Monday, March 18, 2013

சூரிய மின் சக்தியில் புதிய எழுச்சி


இயற்கையின் ஆற்றலை உணர்ந்து பஞ்சபூத சக்திகளையும் தெய்வமாக்கி ஆலயமும் அமைத்து வழிபடும் திராவிடப் பண்பாட்டில் சூரிய வழிபாடு புதிதல்லவே. இந்திய வம்சாவளி மன்னர்கள் சூரியவம்சம் (ரகுவம்சம்) பெற்றவர்கள். ரகுவம்சத்தில் வழிவந்த ஸ்ரீராமபிரான் மகாத்மா காந்தியின் மனதுக்குப் பிடித்த தெய்வம்.
ராமராஜ்ஜியம் உருவாக்கி இந்தியாவில் நல்லாட்சி தர விரும்பியவர் காந்தி. விவசாயம் செழிக்க மழையோ, பாசனமோ வேண்டுமென்றாலும் சூரிய ஒளி இருந்தால்தான் ஒளிச்சேர்க்கை நிகழும். பூக்கவும், காய்த்துப் பழுக்கவும், பழுத்து விதையாகவும் சூரியன் வேண்டுமே. சூரியன் அருளால் பொங்கலோ பொங்கல் கொண்டாடும் அளவில் உணவு விளைச்சல் பெறும் அதே நேரத்தில் தொழில் உற்பத்திக்குத் தேவையான மின்சக்தி பெறுவதிலும் கதிரவனைப் பயன்படுத்தும் புதிய உத்திகளை இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் கிரிட் இல்லா சூரிய மின்சாரம் கொண்டு இரவில் ஒளிபெறும் விளக்குகளும், சமையல் அடுப்புகளும் வடமாநிலங்களில் பிரபலமாகிவிட்டன. சூரிய மின்சக்தியில் மின்கம்பங்கள் வேண்டாம். மின் கட்டணம் வேண்டாம். பயோ கேஸ் (சாண எரிவாயு) போல் சூரிய மின்சாரமும் தன்னிறைவு ஆற்றல் நிரம்பியது. கிராமங்களுக்கு ஏற்றது.
2011 மக்கள்தொகைக் கணக்கின்படி 24.60 கோடி இந்தியக் குடும்பங்களில் 67 சதவீத மக்கள் மட்டுமே கிரிட் மின்சாரம் பெறுகின்றனர். மீதி 33 சதவீத மக்கள் மண்ணெண்ணெய் விளக்கில்தான் இரவு வெளிச்சம் பெறுகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்னமும் மின்வசதி பெறாத கிராமங்கள் மலைப்பகுதிகளில் இருக்கலாம். மின் இணைப்பு இருந்தும் மின்சாரம் பெற முடியாத நிலையில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் காற்றாலை மின்சாரம் கிரிட் வழியேதான் வரவேண்டும். சூரிய மின்சாரம் மட்டுமே கிரிட் இல்லாமல் பயனாகி இருடடில் ஒளி பெறலாம். 2001-லிருந்து 2012-க்கு வரும்போது சூரிய மின்சாரம் 100 மடங்கு பெருகியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல. பிற மாநிலங்களிலும் அதிகரித்துவரும் மின்வெட்டால் கிராமப் பகுதிகளிலும், மெட்ரோ சாராத நகரப் பகுதிகளிலும் மின் வழங்கல் பாதிப்புற்று இருளில் வாழவேண்டிய சூழ்நிலை உண்டு. எனினும் மின் இணைப்பே கொண்டு செல்லப்படாத தொலைதூர கிராமங்களுக்கு மரபுசாரா சூரிய மின்சக்தி வழங்கும் திட்டம் உருவானது. இந்தத் தொலைதூர கிராமிய மின்வழங்கல் திட்டத்தை மரபுசாரா எரிசக்தி அமைச்சரகம் 2001-இல் செயல்படுத்தத் தொடங்கியது.
பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் உருவான இந்தத் திட்டம், நாளுக்கு நாள் கிரிட் வழி மின் பற்றாக்குறை காரணமாக மெல்ல மெல்ல மறுமலர்ச்சி பெற்றது. சூரிய ஒளி வீட்டுத்திட்டம் உருவாயிற்று. இதன்படி எளிமையான சூரிய ஒளி மின்திட்ட சாதனங்கள் வீடுதோறும் வழங்கப்பட்டன. இந்த பாக்கேஜில் சோலார் பலகை, சோலார் பாட்டரி, சோலார் சார்ஜ் ரெகுலேட்டர் அவ்வளவே. கிரிட் மின் வழங்கவே இல்லாத 18,000 கிராமங்களுக்கு சூரிய ஒளி மின் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இதுவரை சுமார் 10,000 கிராமங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்பட்ட சாதனையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. வேறு விதமாகக் கூறினால் 10,000 இந்திய கிராமங்கள் இருளிலிருந்து தப்பியது மட்டுமல்ல, இரவில் மின்வெட்டு இல்லாத ஒளி கிடைக்கிறது.
அரசின் இலவச சூரியஒளி மின்சார வழங்கல் ஒருபுறம் இருக்க, பல தொண்டு நிறுவனங்களும், ஏராளமான தனியார் நிறுவனங்களும் சற்று செலவு மிகுந்த நவீன சோலார் மின் சாதனங்களையும் மின் விளக்குகளையும் விற்று வருகின்றன. ஏனெனில் அரசுத்துறை வழங்கும் சோலார் மின் சாதனங்களின் தரம் சரியில்லை என்றும், பாட்டரி பழுதடைவதாகவும் குற்றச்சாட்டு உண்டு.
பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சுற்றுலா சாலைதான் உலகிலேயே மாபெரும் சோலார் உபகரணங்களின் அங்காடி என்ற விளம்பரத்துடன் ""ஆர்யவர்த் கிராமின் பாங்க்'' என்ற தனியார் நிறுவனம் சோலார் விளக்கு நிறுவும் பணியை கிராமங்களில் செய்து வருகிறது. குறைந்த வட்டி, தவணை முறை எல்லாம் உண்டு. 50,000 குடும்பங்களுக்கு சோலார் மின்விளக்கு வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் செல்கோ (சோலார் எலக்ட்ரிக் லைட்டிங் கம்பெனி) ஏறத்தாழ 1.50 லட்சம் குடும்பங்களுக்கு சூரிய மின்னொளி வழங்கியுள்ளது.
அரசுசாராத சோலார் மின் நிறுவனங்கள் வீடுகளுக்கு விளக்கு அமைத்துத்தர 8,000 ரூபாய் முதல் 13,500 வரை விலை நிர்ணயத்துள்ளது. இந்த முதலீடு வாழ்க்கையில் ஒரு தடவைதான். வாழ்நாள் சாதனையாக சூரிய விளக்குகள் எரியும். மண்ணெண்ணெய் விளக்குகளை நம்பும் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 250 செலவாகலாம். ஆண்டுக்கு ரூ. 3,000. சூரிய விளக்குகள் 10 ஆண்டு உழைத்தால்கூட சராசரி ரூ. 1,000தான் செலவாகும். ஆகவே, ஒளி குறைந்த மண்ணெண்ணெய் விளக்கைவிட ஒளிமிகுந்த சூரிய விளக்கை ஏழைகள் விரும்பத் தொடங்கி கிராமங்களில் மாற்றம் நிகழ்கிறது. இவ்வாறு மாற்றம் கண்டுள்ள கிராமங்களில் உத்தரகண்ட், சத்தீஸ்கர், அசாம், பிகார் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. மேற்படி மாநிலங்களில் சோலார் மின் அமைப்புகளுக்கு அரசு வழங்கும் ஆதரவும் குறிப்பிடத்தக்கது.
சூரிய மின்சக்தி மின்சாரம் வழங்கலில் அரசுத்துறை தொய்ந்துவிட்ட நிலையில் இந்தியாவின் மாபெரும் தொழில் நிறுவனங்கள் இத்துறையில் மெகா போட்டியில் இறங்கியுள்ளன. ஆதித்ய பிர்லா, மஹீந்திரா, டாட்டா, ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, வெல்ஸ்பன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சூரிய மின் உற்பத்திக்கு ஏராளமாக வருமான வரிச்சலுகைகளும் உள்ளதால் மேற்படி தொழில் அதிபர்கள் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
ஸ்காண்டி நேவியன் அட்வான்ஸ்டு டெக்னாலஜி என்ற மாபெரும் மரபுசாரா எரிசக்தி நிறுவனத்துடன் உடன்பாடு கொண்டுள்ள ஆதித்ய பிர்லா 4 கோடி டாலர் முதலீட்டுடன் களத்தில் இறங்கியுள்ளார். 2010-இல் 30 மில்லியன் வாட்ஸ் உற்பத்தியில் தொடங்கி 2012-இல் 100 மில்லியன் வாட்ஸ் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆதித்ய பிர்லா நிறுவனம், இன்னும் 4 ஆண்டுகளில் 500 மில்லியன் வாட்ஸ் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது. டாடா, பிர்லா போன்ற நிறுவனங்கள் இன்று சூரிய ஒளி ஆற்றலில் கவனம் செலுத்தக் காரணம் ஐந்தாண்டுகளில் அடக்கவிலை குறைந்துவிட்டது.
2008 - 09 ஆண்டுகளில் 1 மில்லியன் வாட்ஸ் கொள்திறனும் சூரியமின் சாதனங்கள் அமைக்க 20 கோடி ரூபாய் என்ற நிலை மாறி இன்று 1 மில்லியன் வாட்ஸ் கொள்திறன் செலவு ரூ.8 கோடியாகக் குறைந்துவிட்டது.
இரண்டாவதாக, மரபுசாரா எரிசக்தி மின்செலவு தொடக்க காலத்தில் தெர்மல் / நிலக்கரி கிரிட் மின்சாரத்தைவிட மிகவும் கூடுதலாயிருந்த நிலை மாறி அது காற்றாலை மின்சாரமாயினும், சோலார் மின்சாரமாயினும், சாண எரிவாயு மின்சாரமாயினும், மரபுசார்ந்த தெர்மல் மின்சாரமாயினும் ஏறத்தாழ எல்லாமே ஒரே செலவுதான் என்ற எதார்த்த நிலை புரிந்துவிட்டது.
ஆகவே, பிர்லா மட்டுமல்ல. டாடாவும் சும்மாவா? சோலார் உள்பட மரபுசாரா மின்சார உற்பத்திக்கு 1 பில்லியன் டாலர் டாடா நிறுவனம் முதலீடு செய்துள்ளது. ஆண்டுக்கு 300 மில்லியன் வாட்டில் தொடங்கி 2020-ஐ நெருங்கும்போது 6,000 மில்லியன் வாட் கொள்திறன் என்று இலக்கை நிர்ணயித்துள்ளது. அம்பானி மட்டும் அப்போது வேடிக்கை பார்ப்பாரா என்ன?ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியும் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் மரபுசாரா மின் உற்பத்தியில் இறங்கியுள்ளார். மஹீந்திரா 1/2 பில்லியன் டாலர் முதலீட்டில் களம் இறங்குகிறது. வெல்ஸ்பன் நிறுவனம் இந்த ஆண்டு 3,000 கோடி ரூபாயில் சோலார் - காற்றாலை மின் உற்பத்தியில் இறங்கியுள்ளது. 5, 6 ஆண்டுகளில் 15,000 கோடி ரூபாய் வரை முதல் போட திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் எதிர்காலம் பிரகாசிக்க சூரியனும் மாருதமும் உதவப் போகின்றது. தமிழ்நாடு காற்றாலை மின்சக்திக்கு வழங்கிய கவனத்தை சூரிய சக்தி மின்சாரத்துக்கு வழங்காததன் முக்கியக் காரணம் தொலைவு கிராமங்கள் வரை கிரிட் மின் கம்பிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதேசமயம், கிரிட் மின்சாரத்தை வழங்க முடியாமல் தமிழ்நாடு மின்சார வாரியம் கடனில் சிக்கித் தவிப்பதால் கூடவே சூரியஒளி மின்சாரத்தை கிராமங்களுக்கு வழங்கி ஈடுகட்டுவது நல்லது.
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.-ஆர்.எஸ். நாராயணன்
First Published Inதின்மணி-: 15 March 2013 02:31 AM IST

No comments:

Post a Comment