த்து கொண்டு நடுத்தெருவில் புரண்டன.
இதனால் இந்து தாய் பலவீனமாக கிடந்தாள். கடைசி மூச்சை கையில் பிடித்துக் கொண்டு விழி பிதுங்கி கிடந்தாள்
மரண படுக்கையில் கிடந்த அவளை அமணம், சமணம், பௌத்தம் சாருவாகம் போன்ற மத பிரிவுகள் கழுத்தை நெறித்தன, நெஞ்சில் மிதித்து குதித்தன,
கடைசி தாகத்திற்கு யாராவது ஒரு சொட்டு தண்ணீர் தர மாட்டார்களா என நமது தாய் துடித்த போது அவள் வாயில் தண்ணீரை அல்ல அமுதத்தையே கொண்டு வந்து புகட்டியவர் கௌடபாதரின் சீடர் பகவத் பாதர் ஆதிசங்கரர்.
இவர் மட்டும் இந்தியாவில் தோன்றவில்லை யென்றால் நீங்கள் கிறிஸ்டோபர் ஆகியிருப்பீர்கள், நான் அமானுல்லா ஆகியிருப்பேன்.
அதாவது அறிவு சுரங்கமான நமது மதம் காலம் என்னும் யானையின் காலில் சுண்டெலி போல சிக்கி நசுங்கி போயிருக்கும்.
மகாவீரரை போல, புத்தரை போல ஆதிசங்கரர் புதிய மதத்தை உருவாக்கவில்லை.
சிதறி கிடந்த நவமணிகளை ஒன்று படுத்தி பழைய மாலைக்கு புதிய மெருகு கொடுத்தார்.
அவர் ஆறு மதப் பிரிவுகளையும் ஒன்றாக நோக்கினார்
இன்று நமது இந்து தர்மத்தில் தனிப்பட்ட பின்பற்றுவோர்கள் இல்லையென்றாலும் சூரிய வழிபாடு என்ற சௌரம் நிலைத்து நிற்பதற்கு அவரே காரணம்.
ஞான பானு என்ற சூரியன் இல்லையென்றால் உயிர்கள் உயிர்கள் இல்லை, உலகமும் இல்லை.
அவனுடைய சக்தியால் தான் மரங்கள் வளர்கின்றன. நுரையீரல் சுவாசிக்கின்றது.
கண்ணெதிரே தெரியும் சூரிய நாராயணனை ஆதிக்காலதிலிருந்தே இந்துக்கள் வழிப்பட்டு வந்தனர்.
உலகம் எல்லாம் ஏதோ ஒரு வகையில் சூரிய வழிபாடு இருந்தது என்றாலும் இந்துக்கள் மட்டும் தான் சூரியனை தனிப்பெரும் கடவுளாக வழிபட்டனர்.
பரந்து விரிந்தும் சர்வத்திற்கும் சாட்சியாகவும் அஞ்ஞான இருளை போக்குவதாகவும் கால தேச வர்த்தமானத்தால் பாதிக்கப்படாததாகவும் எழுந்து நிற்பது உதய சூரியன்.
ரிக் வேதம் சூரியனை அக்னியின் முதல்வன் என்று போற்றுகிறது.
யஜுர் வேதம் சகல உலகத்தையும் காப்பவன் என்று பாடி பணிகிறது.
சாம வேதம் உலகத்தை ஒளிர்விப்பவன் என கீதம் இசைக்கின்றது.
சதபத பிரம்மானம் சூரியனை ஜோதி பிழம்பு என்றும் தங்க ஆரங்களால் ஆன வட்டம் எனவும் வியந்து போற்றுகிறது.
பவிச புராணம், பிரம்ம புராணம், வராக புராணம், மச்ச புராணம், அக்னி புராணம், கருட புராணம், பவிஷோதிர புராணம், காளிகா புராணம், மார்க்கண்டேய புராணம் ஆகிய பழம்பெரும் புராணங்களில் சூரிய வழிபாட்டின் மேன்மைகள் விவரிக்கப்படுகின்றன.
சர்வ வியாவியான கடவுளாகிய கிருஷ்ண புருஷோத்தமன் தனது அமுத மொழியான பகவத் கீதையில் பிரகாசிக்கும் பொருளில் நான் சூரியன் என்று ஆதவனுக்கு இறை முத்திரை தருகிறார்.
சூரியன் காலிலிருந்து தொடை வரை கவசமும் கைகளில் தாமரை பூவும், தலையில் மகுடமும், காதுகளில் மகர குண்டலமும், பிரசன்ன முகத்தில் இளம் முறுவலும், சிவப்பான குருதி வட்டமும் உடைய தோற்றத்தில் வண்ண ஒவியமாக படம் பிடித்து காட்டுகிறார் வராகிமிகிரர் தான் எழுதிய பிரகத் சங்ஹிதை என்ற நூலில்,
சிவாகமங்கள் சூரியனை சிவசூரியன் என்கிறது.
தாய் தெய்வ வழிபாட்டில் சூரியன் அன்னையின் தேக ஒளியாகிறான்.
இப்படியெல்லா மத பிரிவிற்குள்ளும் சூரிய வழிபாடு தழைத்தோங்கி இருக்கிறது.
சூரியனுக்கு பாரசீகர்கள் வைத்த பெயர் மித்திரன். கிரேக்கர்கள் வைத்த பெயர் அப்பல்லோ, ரோமர்கள் வைத்த் பெயர் தைபிரியஸ்,
எகிப்து வட அமெரிக்கா என எல்லா இடங்களிலும் சூரிய வழிபாடு தொன்று தொட்டு நடந்து வந்துள்ளது.
எகிப்தை ஆண்ட பாரோ மன்னர்கள் தங்களை சூரிய குமார்கள் என பெருமையாக அழைத்து கொண்டது போலவே, இந்திய மன்னர்களும் தங்களை சூரிய வம்சம் என அழைத்து கொண்டனர்.
பழங்கால அரசர்கள் பலர் சூரியனுக்கு தனி கோவிலே எழுப்பியுள்ளனர்.
முதலாம் குலோத்துங்க சோழன் தஞ்சை மாவட்டம் திருமங்கல குடியில் சூரியணார் கோவிலை எழுப்பினார்.
கங்க வம்சத்தை சேர்ந்த முதலாம் நரசிம்மன் கோணார்க்கில் உள்ள சூரிய கோயிலை பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டினார்.
சோளங்கி வம்சத்தாரால் பதினாறாம் நூற்றாண்டில் குஜராத்தில் முதேரா சூரிய கோவில் கட்டப்பட்டது.
வட குஜராத்திலும், ராஜஸ்தானிலும், வங்காளத்திலும், காஷ்மீரத்திலும் பல அரசர்களால் கட்டப்பட்ட சூரிய கோவில்கள் உள்ளன.
தனியான பக்தர் கூட்டம் சூரியனுக்கு என்று பெரியதாக இல்லையே தவிர சூரியனை வழிபடாத இந்துக்களே இல்லை எனலாம்.
மந்திரங்களில் தலைசிறந்தது என வர்ணிக்கப்படும் காயத்ரி மந்திரமே சூரியனை நோக்கி செய்யும் பிராத்தனை தான்.
காலை சூரியன் உடலை ஆக்குகிறான் அப்போது அவன் பிரம்மா
மாலை சூரியன் அதை பாதுகாக்கிறான் அப்போது அவன் நாராயணன்
மதிய சூரியனோ சம்ஹார மூர்த்தியாகிறான் அப்போது அவன் மகேஸ்வரன்
எனவே மும்மூர்தியாகவும் சூரியன் இருக்கிறான்.
எந்த கடவுள் உலகத்தில் உள்ள இருளை போக்கி ஒளியை தருகிறானோ அவன் நமது இதயத்தில் பிரகாசிக்க சூரிய வடிவாக காட்சி தருகிறான்.
எனவே அன்றும் இன்றும், என்றும் இந்துக்களின் வழிபாட்டில் சூரியன் இருப்பான்.

1 comment:

  1. உண்மை தான் ஐயா...

    நமக்கு கண் முன் தெரியும் தெய்வம் அதுதானே...

    விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete