Saturday, March 16, 2013

மகா அவதார் பாபாஜி

மகா அவதார் பாபாஜி

பாபாஜி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கி.பி.30.11.1203 அன்று கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் திருநாளன்று ரோகிணி நட்சத்திரம் ரிஷபராசி கூடிய சுப வேளையில் பிறந்தார். அவருடைய குழந்தை திருநாமம் நாகராஜ். அவருக்கு 11 வயதானபோது கி.பி.1216ல் இலங்கை சென்று கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் மகா சித்தர் போக நாதரை சந்தித்தார். பாபாஜி கி.பி.1203 ல் தம் பிறப்பு கி.பி. 1214 கதிர்காமம் சென்று போகரை சந்தித்தது பற்றியும் கி.பி.1952ல் ஒளி உடலோடு சென்னை வந்து எழும்பூர், சூரம்மாள் தெரு, 9ம் எண் வீட்டிலுள்ள தம் சீடர் V.T நீலகண்டன் பூஜையறையில் அவரை சந்தித்து அவரிடம் பலமுறை கூறியுள்ளார்.          ( போகநாதர் கதிர்காமம் தேவாலயம் முருகன் கோவிலாக எழுவதற்கு முன் அந்த கோவிலில் இரண்டு முக்கோணங்களாலான மிகவும் சக்தி வாய்ந்த ஒரு யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார். கதிர்காமம் திருக்கோவிலின் மூலஸ்தானத்தில் இப்போதும் உருவச்சிலை கிடையாது. அந்த யத்திரத்திற்குத்தான் வழிபாடு நடக்கின்றன.)


கதிர்காமம் சென்ற பாபாஜி அங்கு மகா சித்தர் போக நாதரை குருவாக அடைந்தார். மிகப்பெரிய ஆலமரத்தடியில் போக நாதர் அவருக்கு தொடர்ந்து 6 மாத காலம் கிரியா யோகப் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது. இப்பயிற்சியில் 18 வகையான ஆசனங்கள், பல்வேறு பிராணயாமப் பயிற்சிகள் தியானமுறைகள் ஆகியவை அடங்கும். இந்த தவயோக பயிற்சி ஒவ்வொரு முறையும் 24 மணி நேர பயிற்சியாக தொடர்ந்தது. பிறகு விட்டு விட்டு இரண்டு அல்லது மூன்று நாடகளுக்கு ஒரு முறை என்று வளர்ந்தது. இது வார கணக்காக பெருகி இடைவிடாமல் 48 நாட்களுக்கு செய்யும் அளவிற்கு உயர்ந்தது. ஆறு மாத முடிவில் பாபாஜியின் மனதில் ஐம்புலன்களின் வழியே உலகியலோடு தொடர்பு கொள்ளும் நிலை அகன்றது. வேறு வகையில் கூறினால் மனிதனின் 36 தத்துவங்களில் 20 தத்துவங்களால் ஆன மனோதேகமே அவருக்கு இல்லாமல் போய்விட்டது. அல்லது அவரது மனித மனம் அவரது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 

பாபாஜி ஒளி உடலோடும் பூத உடலோடும் வாழும் மனிதராகவே விட்டார். எல்லா தத்துவங்களையும் ஏகத்துவமான ஆன்மாவே தான் என்பதை உணர்ந்தார். அதன்மூலம் தாம் வேறு பரம்பொருள் வேறு அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து விட்டார். 

தன்னை உணர்ந்த பாபாஜி கி.பி.1214லிலேயே தம் குருநாதர் போகநாதர் ஆணைக்கிணங்க இலங்கையில் இருந்து தமிழகம் வந்தார். பொதிகை மலையில் ஒளி உடலுடன் வாழ்ந்துவரும் போகரின் குருவான அகத்தியரிடம் கிரியா யோகத்தின் கடைசி தீட்சையைப் பெற திருகுற்றால மலையை அடைந்தார். (அகத்தியரே ஆதிகுருவும், கிரியா யோகத்தின் மூலகுருவும் ஆவார்.)

குற்றால மலையில் பாபாஜி அகத்தியரை நினைத்து 48 நாள் கடுந்தவம் புரிந்தார். 48ம் நாள் முடிவில் அகத்தியர் ஒளி உடலோடு அவர் முன் தோன்றி அவரை உள்ளம் குளிர வாழ்த்தி அருளினார். அதோடு "மகனே நீ இமய மலைக்கு சென்று பத்ரிநாத்தில் தங்கி தவ வாழ்க்கை வாழ்ந்து வருவாயாக" "நீ இது வரை உலகம் காணாத அளவிற்கு மிகப்பெரிய சித்த புருஷனாக உயர்ந்து உலகம் உள்ளளவும் வாழ்ந்து வருவாய்" என்று வாழ்த்தி மறைந்தார். 

ஆதிகுரு அகத்தியர் ஆணைப்படி பாபாஜி இமய மலையின் ஒரு முகட்டில் தவக்குடில் அமைத்துக்கொண்டு இன்றும் வாழ்ந்து வருகிறார். பாபாஜியின் தவக்குடில் இமயமலையில் 10000 அடி உயர்த்திற்கு மேல் உள்ள பத்ரி நாத் கோவிலிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. அந்த தவக்குடிலுக்கு கொரிசங்கர் பீடம் என்று பெயர்.

பாபாஜி தம் இமாலய வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்கு பாரத நாட்டிற்கு வந்து செல்கிறார். கிரியா யோகத்தின் விளைவாக அவரது உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் தெய்வீக அணுக்களாய் மாறி உள்ளதால். அவர் தோன்றி 1800 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட 16 வயது சிறுவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

கடவுளைக் காணும் ஆர்வம் மிக்கவர்களாகவும் கடவுளை காணும் வழி தெரியாமல் தவித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு உதவி செய்து வாவர்கள் தெய்வீக உணர்வை பெறுவதற்கு உதவி செய்வதையே பாபாஜி தம் குறிக்கோளாக கொண்டிருக்கிறார். இந்த தெய்வீக ஞானத்தை பெற்றிடும் மக்கள் இதை யாரிடம் இருந்து பெற்றோம் என்று அறிந்துகொள்ள முடியாத நிலையில் கூட கிரியாயோகப்பயிற்சியை அளித்து வருகிறார்கள்.


கிரியா யோகப்பயிற்சியை லாஹிரி மகாசாயா மூலம் உலகம் முழுவதும் பரவச்செய்ய பாபாஜி முடிவு செய்துவிட்டார். ராணுவத்தில் பணி செய்து கொண்டிருந்த மகாசாயா பாபாஜியின் மூலம் தடுத்தாட்கொள்ளப்பட்டார். 


லாஹிரி மஹா சாயர் (மஹா அவதார் பாபாஜியின் சீடர்) 

மஹா அவதார் பாபாஜி இந்த உலகத்திற்கு தெரிய, பாபாஜி பயன்படுத்திய முதல் கருவி லாஹிரி மஹா சாயர் தான்.மஹா அவதார் பாபாஜி முதலில் காட்சி கொடுத்தது இவருக்கு தான். கிரியா யோகத்தை முதலில் பாபாஜி கற்று கொடுத்தது இவருக்கே. இவரின் இயற்பெயர் ஷாமா சரண் லாஹிரி. அனைவரும் இவரை லாஹிரி மகாசாயா என்று அழைத்தார்கள்.(மகாசாயா என்றால் விசாலமான அறிவு உடையவர் என்று பொருள்.)

குழந்தை பருவம் :

இவர் 30 தேதி, செப்டம்பர் மாதம்,1828 -ல் வங்காள மாநிலம், நதியா மாவட்டத்தில், குர்னி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் கௌர் மோகன் லாஹிரி மற்றும் முக்தாக்ஷி .பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் சிறுவதிலேயே, அவரின் அன்னை இறந்து விட்டார். லாஹிரி மகாசாயர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். நான்கு வயதில் இருந்தே தியானம் செய்வதைக் கற்றுக் கொண்டார். தலையைத் தவிர மற்ற உடல் பகுதி முழுவதும் மண்ணுள் புதைத்துக் கொள்ளும் தியான முறையை கையாண்டார்.

அவரது வீடு, ஒரு பெரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. ஆகவே அவர் குடும்பதினோடு வாரணாசிக்கு சென்றார்.தான் வாழ்நாளின் மீத பகுதியை அங்கேயே கழித்தார். பிள்ளை பருவத்திலேயே ஹிந்தி, உருது அறிந்திருந்தார். பின்னர் பெங்காலி, சமஸ்கிருதம், பாரசீகம்,பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தை அரசு சமஸ்கிருத கல்லூரியில் கற்று கொண்டார். கங்கையில் நீராடி விட்டு, வேதங்களையும், புராணங்களையும் அங்கேயே கற்று கொண்டார்.

இளமைப் பருவம் : 

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ,ஆங்கிலேய ராணுவத்தில் கணக்காளராக பணி ஆற்றினார். 1846 -ல் ஸ்ரீமதி காஷி மோனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள்.லாஹிரி மாஹசாயரின் தந்தை இறந்த பின், குடும்ப பொறுப்பை தானே ஏற்றார்.

அப்போது மகாசாயவிற்கு 33 வயது.1861 -ல், இமாலயத்தின் அடிவாரத்தில் உள்ள "ராணிகட்" என்ற இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அதுதான் அவர் வாழ்கை முறையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தது. ராணிகட் சென்றவுடன் மகாசாயவிற்கு கிடைத்த முதல் செய்தி அந்தப் பகுதி ஏராளமான ஞானிகள் வாழும் பகுதி என்பதுதான். அந்த ஞானிகளை காண வேண்டும் என்ற மிகுந்த ஆசையில் அவர் மலை மீது ஏறினார்.

மஹா அவதார் பாபாஜி ஆட்கொள்ளல்:

அவர் மலைப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு குரல் அவரை அழைத்தது. மேலும் அவர் அக்குரலை கேட்டுக் கொண்டே மலையின் மீது ஏறிச் சென்றார். அப்போது தான், கிரியா யோகத்தின் ஒளி விளக்கான "மஹா அவதார் பாபாஜி" யை சந்தித்தார். 

அப்போது அவரை மஹா அவதார் பாபாஜி தன் முதல் சீடராக ஏற்றுகொண்டார். கிரியா யோக வித்தைகளை அவருக்கு கற்று தந்தார். உலகுக்கு எல்லாம் கிரியா யோகத்தைப் பரப்புமாறு மஹா அவதார் பாபாஜி, லாஹிரி மகாசாயருக்கு கட்டளை இட்டார். 

பின்பு அவர் வாரணாசிக்கே திரும்பி வந்து, கிரியா யோகத்தைப் பற்றியும், மஹா அவதார் பாபாஜியை பற்றியும் எல்லாருக்கும் எடுத்து உரைத்தார். அங்குள்ள அனைத்து மக்களும் கிரியா யோகத்தை தெரிந்துகொள்ள முனைந்தனர்.

லாஹிரி ஒரு குழுவை அமைத்து கிரியா யோகத்தை பற்றி மக்கள் அறியுமாறு செய்தார். கிரியா யோகத்திற்கு மதம் முக்கியம் இல்லை. ஆகவே இந்து,முஸ்லிம், கிறிஸ்து ஆகிய மதத்தினருக்கும் கற்று தரப்பட்டது.

1886
வரை கிரியா யோகத்தின் ஆசிரியராக விளங்கினார். பின்பு அனைத்து மக்களும் அவரது தரிசித்து சென்றனர். 26 செப்டம்பர், 1895 -ல் , தன் அறையில் அமர்ந்து யோகம் செய்து கொண்டிருக்கும் போது, அனைவரது பார்வையின் எதிரே யோக நிலையிலேயே இறைவன் அடிசேர்ந்தார்.

இவருக்கு பின், அவரின் சீடர்களான ஸ்ரீ பஞ்சனன் பட்டாச்சார்யா, ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர், சுவாமி பிரபானந்தா, சுவாமி கேஷபானந்தா போன்றோரால் கிரியா யோகம் மக்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. 

சென்னை சாந்தோம் பகுதியில் பாபாஜி ஆஸ்ரமம் ஒன்று உள்ளது. இங்கு வழிபாட்டுக் கூடமும் பயிற்சிக்கூடமும் உள்ளன.


பாபாஜி அய்யா திருவடி போற்றி.

மகாசாயா அய்யா திருவடி போற்றி.

முற்றும்.

Sources : gnanamethavam.blogspot.in

1 comment:

  1. ஐயா பாபா படத்தில் பாபாஜி அவா்களிடம் தான் முகமதுநபி இயேசு கிறிஸ்து மற்றும் கபீா்தாஸா் போன்றவா்கள் ஆன்மிக இரகசியங்களை கற்றுக் கொண்டார்கள் என்று ரஜினி கூறுகிறார். அவரது கூற்றுப்படி அவரது காலம் கிறிஸ்துவிற்கு முன்பு. யோகியின் சுயசரிதத்திலும் அவ்வாறே உள்ளது. ஆனால் நீங்களோ கி.பி.1203 என்று கூறுகிறீா்கள். தவறு................

    ReplyDelete